செவ்வாய், 29 மே, 2012

எப்போதும் அவர் கேட்க விரும்புவது புகழுரைகளே

அதிமுக ஆட்சி – ஒரு ஆண்டு கழிந்தது! – பகுதி-1

மே 13, 2101… சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்த நாள்!
ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம். இதற்கு ஜெயலலிதா ஒதுக்கிய தொகை மட்டுமே ரூ 25 கோடி என்கிறது அதிகாரப்பூர்வ தகவல்.
முன்பெல்லாம் ஒரு புதிய அரசு அமைந்த உடன் பிரதான எதிர்க்கட்சியாகவே இருந்தாலும், ’100 நாட்கள் அல்லது 6 மாத காலம் வரை ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்யப் போவதில்லை’ என்பார்கள்.
காரணம், அரசின் நிலைமையைப் புரிந்து நடவடிக்கை மேற்கொள்ள, புதிய திட்டங்களை அறிவிக்க இந்த கால அவகாசம் புதிய அரசுக்குத் தேவை என்பதால். ஆனால் ஜெயலலிதா அரசுக்கு இந்த வரைமுறையெல்லாம் பொருந்தாது என்பது பொதுவான கருத்து. அவருக்கு அரசின் நிலவரம் புரியாமல் இல்லை. வந்த வேகத்தில் அவர் எடுத்த நடவடிக்கை அல்லது வெளியிட்ட அறிவிப்புகளைப் பார்த்தவர்களுக்கு, ஜெயலலிதா எந்த அளவு Pre planned ஆக இருந்தார் என்பது புரியும்.
ஆனால், இன்றோ, ஜெயலலிதாவை குறைந்தது மூன்றாண்டுகள் வரை விமர்சிக்கவே கூடாது என்கிறது சோ உள்ளிட்ட ஜால்ரா கோஷ்டி. மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவரால் எந்த நடவடிக்கையையும் திடமாக மேற்கொள்ள முடியுமாம் (உலகிலேயே மிகப்பெரிய கத்துக்குட்டி ஜெ என்று சொல்ல வருகிறார்களோ!!)

இருக்கட்டும்…
ஜெயலலிதாவின் இந்த ஒரு ஆண்டு ஆட்சி எப்படி? (சாதனை என்ன என்று மட்டும் யாரும் கேட்டுவிட வேண்டாம். பாவம், சசி கும்பலின் உள்ளடி குழப்பத்தை சரிபண்ணி வழிக்குக் கொண்டுவரவே 5 ஆண்டுகள் பத்தாது!)
சமீபத்தில் ஜூனியர் விகடன் ஜெயலலிதா ஆட்சியின் முதல் ஆண்டை மக்கள் மன்றத்துக்குப் போய் எடைபோட்டிருந்தது. அதில் ரொம்ப திக்கித் திணறி (பிட் அடித்து) ஜெயலலிதாவுக்கு பாஸ் மார்க் போட்டிருந்தது!
நம்மைப் பொறுத்தவரை, அரசியல், விருப்பு வெறுப்பு அனைத்துக்கும் அப்பால் நின்று, ஜெயலலிதா ஆட்சியில் தினம் தினம் செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண குடிமகனாக சொல்கிறோம்… இந்த ஒரு ஆண்டில் அவர் பெற்றுள்ள மதிப்பென் பூஜ்யம்… 0!
இதைச் சொல்வதால் நாம்  என்னமோ திமுக அனுதாபி என்றோ, ஜெயலலிதாவுக்கு ஆகாதவர் என்றோ எண்ணிக் கொள்ள வேண்டாம். ஜெயலலிதாவைத் திட்டுபவர்கள் எல்லாம் திமுக அனுதாபி என்பது, ‘மஞ்சள் சேலை கட்டினவளெல்லாம் என் பொண்டாட்டி’ என்பதற்கு சமம்.
உண்மையிலேயே கடந்த 13.05.2011 முதல் 13.05.2012 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறதா… யோசித்துப் பாருங்கள். ம்ஹூம்… ஒரு விஷயம் கூட தேறாது.
ஜெயலலிதா வெளியிட்டதெல்லாம் வெற்று அறிவிப்புகள். வெறும் வார்த்தை வயிற்றை நிறைக்காதே!
கடந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு எதிராக ஜெயலலிதா கையில் எடுத்த முக்கிய அஸ்திரம்… மின்வெட்டு. பாவம், ஜெ ஆதரவாளர்களுக்கு இன்று இதைப் பேசுவதே கூட எட்டிக்காயை விட கசப்பானதாக இருக்கலாம்.
ஆனால், உண்மை என்ன?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்றே மாதங்களில் மின்வெட்டு என்பதே இல்லாமல் செய்து விடுவோம் என்று தமிழகமெங்கும் முழங்கி வலம் வந்தார் ஜெயலலிதா.  ‘அம்மா சொல்வதைச் செய்வார்… போடுங்கள் ஓட்டை’ என்று காது கிழியும் அளவுக்கு ஜால்ரா அடித்தனர் அவரது அடிப்பொடிகளாகத் திகழும் சில பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும்.
நடந்ததை நாடே அறியும்.
தொழில் மாவட்டங்களான கோவை, ஈரோட்டில் 3 முதல் 4 மணி நேரம் மின்வெட்டு நிலவியது திமுக ஆட்சியில். சென்னை மற்றும் புற நகர்களில் 1 மணி நேரம். அதுவும் கோடையில் மட்டுமே. மழைக் காலங்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தனர்.
இன்றோ.. இந்த நிமிடம் வரையில் மின்வெட்டு நீங்கவில்லை. காற்றாலை மின்சாரம் வந்துவிட்டதாக சட்டசபையில் குதித்துக் கொண்டிருந்த போதும், கிராமங்களில் பகலில் 8 மணி நேர மின்வெட்டும், இரவில் 2 மணி நேர மின்வெட்டும் அமலில் உள்ளது. நமது கிராமியம் சார்ந்த தொழில்கள் அடியோடு முடங்கிப் போயுள்ளன. விவசாயம் என்பதே பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை. உண்மை நிலையை வெளியே சொன்னால் இன்னும் பிரச்சினையாகிவிடுமோ என அச்சப்பட்டு அமைதி காக்கும் அளவுக்கு கேவலம்.
டாஸ்மாக் கொடி பறக்குது…
டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனை செய்வதுதான் தமிழகத்தின் அத்தனை பிரச்சினைக்கும் சர்வரோக நிவாரணி என ஜெயலலிதா மிகத் தீவிரமாக நம்புகிறார்.
மது விற்பனையை அரசே எடுத்து நடத்துவதால், இந்தத் துறையில் தனியார் முதலைகள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று பார்த்தால், அவர்களுக்கு சற்றும் சளைக்காத அளவுக்கு தரமற்ற மது வகைகளை, பெரும் விலைக்கு விற்று லாபம் பார்க்கிறது ஜெயலலிதா அரசு.
இன்னொரு பக்கம், மது தயாரிப்பு தொழிற்சாலைகள் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துவிட்டன. கிட்டத்தட்ட மாவட்டம் தோறும் மது தயாரிப்பு நிலையங்கள் அல்லது மது நிரப்பும் கூடங்கள். அத்தனையும் பெரும் பணக்காரர்களுக்கு அல்லது ஆட்சி மேலிடத்துடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமானவை.
டாஸ்மாக்குக்கு வரும் ரூ 20 ஆயிரம் கோடி என்பது எத்தனை லட்சம் குடும்பங்களின் வாழ்க்கையை அடித்து பிடுங்கப்படும் பணம் என்பதை எண்ணிப்பார்க்கக் கூட யாரும் விரும்பவில்லை.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாத அரசு, டாஸ்மாக்கில் நாளொடு மாற்றம் கொண்டுவந்து வசூல் ராஜாவாகத் திகழ்கிறது.
உள்ளூர் சரக்கு போரடிக்கிறதா…? இதோ, வெளிநாட்டு சரக்கு… உள்ளூர் பீர்கள் வேண்டாமா…? நாங்கள் வரவழைக்கிறோம் வெளிநாட்டு பீர்… பீர் ஜில்லென்று கிடைக்கவில்லையா… கவலை வேண்டாம் கடைக்குக் கடை ஃப்ரிட்ஜ் தருகிறோம்… உயர்ந்த விலை சரக்கை மொத்தமாக வாங்குகிறீர்களா… உங்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர்.. வீட்டுக்கே வந்து டோர் டெலிவரி செய்கிறோம்…
-இப்படி மகா சுறுசுறுப்பாக நடக்கிறது சீமைச்சாராய வியாபாரம். தமிழகத்தில் வேறு எந்தத் துறையிலும் இத்தனை வேகம் இல்லை. மக்களின் பணத்தைப் பிடுங்க, டிலைட் ஷாப், டீலக்ஸ் ஷாப் என்ற பெயர்களில் இன்னும் காஸ்ட்லி ஐட்டங்களை இறக்கப் போகிறது ஜெ அரசு. இதுபோதாதென்று திருவிழா சமயமென்றால் ஆற்றங்கரைகளிலும், தோப்புகளிலும் ஆறாய் ஓடும் கள்ளச் சாராயம்.
ஒரு காலத்தில் இலைமறை காயாக குடித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று தெருவுக்குத் தெரு மூலையில் நின்றபடி, ஏதோ குளிர்பானம் அருந்துவதைப் போல குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
கிராமங்களில் குடிக்காத இளைஞர்களை இன்று பார்க்கவே முடியவில்லை.
இம்மாதிரி செயல்களை தட்டிக் கேட்கும் மனநிலைகூட மற்றவர்களுக்குப் போய்விட்டது. காரணம், அவர்கள் தெருவில் செய்வதை, இவர்கள் வீட்டில் செய்யப் போகிறார்கள்.
குடிப்பதெல்லாம் இந்த காலத்தில் ஒரு குற்றமா என்ற எண்ணத்தை தமிழக மக்களிடையே திமுக – அதிமுக அரசுகள் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்படுத்தி வந்தன.
இந்த ஓராண்டில் குடிப்பது நமது தேசிய கடமை என்ற நிலைக்கு மக்களைத் தயார்ப்படுத்தியுள்ளது ஜெயலலிதா அரசு. அதாவது திமுக ஆட்சித்
இதை வளர்ச்சி, சாதனை என்றெல்லாம் சொல்லி விளம்பரப்படுத்திக் கொள்வது எத்தனை கேவலம்!!
சட்டமன்றம்.. ஜெயலலிதாவுக்குப் பிடித்த 110-ம், மக்களுக்கு அவர் விரும்பிப் போடும் 111-ம்!
ஜெயலலிதா ஆட்சிக் காலம் என்றால் மட்டும் சட்டமன்றத்துக்கு அலுவல் பளு குறைவு. பட்ஜெட் உரைகூட சுருக்கமாகத்தான் இருக்கும்.
காரணம் 110 விதியின் கீழ், என்று கூறிவிட்டு அவர் அறிவிப்பு மழையாகப் பொழிவார். இந்த அறிவிப்புகளில் எத்தனை முழுமையாக நிறைவேறின என்பது அதைப் படித்தவருக்கே வெளிச்சம்! எத்தனைப் பேர் இதையெல்லாம் கவனத்தில் வைத்து கேள்வி கேட்கப் போகிறார்கள் அல்லது எழுதி கிழிக்கப் போகிறார்கள் என்ற அசாத்திய நம்பிக்கைதான் இதற்கு முக்கிய காரணம்.
எதிர்த்துப் பேசவோ, கேள்வி எழுப்பவோ ஆளே இருக்கக் கூடாது இந்த மன்றத்தில். எப்போதும் அவர் கேட்க விரும்புவது புகழுரைகளே. அந்த மனநிலையை ரொம்ப தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் ஆவரது கட்சிக்காரர்களும், சில கூட்டணிக் கட்சியினரும், கிடைக்கிற கேப்பிலெல்லாம் அம்மா பாமாலை பாட, புளகாங்கிதத்துடன், இப்படியல்லவா எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும் என்று வாய்விட்டுப் பாராட்டி மகிழ்கிறார் முதல்வர்!
எந்தத் துறைக்கு யார் அமைச்சர்?
கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல், எந்த இணையதளம் அல்லது நாளிதழையும் பார்க்காமல், இந்தத் துறைக்கு இன்னார்தான் அமைச்சர் என்று பட்டென்று உங்களால் சொல்ல முடியுமா… முடிந்தால் பெரிய சாதனைதான்!
நம்பகத் தன்மையோ, வகிக்கும் பதவிக்கான கல்வியறிவோ இல்லாதவர்களை அமைச்சர்களாக்கியுள்ள ஜெயலலிதா, அவர்கள் மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்? அமைச்சர்களாக குறைந்தபட்ச தகுதிதான் என்ன? யார் நன்றாகக் காலில் விழுகிறார் என்பதா… அல்லது போயஸ் தோட்ட சமையலறை அரசியலில் நல்ல தேர்ச்சி இருக்க வேண்டுமா?
இருக்கும் 33 அமைச்சர்களுக்கும் (முதல்வர் உள்பட) துறை ரீதியான முன்னேற்றம் குறித்து ஒரு தேர்வு வைத்தால், யாராவது ஒற்றை இலக்கத்தைத் தாண்டி மதிப்பெண் பெறுவார்களா (நூற்றுக்குதான்!)…
குற்றங்கள் நடக்காத நாள் எது.. ஆந்திராவுக்குப் போனவர்கள் வெகேஷனுக்கு வந்து திருடுகிறார்களோ?
நான் முதல்வராகப் பதவி ஏற்றேன் என்று கேள்விப்பட்டவுடன் திருடர்களும் கொள்ளையர்களும் எங்கோ ஆந்திரா பக்கம் போய்விட்டார்களாம் என்று மிகுந்த எக்காளத்துடன் ஜெயலலிதா அறிவித்த அடுத்த நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டன கொள்ளைகளும் கொலைகளும். இன்றைய தேதிக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் மிக மோசமான காலகட்டம் என்றால் ஜெயலலிதாவின் இந்த ஓராண்டுதான்.
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மிகப் பெரிய வங்கிக் கொள்ளைகள் மற்றும் நகைக்கடை கொள்ளைகள். இந்த வங்கிக் கொள்ளைகளை கண்டுபிடிப்பதாகக் கூறி போலீஸ் செய்த என்கவுன்டர் கொலைகளில் இன்னும் கூட நியாயம் கிடைக்கவில்லை!
சென்னை கீழ்கட்டளை அருகே வங்கிக் கொள்ளை நடந்த அன்று மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 37 கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன!
இன்றும் கூட நகைக் கடை கொள்ளை, அடகுக் கடை கொள்ளை, வீடுபுகுந்து நகைகள் பறிப்பு, ரொக்கம் பறிப்பு என தொடர்கிறது.
போலீஸ் – கொள்ளையர் இடையே நிலவும இணக்கமான சூழல்தான் சட்டம் ஒழுங்கைக் காப்பதில் உள்ள மிகப்பெரிய சவால். இந்த சவால் ஜெயலலிதாவுக்குப் புரிந்திருந்தும், போலீசாரை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் இருப்பதுதான் பெரிய ஆபத்தாக உள்ளது.
தெளிவற்ற, உறுதியற்ற முதல்வர்…
ஜெயலலிதா என்றதுமே உறுதியானவர், தைரியமானவர், தெளிவாக முடிவெடுக்கக் கூடியவர் என்ற இமேஜை அவரது ஆதரவாளர்கள் கடந்த காலங்களில் உருவாக்கி வைத்துள்ளனர்.
அந்த இமேஜைக் கூட தானே தூள்தூளாக்கிக் கொண்டார் இந்த ஓராண்டில் ஜெயலலிதா.
ராஜீவ் கொலை வழக்கில், அப்பாவிகள் மூவர் கழுத்துக்கு தூக்குக் கயிறு தயாராக உள்ளது. இவர்களைக் காக்க வேண்டும் என  உணர்வாளர்கள் எழுப்பிய குரல்களை முதலில் ஏற்று, சட்டப் பேரவையில் தீர்மானமும் கொண்டு வந்த முதல்வர், அடுத்தடுத்து அடித்த பல்டிகள் நகைப்புக்குள்ளாகிவிட்டது அவரது நிலைப்பாட்டை.
கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையில் ஆரம்பத்தில் ஜெயலலிதா விட்ட வீராவேச அறிக்கைகள், மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் எனது அரசு அனுமதிக்காது என அவர் மத்திய அரசுக்கு விட்ட சவால்களைப் பார்த்து புளகாங்கிதமடைந்து, அவரைப் போற்ற ஆரம்பித்துவிட்டன, அவரை விமர்சித்து வந்த ஒருசில பத்திரிகைகளும். ஆனால் அடுத்த சில தினங்களில் அடித்தார் பாருங்கள்… அது அபார பல்டி! அதிலும் போராட்டக்காரர்களைப் பணிய வைக்க அவர் தனது போலீசைப் பயன்படுத்திய முறை, கோத்தபாய தோத்தான் போங்கள்!!
-தொடரும்…

கருத்துகள் இல்லை: