வெள்ளி, 1 ஜூன், 2012

INDIA உலகத்தரம் வாய்ந்த ராணுவ / நாடாளுமன்ற சேவை


இந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு நல்ல, விரிவான யோசனையை பத்ரி சேஷாத்ரி அளித்திருக்கிறார் – படிப்படியான தனியார்மயமாக்கல். ரயில்வேயில் உள்ள ஊழலை ஒழிக்கவும், லாபம் கொழிக்கும் நிறுவனமான அதை மாற்றியமைக்கவும் ‘உலகத் தரம் வாய்ந்த ரயில்வே சேவை நமக்குக் கிடைக்கவும்’ இந்தத் திட்டம் பயன்படும் என்பது பத்ரியின் நம்பிக்கை. அவர் பாணியிலேயே சிந்தித்தபோது, மேலும் சில திட்டங்கள் உதயமாயின. ரயில்வே துறையை உடைத்த கையோடு இவற்றையும் அமல்படுத்தினால், கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும்.
1. இந்திய ராணுவத்தை உடைக்கவேண்டும்
இந்திய ராணுவத்தின் தரம் மோசமாக இருக்கிறது. சமீபத்தில் மீடியாவில் கசிந்த வி.கே. சிங் கடிதத்தின்படி பார்த்தால், இந்திய ராணுவம் இன்னொரு டி.என்.ஈ.பி. யாக மாறிவிட்டது. பீரங்கி இல்லை, ரவை இல்லை, விமானம் இல்லை என்று தொட்டதற்கெல்லாம் ஷார்டேஷ் கணக்கு வாசிக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக இந்திய ராணுவத்தை அரசாங்கம்தான் நடத்தவேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறார்கள்.  இதை உடனடியாக மாற்றவேண்டும். இந்திய அரசியல்வாதிகளை நம்பமுடியாது.
ராணுவத்துக்காக அவர்கள் ஒதுக்கும் பட்ஜெட் போதுமானதாக இல்லை.  இந்தத் துறை ஏ.கே. ஆண்டனி போன்றவர்களின் கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மாட்டி சிக்கித் தவிக்கிறது. ஆயுதங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கா. தென்னகத்துக்கு 100 போர் விமானங்கள் அதிகம் வேண்டும் என்றால் அது நடக்காது. பட்ஜெட்டில் 10 விமானங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலே அதிகம்.
மேலும், பாதுகாப்பு பற்றிய கவலையே யாருக்கும் இல்லை. அதைவிட மோசம், இந்திய ராணுவம் லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக இல்லை.  இதையும்விட மோசம், ராணுவத்தை லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாற்ற இயலும் என்பதையே இங்குள்ள அரசியல்வாதிகள் நம்ப மறுக்கிறார்கள். நிஜமாகவே, ராணுவத்தால் மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்றால் கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்தாகவேண்டும்.
1. ராணுவத்தின் வசமிருந்த அத்தனை சொத்துகளையும் (மேன் பவர், தளவாடங்கங்கள் அனைத்தும்) ஒரு கம்பெனிக்கு மாற்றவேண்டும். அந்த கம்பெனியின் 100% பங்குகள் ஆரம்பத்தில் மத்திய அரசிடம் இருக்கும்.  பிறகு, டெண்டர் விட்டு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்னும் அடிப்படையில், ஒவ்வொரு துறையாக தனியார்வசம் அளிக்கலாம். 99 வருட லீசுக்குக் கொடுப்பதும் நல்ல ஐடியா. பீரியாடிகலாக ஆடிட் செய்து ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கின்றவனா என்று ஆராயலாம்.
2. ராணுவத்தைத் துண்டு துண்டாக, பல கம்பெனிகளாக பிரிக்கவேண்டும்.  ஆள் எடுப்பதற்கு ஒரு நிறுவனம். ட்ரெய்னிங் அளிப்பதற்கு ஒரு நிறுவனம். ஆயுதங்களுக்கு ஒன்று. எங்கே, யாருடன் போர் புரியலாம் என்பதை ஆராய ஒரு நிறுவனம். போர் நடத்த ஒரு நிறுவனம். இன்னபிற.
3. ராணுவத்தில் ஆள்குறைப்பு செய்யவேண்டும். அரசின் தேவைகளுக்கு ஏற்ப என்றில்லாமல், முதலாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப ராணுவம் இயங்கவேண்டும். சீன முதலாளிகள், பாகிஸ்தான் முதலாளிகள் உள்பட பிற நாட்டு முதலாளிகளோடு நட்புறவு கொள்ளவே இந்திய முதலாளிகள் விரும்புவார்கள் என்பதால் அநாவசியமாக போர் அச்சுறுத்தல் இருக்காது. எல்லைகளுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெரும்பகுதி ஆள்களை வீட்டுக்கு அனுப்பிவிடலாம். நஷ்டம் குறையும்.
4. தொழில் / லாப அபிவிருத்திக்குப் பங்கம் ஏற்படும்போது ராணுவம் இந்திய முதலாளிகளால் பயன்படுத்திக்கொள்ளப்படும். இந்தப் பங்கம் உள்நாட்டில் இருந்து வந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்து வந்தாலும் சரி. உதாரணத்துக்கு, கனிம வளங்களை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாக ஆதிவாசிகள் முழங்கினால் அவர்கள்மீது போர் தொடுக்கப்படும். லாபத்துக்கு எப்போது, யாரால் தடை வந்தால் அப்போது, அவர்மீது போர்.
5. முதலாளிகள் தங்கள் தேவைக்காக ராணுவத்தை உபயோகித்துக்கொள்ளும் ஒவ்வொருமுறையும் குறிப்பிட்ட அளவு கட்டணத்தைச் செலுத்தவேண்டும். வெளிநாட்டு தேவைகளுக்குக் கூடுதல் கட்டணம், கூடுதல் வரி.
2. நாடாளுமன்றத்தை உடைக்கவேண்டும்
பணத்துக்கு ஓட்டு, ஓட்டுக்குப் பணம் என்று சீரழிந்து கிடக்கிறது இந்திய நாடாளுமன்றம். இது தேசிய அவமானம். எனவே, நாடாளுமன்றத்தை உடைத்து தனியார்களுக்கு அளிக்கவேண்டும்.
1. மக்களவை, மாநிலங்களை இரண்டும் டாடா, பிர்லா போன்ற பெரும் நிறுவனங்களுக்கு உடனடியாக விற்கப்படவேண்டும்.  கட்சிகள் பொது ஏலத்துக்கு விடப்படவேண்டும். சிறு முதலாளிகள் அல்லது தொழில்முனைவோர் இவற்றை வாங்க ஊக்குவிக்கப்படுவர்.
2. ஏதாவதொரு துறையில் பெரும் லாபம் ஈட்டிக்கொடுத்த CEOக்களே பிரதம மந்திரி, குடியரசுத் தலைவர், முதலமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கமுடியும். தேர்தல்களை ஒரு கமிட்டி நடுநிலையுடன் நடத்தும். இந்தக் கமிட்டிக்குத் தனியார் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் செய்யும்.
3. சும்மா வெட்டியாக வந்து பேசி, பொழுதைப் போக்குவதற்கான களமாக நாடாளுமன்றம் இருக்காது. ஒவ்வொருமுறை அவை கூடும்போதும், ஏதாவதொரு அரசுத் துறையை உடைக்கவேண்டும்.  அதன்மூலம் லாபம் ஈட்டவேண்டும். (உடைக்க வேண்டிய பொதுத் துறைகளின் பட்டியல் இங்கே இருக்கிறது. இவ்வளவா என்று ஆயாசம் கொள்ளவேண்டாம். உற்சாகத்துடன் செயல்பட்டால் எதுவும் முடியும் என்கிறார் நமது ரோல் மாடல் ராக்ஃபெல்லர்).
4. நாடாளுமன்றத்துக்கு சப்போர்டாக ராணுவமும், ராணுவத்துக்கு சப்போர்டாக நாடாளுமன்றமும் இருக்கும். இந்த இரு பெரும் அமைப்புகளை மக்கள் சப்போர்ட் செய்யவேண்டும். இப்படி எல்லாரும் ஒருவருக்கொருவர் சப்போர்டாக இருப்பதுதான் ஜனநாயகம்.
5. பணம் அச்சடிப்பதை இனி நாடாளுமன்றமே நேரடியாக கவனித்துக்கொள்ளும். காந்திக்குப் பதிலாக லாபகரமான முக்கியத் தலைவர் ஒருவரின் படம் இடம்பெறும்.
6. பங்குச்சந்தை மற்றும் ஊகத்துறையில் ஈடுபடும் ஏழைகளுக்கு மானியம் வழங்கப்படும். பிற மானியங்களும் இலவசங்களும் (disgusting!) விலக்கிக்கொள்ளப்படும்.
0
நினைவிருக்கட்டும். அரசாங்கம் என்பது ரிசர்வேஷன் போல. எப்போதும் அது நிரந்தரமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. படிப்படியாக அந்தத்துறையை நாம் ஒழிக்கவேண்டும். டார்வின் மற்றும் லாமார்க்கின் தியரியின்படி, ஒரு பொருளின் தேவையும் பயன்பாடும் குறையத் தொடங்கினால், காலப்போக்கில் அந்தப் பொருளே காணாமல் போய்விடும். அரசாங்கம் அப்படிப்பட்ட ஒரு பொருள். இருந்தாலும், இப்போதைக்கு அரசாங்கத்தை முழுவதுமாக ஒழிக்கவேண்டியதில்லை. நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக, ஒரு துறையாக அரசாங்கம் நீடிக்கலாம்.
எப்போது அரசாங்கம் தேவை, எப்போது தேவையில்லை என்பதை உணர்த்த ஒரு உதாரணம். ஒரு காரில் பெட்ரோல் நிரப்பி, அதில் முதலாளிகளை அமர வைத்து, வண்டியை நன்றாகத் துடைத்து, ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு வழியனுப்பவேண்டியது அரசாங்கத்தின் வேலை. இடையில் வண்டி நின்றால் பெட்ரோல் போடவேண்டும். அல்லது பின்னால் இருந்து தள்ளிவிடவேண்டும். (Bail out என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்). அத்தோடு முடிந்தது அதன் பணி.
0
இதுவெல்லாம் நடந்தால்தான் உலகத்தரம் வாய்ந்த ராணுவ / நாடாளுமன்ற சேவை நமக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் அடுத்த ஐம்பதாண்டுகள் கழித்தும் இதே நிலையில் பின்தங்கியேதான் இருப்போம்.
0
மருதன்

கருத்துகள் இல்லை: