புதன், 30 மே, 2012

தமிழ் பள்ளிகளிலும் கட்டண கொள்ளை கொடிகட்டிப் பறக்கும் வசூல்

திருநெல்வேலி: ஆங்கிலம் வழிப் பள்ளிகளில்தான் கட்டணக் கொள்ளை கோலோச்சுகிறது என்றில்லை.. திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்வழிப் பள்ளிகளிலும் கூட கல்விக் கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டை கொடிகட்டிப் பறப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, தென்காசி கல்வி மாவட்டங்களில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என 2500 தமிழ்வழி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆங்கில பள்ளிகளுக்கு இணையாக இத்தகைய தமிழ்வழி பள்ளிகள் தங்களின் தரத்தை உயர்த்தி கொள்வதாக கூறி ஏழை, எளிய மாணவ, மாணவிகளிடம் கல்வி கட்டணம் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்து வருகின்றன.
மெட்ரிக் பள்ளிகளில் உள்ளதை போல் பெரும்பாலான தமிழ்வழி தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர வேன், பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாத கட்டணமாக ஒரு சில பள்ளிகளை தவிர்த்து பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களிடம் ரூ.200 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளி அருகில் நடந்து செல்லும் தூரத்தில் இருந்து வரும குழந்தைகளிடமும் ரூ.100 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதே போல் கல்வி கட்டணமாக சீருடை, நோட்டு புத்தகம், மாதாந்திர தேர்வு கட்டணம், ஆண்டுவிழா, விளையாட்டு விழா, சுற்றுலா சிறப்பு பயிற்சி என கூறி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் வரை மாணவர்களிடம் கட்டணமாக கறக்கின்றனர். ஆனால் உரிய ரசீது எதனையும் பள்ளி நிர்வாகம் தருவதில்லை. இக்கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்களின் பெற்றோர் பலர் தங்களது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி கந்து வட்டிக்கு கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கும் கொடுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: