புதன், 30 மே, 2012

வாலியிடம் நியாயம் கேட்ட அப்துல் ரகுமான்!

எம்.ஜி.ஆர் யாருக்கு வீடு கொடுத்திருப்பார்?
வாலியிடம் நியாயம் கேட்ட அப்துல் ரகுமான்!

    அம்மி கல் குத்துவதற்கு சிற்பி எதற்கு என்று சொல்லி சினிமாவில் பாடல் எழுத மாட்டேன் என்ற உறுதியோடு இருப்பவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.  இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் அழைத்தும் அந்த வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். 
ஒரு சிற்பியே அம்மியை செதுக்கினால் அது சிறந்த சிற்பமாக இருக்காதா என்று பலர் கேட்டபோது, அது சிற்பமாக இருக்குமே தவிர அதில் மாவரைக்க முடியாது என்று வேடிக்கையாக பதில்  சொன்னார் அப்துல் ரகுமான்.



கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய தேவகானம் நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (26.05.2012) அன்று சென்னை தேவநேய பாவாணார் அரங்கத்தில் நடந்து. இதில் அப்துல் ரகுமான் பேசும்போது ஒரு சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசும்போது, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்’ என்பது சமீபத்திய பிரபலமான சினிமா பாடல். இதை எழுதியவர் நா.முத்துக்குமார். இது பற்றி கவிஞர் வாலி எழுதியக் கட்டுரையில், நா.முத்துக்குமார் இந்த பாடல் வரியை எம்.ஜி.ஆர் இருக்கும் போது எழுதி இருந்தால். எம்.ஜி.ஆர் அவருக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்திருப்பார் என்று நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளை பாராட்டி எழுதி இருந்தார். 

இதை பார்த்த அடுத்த நாள் நான் எழுதிய ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ கவிதை புத்தகத்தை எடுத்துக் கொண்டு வாலியின் வீட்டிற்கே சென்றேன். கவிதை புத்தகத்தை வாலியிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். அந்த புத்தகத்தில் அந்தக் கவிதை இருந்தது. வாலி ஆச்சரியத்தோடு ‘இது உங்களோட கவிதையா?’ என்று கேட்டார். அதற்கு நான், இப்ப சொல்லுங்க எம்.ஜி.ஆர் யாருக்கு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டேன் என்றார். 

தொடர்ந்து பேசிய அப்துல் ரகுமான், நான் சினிமாவில் பாடல் எழுதவில்லை என்றாலும், நான் எழுதிய பல கவிதைகளை பலபேர் எடுத்து சினிமா பாடலில் பயன்படுத்தி காசு சம்பாதித்து வருகிறார்கள். ஒரு கவிஞர் இல்லை, பல பேர் அதை செய்கிறார்கள். 

அதையே படத்திற்கு தலைப்பாகவும் வைத்துவிட்டார்கள். அதற்கான காப்புரிமை கேட்டு வழக்கு போட்டால், பல லட்சங்கள் கிடைக்கும். அப்படியெல்லாம் நான் செய்வது இல்லை. எப்படியோ என் கருத்து பரவட்டுமே என்று விட்டுவிட்டேன். அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று பெருந்தன்மையோடு பேசினார்.  

ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகளை பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களும் கிடைத்தது,  

அன்பர்களே! காதல் என்பது
விளையாட்டல்ல...
அது கண்ணாடியும் கல்லும்
சந்தித்துக் கொள்வது! என்ற கவிதை உருதுக் கவிஞர் ஜிகர் முராதாபாதியின் கஸல்களில் இடம்பெற்ற கவிதை.



ஜிகரின் இக்கவிதையின் பாதிப்புதான் அப்துல் ரகுமான் எழுதிய மின்மினிகளால் ஒரு கடிதம் புத்தகத்தில் இடம்பெற்ற கவிதை என்றும் சொல்லலாம். 

காதல் என்பது
கல்லும் 
கண்ணாடியும் 
ஆடும் ஆட்டம்! என்பதே அந்தக் கவிதை.

பிறகு ‘சிவா மனசுல சக்தி’ திரைப்பாடலில் இது பல்லவியாகவே வந்து பிரபலமானது. அதை எழுதியவர் நா.முத்துகுமார்

ஒரு கல்
ஒரு கண்ணாடி 
உடையாமல் மோதிக்கொண்டால்
காதல்! என்பதே நா.முத்துக்குமாரின் வரிகள்.

இதே வரிகள் ஒரு படத்தின் தலைப்பாகவும் வைக்கப்பட்டது.ஒரே கருத்து தான். ஆனால் வேறு வேறு வடிவங்களோடு இருக்கின்றன. நியாயமாக வீடு யாருக்கு கிடைத்திருக்க வேண்டும்? உருதுக் கவிஞர் ஜிகருக்குத்தானே!

கருத்துகள் இல்லை: