திங்கள், 28 மே, 2012

அம்பேத்கர் கார்ட்டூனும் கருத்துரிமைக் காவலர்களும்

இம்மானுவேல் பிரபு
என்.சி.இ.ஆர்.டி. தயாரித்த 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் பற்றிய பாடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கார்ட்டூன் பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்தக் கார்ட்டூனில் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் மிக மெதுவாக நத்தை வேகத்தில் நடைபெறுகிறது என்பதைக் குறிக்கும் விதமாக ’அரசியலமைப்பு’ என்று எழுதப்பட்ட ஒரு நத்தை மீது சாட்டையுடன் அம்பேத்கர் அமர்ந்திருக்க, அவரை வேகமாகச் செல்லும்படி சாட்டையுடன் நேரு விரட்டுவதாக அமைந்துள்ளது. இருவரைச் சுற்றியுள்ள மக்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஷங்கர் பிள்ளை தனது கார்ட்டூன்ஸ் வீக்லி இதழில் 1949ல் வரைந்த அந்தக் கார்ட்டூன்,
குறிப்பிட்ட அந்தப் பாடப்புத்தகத்தில் 2006 முதலே இடம்பெற்று வந்துள்ளது. எனினும், கார்ட்டூனை எதிர்ப்பவர்கள் கண்களில் இப்போதுதான் சிக்கியுள்ளது.
மக்களவையில் இந்தப் பிரச்னையை எழுப்பியவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் தொல் திருமாவளவன்.
அந்த கார்ட்டூன் அம்பேத்கர், நேரு ஆகிய இரு தலைவர்களையும் அவமானப்படுத்துகிறது என்றதுடன் கல்வித் துறைக்கு பொறுப்பான கபில் சிபல் ராஜினாமா செய்ய வேண்டும், அந்தப் புத்தகத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். இந்தக் கார்ட்டூன் பாடப்புத்தகத்தில் இடம்பெறுவதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் வலியுறுத்தினார் மாயாவதி. லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், இதற்கு காரணமானவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றார். சி.பி.ஐ., சி.பி.எம்., அதிமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பி.ஜே.பி., தெலுங்குதேசம் போன்ற கட்சிகளும் கார்ட்டூனுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் உடனடியாக அது பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளன.
அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கார்ட்டூன் இடம்பெற்றுள்ள அந்தப் புத்தகத்தை உடனடியாக அரசு திரும்பப் பெறுவதாக மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். அந்தப் பாடப்புத்தகத்தின் விநியோகத்தை நிறுத்தி வைக்கும்படி என்.சி.இ.ஆர்.டி.க்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த கார்ட்டூனைத் தவிர ஆட்சேபகரமான பகுதி வேறு ஏதேனும் இருக்கிறாதா என்று ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு பாடப்புத்தகத்தில் அனைத்து கார்ட்டூன்களும் நீக்கப்படும் என்றும் கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தப் பாடப் புத்தக உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த, அரசியல் அறிவியல் துறையில் புகழ்பெற்ற கல்வியாளர்களான யோகேந்திர யாதவ், சுஹாஸ் பல்ஷிகார் ஆகிய இருவரும் என்.சி.இ.ஆர்.டி.யில் தாங்கள் வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். யோகேந்திர யாதவ் என்.சி.இ.ஆர்.டி. (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) பாடநூல் மேம்பாட்டு கமிட்டியின் தலைமை ஆலோசகராக உள்ளார். சுகாஸ் பால்ஷிகார் கமிட்டியின் உறுப்பினராக இருக்கிறார்.
அடுத்த நாளே என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தக உருவாக்க கமிட்டியின் தலைமை ஆலோசகர் சுஹாஸ் பல்ஷிகார் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அடுத்த நாள் புனே நகரிலுள்ள அவரது அலுவலகம் தாக்கப்பட்டது. இத்தாக்குதலுக்கு இந்திய குடியரசு கட்சியின் அத்வாலே பிரிவு பொறுப்பேற்றது. ஏப்ரல் 2ல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்திய குடியரசு கட்சியின் ஒரு பிரிவின் தலைவரான ராம்தாஸ் அதவாலே, சர்ச்சைக்குள்ளாகியுள்ள அந்தப் பாடப்புத்தகத்தின் பக்கங்களை தீயீட்டு கொளுத்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.
அவ்வளவு தான்! கருத்துச் சுதந்தரத்துக்காக குரல் கொடுப்பவர்களாகக் காட்டிக்கொள்ளும் சில அறிவுஜீவிகளும், ஆங்கில ஊடகங்களும் களத்தில் தீவிரமாக இறங்கின. அரசியல் சாசன உருவாக்கம் மெதுவாக நடைபெறுவதாக அம்பேத்கரை விமர்சிக்கும் கார்ட்டூனை நீக்கச் சொல்லி போராடுபவர்களுக்கு எதிராகச் சில ஆங்கில பத்திரிகைகளில் இன்றுவரைத் தொடர்ச்சியாக கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. ‘அரசியலை படித்தலும், படித்தலின் அரசியலும்’. ‘கார்ட்டூனுக்கு தடை விதிப்பதால் எதிர்காலத் தலைமுறைகளுக்கு எந்தப் பயனும் இல்லை’. ‘எம்.பி.க்களின் கார்ட்டூன் எதிர்ப்பு வாங்கு வங்கி அரசியலுக்காகத்தான்: தலித் சமூக ஆர்வலர்கள்’. ‘ஒரு கார்ட்டூனால் ஏன் இவ்வளவு களேபரம்?: கேட்கிறார்கள் கல்வியாளர்கள்’. ‘கார்ட்டூன் நீக்கப்பட்ட பாடப்புத்தகம் கற்றலை உயிர்ப்பற்றதாகச் செய்யும்’. ‘தணிக்கை இருந்தாலும்கூட பிரிட்டன் எப்போதுமே கார்ட்டூனை தடை செய்யாது.’ இவையெல்லாம் அவற்றின் தலைப்புகள்.
அரசியல் சாசனத்தை உருவாக்குவதை அம்பேத்கர் மெதுவாக/தாமதமாகச் செய்தார் என்று அந்த கார்ட்டூன் விமர்சிப்பதாகவும், அந்த விமர்சனம் உண்மையல்ல, இப்படிப்பட்ட கார்ட்டூன் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது, மாணவர்கள் மனத்தில் அத்தகைய எண்ணத்தை (அம்பேத்கர் அரசியல் சாசன உருவாக்கத்துக்கு அதிகக் காலம் எடுத்துக்கொண்டார்) ஏற்படுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அந்த கார்ட்டூனை நீக்க வேண்டும் என்பது தான் கார்ட்டூன் எதிர்ப்பாளர்களின் கருத்து. ஆனால், அம்பேத்கர் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்தை மறைத்துவிட்டு, கார்ட்டூன் எதிர்ப்பு என்பது கருத்துச் சுதந்தரத்துக்கு எதிரானது, தணிக்கையை ஆதரிக்கும் செயல் என்பதாக ஊடகங்கள் விவாதங்களைத் திசைத் திருப்பிவிட்டன. உடனே, ‘இந்த கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கேலிக்கூத்தாக உள்ளது. அம்பேத்கரை அவமானப்படுத்தும் விதமாக இதில் எதுவுமில்லை. அம்பேத்கர் ஒரு சுதந்தரச் சிந்தனையாளர். தணிக்கையை அவர் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார். அவர் உருவாக்கிய அரசியல் சட்டமும் தணிக்கையை அங்கீகரிக்கவில்லை’ என்றார் அரசியல் ஆய்வாளரான ஆஷிஷ் நந்தி.
‘இது மிகவும் முட்டாள்தனமானது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல் கருத்து இப்போதுள்ளவர்களின் மனத்தை எவ்வாறு புண்படுத்தும்? அரசியல் தலைவர்கள் உணர்ச்சிகளால் வழிநடத்தப்படுகிறார்கள். அதனால் தான் ஒருவரின் பார்வைக் கோணத்தைக்கூட இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.’ என்றார் மற்றொருவர். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்ற புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான கே.எம்.பணிக்கர், ‘அம்பேத்கர் கார்ட்டூன் பற்றிய நாடாளுமன்றத்தின் நிலைப்பாடு கவலை தருகிறது. அந்த கார்ட்டூன் விமர்சிப்பது மிக மெதுவாக நடைபெறுகிற அரசியலமமைப்புச் சட்ட உருவாக்கச் செயல்முறையைத் தானே தவிர அதை உருவாக்குபவர்களை அல்ல.’ என்று விளக்கவுரை அளித்தார். பணிக்கர் சொல்வது புரியவில்லையெனில் இப்படிச் சொல்லலாம்: நாங்கள் மெதுவாக ஓடுகிறது என்று குறை சொல்வது பஸ்ஸைத் தானே தவிர, அதன் ஓட்டுநர், நடத்துனரை அல்ல.
என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தக உருவாக்க கமிட்டியின் தலைமை ஆலோசகர் சுஹாஸ் பல்ஷிகாரும் பணிக்கரின் கருத்தையே பிரதிபலித்தார். அதாவது, ‘அரசியல் சாசன உருவாக்கச் செயல்முறையைதான் அந்த கார்ட்டூன் விமர்சிக்கிறது, அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களை அல்ல. எதிர்ப்பவர்கள் அந்தப் பாடத்தை முழுவதுமாகப் படித்துப்பார்க்காமல் பேசுகிறார்கள்.’
சிலர் புலன் விசாரணை செய்து வெளிப்படுத்திய விஷயங்கள் இவை. ‘அம்பேத்கரோ நேருவோ இந்த கார்ட்டூனை ஆட்சேபிக்கவில்லை. ஏ.கே. ராமானுஜத்தின் ராமாயண சர்ச்சையாக இருந்தாலும் சரி, அம்பேத்கரின் கார்ட்டூன் சர்ச்சையாக இருந்தாலும் சரி, வெகுசன அபிப்பிராயத்தின் முன் மேதைமைக்கு மதிப்பில்லை. ஜனநாயகம் என்பதெல்லாம் ஏட்டில் மட்டும் தான், எதார்த்தத்தில் அதை அனுமதிக்க முடியாது என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். 2006ல் இந்தப் புத்தகம் வந்துவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று எதிர்ப்பவர்களைக் கேட்டால் மௌனம் தான் பதிலாக இருக்கிறது.’
கற்றலை எளிதாக்குதல், சுவாரசியமாக மாற்றுதல், மாணவர்களிடம் செயல்வழிக் கற்றலை அதிகரித்தல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் என்.சி.இ.ஆர்.டி. உருவாக்கிய புதிய பாடத்திட்டத்தின்படி பாடப்புத்தகத்தில் கார்ட்டூன்கள் வைக்கப்பட்டது. ‘அரசியலமைப்புச் சட்டம்: ஏன் – எப்படி? என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ள இந்த கார்ட்டூனின் நோக்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசியல் நிர்ணய சபை ஏன் மூன்றாண்டு காலம் எடுத்துக்கொண்டது என்பதை கண்டறிவது தான் என்கின்றனர் பாடப்புத்தகம் எழுதியதில் பங்கெடுத்த அந்த இரண்டு கல்வியாளர்கள். ஒரு கேலிச் சித்திரத்தில் பொதிந்துள்ள நகைச்சுவையை ரசிக்கும் உணர்வு கார்ட்டூன் எதிர்ப்பாளர்களுக்கு இல்லை என்றும் இவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
உண்மையில் அந்த கார்ட்டூன் மாணவர்களுக்குத் தெரிவிக்க துணியும் கருத்து என்ன? இதற்கான பதில் குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தில் ஆங்கில மீடியப் புத்தகத்தின் 18ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பு இதுதான்: Cartoonist’s impression of the “snail’s pace’ with which the Constitution was made. Making of the Constitution took almost three years. Is the cartoonist commenting on this fact? Why do you think, did the Constituent Assembly take so long to make the Constitution?அரசியல் சாசன உருவாக்கம் நீண்டகாலம் (மூன்று ஆண்டுகள்) எடுத்துக்கொண்டது என்று சொல்லியே, அந்தத் தாமதத்துக்கான காரணங்களை ஆராயச் சொல்கிறார்கள். அந்தப் பாடத்தைப் படித்துப்பார்த்தால், அதில் எங்கேயும் தாமதம் என்றக் குற்றச்சாட்டு இல்லை. மிக அழகாக, அரசியல் சாசன உருவாக்கச் செயல்பாட்டை விளக்கியதுடன், அதன் தேவைகள், உருவாக்கத்தில் சந்தித்த சவால்கள் என்பதையெல்லாம் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் அந்தப் பாடப் புத்தகம் விவரித்திருந்தது. அந்தப் பாடம் முழுவதையும் படித்துப் பார்த்தாலும் சர்ச்சையாகியுள்ள கார்ட்டூன் அந்தப் பாடத்தில் இடம்பெறுவதற்கான தேவை இல்லை.
கார்ட்டூனுக்குத் தடை கோருவது கருத்துச் சுதந்தரத்துக்கு எதிரானதா? ஒரு தனிப்பட்ட படைப்பாளியின், தனிப்பட்ட படைப்புக்கு எதிராக இந்தச் சர்ச்சை உருவாகவில்லை. இது மாணவர்களுக்காக, என்.சி.இ.ஆர்.டி. என்ற அரசு அமைப்பு ஒன்று, ஆசிரியர் சிலரை பணியில் அமர்த்தி எழுதச் சொல்லப்பட்ட பாடப்புத்தகத்தில் இடம்பெறும் கருத்தைத்தான் எதிர்க்கிறது. படைப்பாளியின் கருத்துச் சுதந்தரத்துக்கு யாரும் தடை கோரவில்லையே. குறிப்பிட்ட அந்த கார்ட்டூன் உணர்த்தும் செய்தி என்ன என்பதைப் பற்றிய சர்ச்சை தானே தவிர, அதிலுள்ள நகைச்சுவையை ஆராய்வதில் உண்டான சர்ச்சையல்ல இது.
60 ஆண்டுகளுக்குப் பின்னர் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? 60 ஆண்டுகளுக்கு முன்பு சமூக, கல்வி, பொருளாதார விழிப்புணர்வு தலித்துகளிடம் மிகக் குறைவாக இருந்தது. அன்று அவர்கள் குரல் பலவீனமாக இருந்தது. ஆனால், இன்றைய நிலை வேறு. ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தலித்துகள் தங்கள் சுயகௌரவம், உரிமைகள் பாதிக்கப்படும் போது உரத்து குரல் கொடுக்கவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும், குறிக்கோளை வென்றெடுக்கும் முனைப்புடன் விளங்குகிறார்கள். அதனால் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். தவறான வரலாற்றுப் பதிவை தாமதமாக எதிர்ப்பதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?
பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் உருவாக்குவது கல்வியாளர்களின் பணி. அரசுகள் அதில் தலையிடக்கூடாது. சரியா? பள்ளி பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் உருவாக்குவதில் அரசியல்வாதிகள் தலையிடாமல். அதை கல்வியாளர்கள்,மற்றும் அறிவு ஜீவிகளிடம் விட்டுவிட வேண்டும் என்கின்றனர் கார்ட்டூனை ஆதரிப்போர். சமத்துவச் சமூகத்தை லட்சியமாகக் கொண்டிருக்கும் நாம், நமது அரசியலமைப்பும், அந்த லட்சியத்தை அடைவதற்கான பணியை எங்கிருந்து தொடங்குவது? பள்ளியிலிருந்துதானே அதைச் செய்ய முடியும். அரசு தலையிடாமல் கல்வியாளர்களிடம் விட்டுவிட வேண்டும். வகுப்பறையில் அரசியல் அதிகாரத்தின் கை நீளக்கூடாது என்று சொல்லும் இதே அறிவு ஜீவிகள் தான், முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் பாடநூல்கள் திருத்தி எழுதப்பட்டுள்ளன, என்று கூறி, அரசின் தலையீட்டைக் கோரினர். இன்று அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்.
சரி, உண்மையில் அரசியல் சாசனம் உருவாக்குவதில் அம்பேத்கர் தாமதமாகச் செயல்பாட்டாரா? இதற்கான விளக்கத்தை அம்பேத்கரின் வார்த்தைகளில் கேட்டால், கருத்துரிமைக் காவலர்கள் மறுக்க மாட்டார்கள் என்று நம்பலாம்.
‘அரசியலைமைப்பு வரைவு குழு , அரசியல் நிர்ணய சபையால் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 30ல் அது தனது முதல் கூட்டத்தை நடத்தியது. ஆகஸ்ட் 30 முதல் 141 நாள்கள் அது அமர்வில் இருந்தது. இந்தச் சமயத்தில் அது அரசியல் சாசன வரைவைத் தயாரித்தது. வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாக , அரசியல் சாசனத் தயாரிப்பு ஆலோசகர் தயாரித்து, வரைவுக்குழுவின் பணிக்கு அடிப்படையாகக் கொடுக்கப்பட்ட அரசியல் சாசனம் 243 விதிகளும் 13 அட்டவணைகளும் கொண்டிருந்தது. வரைவுக்குழு அரசியல் நிர்ணய சபைக்கு அளித்த முதலாவது சாசன வரைவில் 315 விதிகளும் 8 அட்டவணைகளும் இருந்தன. பரிசீலனைக் கட்டத்துக்கு பிறகு அரசியல் சாசன வரைவில் அடங்கியிருந்த விதிகளின் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது. இறுதி வடிவத்தில், அரசியல் சாசன வரைவு 395 விதிகளையும் 8 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. அரசியல் சாசன வரைவுக்குழு முன் சுமார் 7635 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் 2475 மட்டும் ஆய்வுக்கு உகந்ததாக எடுத்துகொள்ளப்பட்டு, அவற்றின் மீது முடிவுகள் எடுக்கப்பட்டன.
பிற நாடுகளின் அரசியல் சாசனம் தயாரிக்க ஆன காலத்தைச் சற்று ஒப்பிட்டுப் பார்க்கலாம். 1787 மே 25ல் கூடிய அமெரிக்க கன்வென்ஷன் தன் பணியை 1787 செப்டம்பர் 17ல், அதாவது நான்கு மாதத்தில் முடித்தது. கனடா நாட்டு அரசிய சாசன அமைப்பு கன்வென்ஷன் 1864 அக்டோபர் 10ல் கூடியது. 1867 மார்ச்சில் அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு இரண்டு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் தேவைப்பட்டது. ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசன அவை 1891 மார்ச்சில் கூடியது. 1900 ஜுலை 9ல் அரசியல் சாசனைத்தை உருவாக்கி முடித்தது. இதற்கு 9 ஆண்டுகள் தேவைப்பட்டது. தென் ஆப்பிரிக்க கன்வென்ஷன் 1908 அக்டோபரில் கூடியது. 1909 செப்டெம்பர் 20ல் அரசியல் சாசனம் நிறைவேற்றியது. இதற்கு ஓராண்டு உழைப்புத் தேவைப்பட்டது.
‘அமெரிக்கா, தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத் தயாரிப்பு அமைப்புகளைவிட நமது நிர்ணய சபை அதிகக் காலம் எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால், கனடா கன்வென்ஷனைவிட அதிகக் காலம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா கன்வென்ஷனைவிடக் குறைவாகவே எடுத்துக்கொண்டது. கால அளவை ஒப்பிடும்போது இரண்டு விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியல் சாசனங்கள் இந்திய அரசியல் சாசனத்தைவிட மிகச் சிறியவை. இந்திய அரசியல் சாசனத்தில் 395 விதிகள் உள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7 விதிகள் மட்டுமே உள்ளன. முதல் நான்கு விதிகள் 21 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கனடா நாட்டு அரசியல் சாசனத்தில் 147 பிரிவுகளும், ஆஸ்திரேலியா சாசனத்தில் 128 பிரிவுகளும், தென் ஆப்பிரிக்கா அரசியல் சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன. இரண்டாவது விஷயம் என்னவென்றால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புச் சாசனங்களை உருவாக்கியவர்கள், திருத்தங்கள் சம்பந்தமான பிரச்னையைச் சந்திக்க வேண்டியிருக்கவில்லை. முன்மொழியப்பட்ட வடிவத்திலேயே அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் இந்திய அரசியல் நிர்ணய சபை 2473 திருத்தங்கள் வரை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த உண்மைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டுப் பார்த்தால், அரசியல் நிர்ணய சபை தாமதமாகச் செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. இவ்வளவு கடினமான பணியை இவ்வளவு விரைவில் நிறைவேற்றியதற்காக அரசியல் நிர்ணய சபை நிச்சயமாகத் தன்னைப் பாராட்டிக் கொள்ளலாம்.’
அம்பேத்கரே இந்தக் கார்ட்டூனை எதிர்த்திருக்கமாட்டார் என்று சொல்பவர்கள் அம்பேத்கரே அளித்த இந்த விளக்கத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? ஒரு பக்கம், கார்ட்டூன் உணர்த்தும் செய்தி. இன்னொரு பக்கம், அம்பேத்கர் அளித்த விளக்கம். இந்த இரண்டில் எதை கருத்துக் காவலர்கள் தேர்ந்தெடுப்பார்கள்? இரண்டில் எது பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கவேண்டும்? இரண்டில் எதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்? இரண்டில் எது நமக்கு இன்றும் பலனளிக்கக்கூடியது? இரண்டில் எது ஏற்கக்கூடியது?
இந்த எளிய உண்மையைச் சுட்டிக்காட்டினால், கார்ட்டூனைப் புரிந்துகொள்ளத் தெரியாதவர்கள், நகைச்சுவை உணர்வு அற்றவர்கள், கருத்து சுதந்தரத்துக்கு எதிரானவர்கள், புனித பிம்பத்தைக் கட்டமைப்பவர்கள் என்று பல்வேறு பெயர்கள் பரிசளிக்கப்படுகின்றன. இது பிரச்னையைத் திசைதிருப்பும் உத்தி மட்டுமே.
மற்றபடி, அம்பேத்கர் நிச்சயம் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். அவருக்குப் புனித பிம்பம் தேவையில்லை. அவர் முன்வைத்த கருத்துகள், அவரது அரசியல், சமூக, பொருளாதாரப் பார்வை, அவர் முன்வைத்த விழுமியங்கள் தொடங்கி, எதுவொன்றையும் யாரும் விமரிசிக்கலாம். அவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் உள்பட.
0
இம்மானுவேல் பிரபு

கருத்துகள் இல்லை: