ஹாய் மதன் கேள்வி – பதிலுக்கு வந்த கேள்வியும் அதற்கு மதன் அளித்திருக்கும் பதிலும் இந்த பாரதப்போரின் துவக்கம்.
ஹாய் மதன் கேள்வியும் – பதிலும்:
க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.
உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?
*
ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு ‘எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் (‘பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. ‘நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
மேற்கண்ட கேள்வி – பதில் வெளியானதைத் தொடர்ந்து, அதில் இடம் பெற்ற படத்துக்கு (ஜெயாவில் காலில் விழுவது) எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் அனுப்பியுள்ள கடிதம்…
…பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும்
‘ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது
தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் – வரலாறு,
விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட
கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும்
நான் அநேகமாகத் தொடுவதில்லை.
2.5.2012 இதழில் ‘காலில் விழுந்து
வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி
மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு
பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக
முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம்
வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும்
வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப்
பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!
ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம்
செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன்
பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள
மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால்,
‘அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை
விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா?
முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியொரு
பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள்
சிந்திக்க வேண்டும்.
முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ
சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட்
கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம்
தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று
சிந்திக்க வேண்டுகிறேன்.
…வரும் இதழிலேயே ‘புகைப்படங்கள், லே –
அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம்
காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான்
உறுதியாக நம்புகிறேன்.
- மதன்
இதற்கு விகடன் நிர்வாகம் அளித்திருக்கும் பதில்:
மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக்
கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும்
அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
‘ஹாய் மதன்’ பகுதியில் வாசகர்கள் கேட்ட
கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத – அதே
சமயம், அந்தக் கேள்வி – பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும்
சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்
குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும்
ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.
அதேபோல், ‘இது பொது அறிவுப் பகுதி மட்டுமே’
என்று இப்போது மதன் குறிப்பிடும் ‘ஹாய் மதன்’ பகுதியில் அரசியல் மற்றும்
சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல்
அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன்
நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே
உள்ளது.
இதையெல்லாம் பார்க்கும்போது… தற்போது அவர்
இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல…
கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது
என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய
நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு… செய்திகளையும்
கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய
துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.
எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி
– பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர்
____________________________________________________உச்சியிலிருக்கும் நட்சத்திரங்கள் மின்னும் போது இப்படி நினைத்திருக்குமா? தாங்கள் மண்ணில் விழுந்து மங்கும் போது துயரமும், அடிமைத்தனமும், கலந்து நகைப்புக்குரியவர்களாக மாறுவோமென்று! நட்சத்திரங்களின் இறுதிக் காலத்தை வரலாறு இப்படித்தான் பதிவு செய்திருக்கின்றது. விகடனிலிருந்து மதன் நீக்கப்பட்டது அப்படித்தான் காமடியும், கண்ணீருமாய் முடிந்திருக்கிறது.
ஹாய் மதன் கேள்வி – பதிலுக்காக வந்த இந்தக் கேள்வி “எப்.எம்.ரேடியோவில் மனிதர்கள் மட்டும் கடி ஜோக்குகள் சொல்கிறார்களே, விலங்குகள் சொல்வதில்லையே” என்று கேட்பதற்கு ஒப்பானது. இவ்வளவு ஆண்டுகளாக இத்தகைய பயங்கரமான பகுத்தறிவு தேடல்தான் ஆனந்த விகடன் உருவாக்கியிருக்கும் தரம். வழக்கமான பாணியில் மதனும் ஆதிகால மனிதனினது பயம் என்றெல்லாம் ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட சலித்துக் கொள்ளும் வகையில் ஒரு பதிலைப் போடுகிறார். இதற்கு சுவாரசியம் கூட்டவோ இல்லை மதனை காமடி செய்து அழவைக்கவோ ஒரு அ.தி.மு.க அடிமை ஜெயா காலில் விழும் படத்தை போடுகிறார்கள்.
இது வடிவமைப்பாளர் சுதந்திரமாக செய்த ஒன்றா, இல்லை எடிட்டோரியல் பொறுப்பாளர் திட்டமிட்டு செய்த ஒன்றா என்று எப்படி கண்டுபிடிப்பது? விசாரணைக் கமிஷன் போட்டு கண்டுபிடிக்க வேண்டிய மர்மம் போலத் தோன்றினாலும் பொதுவில் தமிழக பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் பிரபலங்கள் விரும்பாதவற்றை, பிரச்சினைக்குரியவை என்று கருதுபவற்றை, அவர்களது தொழில்சார்ந்த தர்மசங்கடங்களை எல்லாம் சுயதணிக்கை செய்து தவிர்த்து விடுவார்கள். ஒரு நேர்காணலில் கூட அத்தகைய எடக்கு மடக்கு கேள்விகள் எல்லாம் கேட்கமாட்டார்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணுடைய இலட்சணம் இதுவென்றால் இதில் கொட்டை போட்டவர்கள்தான் மதனும், விகடன் பத்திரிகையும். ஆக, ஜெயா டி.வியில் சினிமா விமரிசனம் என்ற பெயரில் மதன் மொக்கை போட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு இது ‘நெருடலை’ ஏற்படுத்தும் என்பது இத்தகைய நெருடல்களை அறவே செய்யாத காரியக் குன்று விகடனுக்கும் தெரிந்திருக்கும். அதே நேரம் காலில் விழும் படங்களையெல்லாம் ஜெயா பெருமையாகவே எடுத்துக் கொள்வார் என்று பொதுவாக யாரும் கணிக்க முடியும். அந்தப் படிக்கு இது வடிவமைப்பாளர் போகிற போக்கில் செய்ததாகவும் இருக்கலாம். மதனது உப்புச் சப்பற்ற பதிலை இந்த படமாவது கொஞ்சம் சூடாக்கட்டும் என்று ‘நல்ல’ விதமாகக் கூட அவர்கள் யோசித்திருக்கலாம்.
இப்படியாக ஒரு படமோ, இல்லை வடிவமைப்போ போகிற போக்கில் ஒரு அறிவாளியின் வரலாற்றை புரட்டி போடுகின்ற தகுதியைப் பெற்றுவிட்டது. கேள்வி பதில் வெளியான பிறகு மதன் அளித்திருக்கும் பதில்தான் மிகவும் முக்கியமானது. அதனாலேயே விழுந்து விழுந்து சிரிப்பதற்குரியது.
அவருக்கு வரும் கேள்விகள் மருத்துவம், விலங்கியல் போன்று துறை சார்ந்து மட்டும் வருமாம். அரசியல், சினிமா கேள்விகளை தவிர்த்து விடுவாராம். அதுவும் இந்த காலில் விழும் கேள்வி ‘ஆந்தரபாலஜி’ சம்பந்தப்பட்டதாம். இதுதான் மனித இயல் குறித்த கேள்வி என்றால் காலில் விழுவது என்ன, ஒட்டு மொத்த மனித குலமே கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளலாம்.
ஜெயா காலில் விழும் அடிமைகளாவது ஒரிரு கணங்கள் மட்டும்தான் அப்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் மதன் போன்ற அறிவாளி அடிமைகளோ தங்களது முழு மூளையையும் பாசிச ஜெயாவுக்கு தாரை வார்த்திருக்கிறார்கள். அதன்படி மனித குலம் ஏன் காலில் விழுகிறது என்ற வெட்டி ஆராய்ச்சியை விட இந்த அறிவாளிகள் கூச்ச நாச்சமில்லாமல் எப்படி முழு அடிமைகளாக மாறிவிட்டார்கள் என்பதுதான் ஆய்வுக்குரியது.
அந்த வகையில் மதனது பதிலை விட அவரது நடத்தைதான் அந்த கேள்விக்கு மிக பொருத்தம். காலில் விழுவது என்ற நடத்தை எதன் பொருட்டு எள்ளி நகையாடப்பட்டதோ அதன் அறிவு சாட்சியமாக மதன் விளங்குகிறார். ஜெயா டி.வியில் அவர் சினிமா விமரிசனம் செய்வதாகவே இருக்கட்டும். அதனால் என்ன? அது ஏன் விகடன் கேள்வி பதிலுக்கு செல்வாக்கு செலுத்தும் தணிக்கையாக இருக்க வேண்டும்? இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மதன் எப்படி வாழ்வார் என்று கற்பனை செய்து பாருங்கள். சன், கலைஞர் செய்திகளை பார்க்க மாட்டார், ஜெயா குறித்த ஊடக விமரிசனங்களை படிக்க மாட்டார்; அப்படி பார்த்து படித்து அதை யாராவது ஜெயா டி.வி ஊழியர் மேலிடத்தில் சொல்லி விட்டால் என்ன ஆகும்? நாயினும் இழிவான பிழைப்பில்லையா இது?
ஒரு வேளை இத்தகைய சுதந்திரத்தை தாரை வார்த்து விட்டுத்தான் ஜெயா டி.வியில் மொக்கை போட முடியுமென்றால் அதை தூக்கி ஏறிய வேண்டியதுதானே? ஆனால் மதன் அப்படி செய்ய முடியாது. ஊடக உலகமே அப்படித்தான் முழு அடிமைத்தனத்துடன் இயங்கி வருகிறது. எனில் இத்தகைய அறிவாளிகள் தங்களது படத்திற்கு முன்னால் இன்னாருக்கு அடிமையாக விதிக்கப்பட்ட என்ற அடை மொழியை சேர்த்துக் கொள்ளலாமே? எதற்கு கார்ட்டூனிஸ்ட் அல்லது பத்திரிகையாளர் என்ற பட்டம்?
காலணா பெறாத இந்த விசயத்தை வைத்து அவர் எவ்வளவு தூரம் அடிமைத்தனத்தை காண்பிக்கிறார் பாருங்கள். இதை விளக்குவதற்காக அவர் பிசியாக இருக்கும் ஜெயாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி சொல்ல வேண்டுமாம். அ.தி.மு.க தொண்டன் கூட அம்மா அம்மா என்றுதான் உருகுவார். ஆனால் இந்த அடிமையோ ஜெயா பேரைச் சொன்னால் சிறுநீரே கழித்து விடுவார், அவ்வளவு பயம்.
அடுத்த இதழில், “இந்த லே அவுட்டுக்கும் மதனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என்று போட வேண்டும் எனுமளவுக்கு அவரது அடிமை புத்தி தாண்டவமாடுகிறது. இதற்கு சரியான பொழிப்புரை என்னவென்றால், ” நான் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் பற்றி கனவிலும், நனவிலும், சிறுநீர் கழிக்கும் நேரத்திலும், எண்ணத்திலும், எழுத்திலும், வீடியோவிலும், பெருமாளை சேவிக்கும் கணத்திலும், கடுகளவு கூட தவறாக நினைத்ததில்லை, இது என் தாய், மனைவி, குழந்தைகள் மீது சத்தியம்”. இந்த படப் பிரச்சினையில் மதன் எத்தனை நாட்கள் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு அழுதிருப்பார் என்று இப்போதாவது புரிகிறதா?
0-0-0-0-0-0-0-0-0
பாலசுப்ரமணியனது வாரிசு சீனிவாசன் விகடன் சொத்துக்கு பொறுப்பேற்றுக் கொண்ட போது மதன்தான் அந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய வகையில் முக்கியமான ஆளாக இருந்தார். அதன் போக்கில் சொத்தை வைத்திருக்கும் முதலாளிக்கும், புகழை பெற்றிருக்கும் ‘படைப்பாளிக்கும்’ முரண்பாடு தோன்றுகிறது. ஆசிரியர் பொறுப்பிலிருந்து மதன் வெளியேற்றப்படுகிறார். ஒரே அடியாக நீக்கினால் இருவருக்கும் போக்கிடமில்லை என்பதால் மதனது கார்ட்டூன், கேள்வி பதில்கள் மட்டும் வருகின்றன. தற்போது மதனது பங்கு விகடனுக்கு தேவையில்லை என்ற நேரத்தில் இந்த படப்பிரச்சினை உதவியால் நீக்கப்படுகிறார்.
ஒருவேளை மதன் இந்தப் பிரச்சினைக்காக தொலைபேசியில் கூப்பிட்டு, ” என்ன சீனிவாசன் தம்பி, கொஞ்சம் பாத்து செய்யப்பிடாதோ” என்று பணிவாக கோரியிருந்தால் இந்த விலகல் இவ்வளவு தூரம் வந்திருக்காதோ என்னமோ. மதனோ தனது விளக்கத்தை குறிப்பாக லே அவுட்டுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்பதை வெளியிடுமாறு உத்தரவிட்டிருந்தார். சீனிவாசனை விட ஜெயாதான் அவருக்கு பெரிய கடவுள் என்பதால் இந்த தோரணை. சீனிவாசனைப் பொறுத்தவரை நமது சொத்தால் பிழைப்பவனுக்கு இவ்வளவு அகங்காரமா என்று யோசித்திருக்க கூடும். கூடவே மதனுடைய மொக்கை கேள்வி பதிலுக்கு இனிமேலும் மதிப்பில்லை என்ற உண்மையும் சேர்ந்திருக்கும்.
இப்படி இரண்டு அம்பிகள் அடித்துக் கொண்டதை ஏதோ மாபெரும் நேர்மை, நடுநிலைமைக்கான போராட்டமாக விகடன் நிறுவனம் சித்தரிப்பதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவர்களும் ஜெயாவின் ஜால்ராதான் என்பதற்கு 30.5.2012 ஆனந்த விகடன் தலையங்கத்தை (விளம்பர சாமரங்கள்) படித்து பாருங்கள். அதில் ஜெயாவின் ஒராண்டு சாதனை விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட தொகையே சாதனைதான் என்று ஆரம்பிக்கிறார்கள். மக்கள் பணத்தை இப்படி வெட்டித்தனமாக செலவிடுவது குறித்து ஒரு மென்மையான விமரிசனம் கூட அதில் இல்லை.
அடுத்து அந்த விளம்பரங்களில் எரி சக்தித் துறையின் விளம்பரத்தை வைத்து மட்டும் விமரிசிக்கிறார்கள். எரி சக்தி துறை கொடுத்திருக்கும் புள்ளி விவரங்கள் மூலம் தமிழகம் மின் உற்பத்தியில் உபரியை வைத்திருக்கும் மாநிலம் என்பது போல திருப்தி பட்டுக்கொள்கிறார்களாம். இப்படித்தான் முதலமைச்சருக்கு தவறான தகவல்களை கொடுத்து, கூடவே புகழ்ந்து போற்றுகிறார்களாம். இதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டுமாம்.
இந்த தலையங்கத்தில் ஜெயாவை கண்டித்தோ, விமரிசனம் செய்தோ எதுவுமில்லை. விமரிசனமெல்லாம் ஒரு அ.தி.மு.க அடிமை அமைச்சர் மீதுதான். ஆள்வதிலோ, நிர்வாகத்திலோ, மக்கள் நலனிலோ கிஞ்சித்தும் அக்கறையற்ற ஒரு பாசிஸ்ட்டை கண்டிப்பதற்கு கூட வக்கற்ற, தைரியமற்ற ஆனந்த விகடன் எதற்காக மதனை நீக்கியது? மதனது விளக்கத்திலும் சரி, ஆனந்த விகடன் தலையங்கத்திலும் சரி நீக்கமற நிறைந்திருப்பது பாசிச ஜெயா மீதான அடிமைத்தனம்தானே? அடிமைகளில் வீரமான அடிமை, கோழையான அடிமை என்ற வேறுபாடுகள் எப்படி இருக்க முடியும்?
இதற்கு மேல் மாறன் சகோதரர்களோடு தொலைக்காட்சி சீரியல், சினிமா உள்ளிட்டு பல வகை வியாபார தொடர்புகள் உள்ள விகடன் நிறுவனம் அவர்களைப் பற்றி எந்த விமரிசனமும் வராமல் பார்த்துக் கொள்ளும். அப்படி வெளிவரும் விசயங்களும் கூட ஊரறிந்த விசயமாக இருக்கும். இப்படி தொழிலுக்கு பங்கம் வராமல் பத்திரிகை நடத்தும் விகடன் நிறுவனத்தைப் போல மதனும் தனது தொழிலுக்கு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள விரும்பியதில் என்ன தப்பு?
ஆள்வோருக்கும், அதிகாரத்தில் உள்ளோருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டும் என்பதில் நெடுங்காலமாகவே தமிழ் பத்திரிகைகள் பீடை நடை போடுகின்றன. அதில் தலைமை இடத்தை வகிக்கும் பத்திரிகைகள் விகடனும், குமுதமும். அதிலும் அரசியலையே கிசு கிசுவாக, குற்றச் செய்திகளை பாலுறவு வக்கிரமாக படிக்க வைப்பதில் சாதனை படைத்த ஜூனியர் விகடனை வடிவமைத்து நடமாட விட்டதில் மதனுடைய பங்கு முக்கியமானது. குறிப்பாக அரசியல் செய்திகளை கொள்கை, மக்கள் நலன் சார்ந்து பார்க்கக் கூடாது என்று விகடன் குழுமத்தை பயிற்றுவித்தவரில் மதன் முக்கியமானவர். அவரது பள்ளியில் படித்தோர்தான் இன்று விகடன் குழுமத்தில் முக்கிய பணியில் உள்ளனர்.
மேலும் கார்ட்டூன்களை கூட அரசியல் கூர்மையை ரத்து செய்து, ஆபத்தில்லாத, யாருக்கும் தீங்கிழைக்காத ‘நல்ல’ கார்ட்டூன்களை போட்டு முன்னுதாரணம் படைத்தவர் மதன். மறைந்த உதயனது கார்ட்டூன்களைப் பார்க்கும் போது மதனுடைய கார்ட்டூன்கள் ”டம்மி பீஸ்” களாகத்தான் தோன்றும் . இது போக அவருடைய கேள்வி பதிலெல்லாம் என்சைக்ளோப்பீடியாவை சுட்டு எழுதப்படும் தேவையற்ற மொக்கைகள்தான். இன்று இணையம், விக்கிபீடியா பரவிவரும் நிலையில் மதனுடைய அந்த சுட்ட பழங்களுக்கு மதிப்பில்லை.
இந்தப் பிரச்சினையில் இருவரையும் விமரசிப்பதை விடுத்து பலரும் ஒரு தரப்பை மட்டும் கண்டிக்கிறார்கள். சவுக்கு சங்கர் போன்றவர்கள் கூட விகடனது பொய்யான நடுநிலைமையை அம்பலப்படுத்தி விட்டு மதன் நல்லவர், எந்த ஊழலும் செய்யாதவர் என்று பாராட்டுகிறார்கள். ஒருவர் ஊழல் செய்தார், செய்யவில்லை என்பதை எப்படி முடிவு செய்வது? ரபி பெர்னார்டு, மாலன், மதன் போன்றவர்களெல்லாம் ‘ஊழல்’ செய்து சொத்து சேர்க்காதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சேர்த்திருக்கும் சொத்தும், செய்து வரும் தொழிலும் நிச்சயமாக ‘ஊழல்’தான்.
மதனுக்கு ஜெயா டீ.வியில் கிடைத்திருக்கும் சினிமா விமரிசன வாய்ப்பு மூலம் அவருக்கு பல ஆயிரங்கள் சன்மானமாக கிடைக்கிறது. பதிலுக்கு அவர் பாசிச ஜெயாவைப் பற்றி எங்கேயும் எப்போதும் விமரிசிக்க கூடாது. இது ஊழல் இல்லையா? இப்படித்தானே ரபி பெர்னார்டுக்கு ராஜ்ஜிய சபா பதவி கிடைத்தது? நாளைக்கே மதனுக்கும் மாலனுக்கும் கிடைக்கலாமே?
தமிழ் பத்திரிகைகள் மூலம் சாதிக்கலாம் என்று மனப்பால் குடிக்கும் நல்ல எண்ணமுடைய பத்திரிகையாளர்கள் இந்த பிரச்சினையைப் பார்த்தாவது மனந்திருந்தட்டும். ஊடகங்களில் பணி புரிவது வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் இருக்கட்டும். அரசியலை பயின்று கொள்வதோ, மக்களுக்கு பணி செய்வதோ எங்களுடன் இருக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக