புதன், 30 மே, 2012

அன்பே சிவம் – 1 ரகசிய ரீ மேக் by Kamal Hassan

Planes, Trains and Automobiles என்ற படம் 1987-ல் எடுக்கப்பட்டது. தான் பெற்ற இன்பத்தைப் பெறுக வையகத் தமிழர்களும் என்ற உயரிய நோக்கில் அதை அன்பே சிவம் என்ற பெயரில் ரகசியமாக ரீ மேக் செய்திருக்கிறார் கலைஞானி கமல்சார்.
ஆங்கிலப் படத்தில் மாறுபட்ட குணாம்சங்களைக் கொண்ட இரண்டு ஆண் பாத்திரங்கள், தற்செயலாக இரண்டு மூன்று நாள் பயணத்தை இணைந்து மேற்கொள்ள நேருகிறது. தமிழிலும் நல்லசிவம், அன்பரசன் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் அந்த சாகசத்தைச் செய்கின்றன. ஆங்கிலப் படத்தில் ஒரு கதாபாத்திரம் தேங்க்ஸ் கிவ்விங் டே என்ற முக்கியமான நிகழ்வுக்காக வீடு திரும்பியாக வேண்டிய நிலையில் இருக்கிறது. அதைத் திருமணமாக அழகாகத் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் நம்மவர்.
ஆங்கிலத்தில் ஒரு கதாபாத்திரம் அட்வர்டைஸ்மெண்ட் தொழிலில் இருப்பவராக வருகிறது. தமிழிலும் அப்படியே. ஆங்கிலப் படத்தின் தொடக்கத்தில் அந்த அட்வர்டைஸ்மெண்ட் நபர் போக வேண்டிய விமானம் ரத்தாகிறது. தமிழில் அதை புயலால் ரத்தாவதாக காட்டுகிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அதிகம் பேசக்கூடிய ஒரு ஓட்டைவாய் கதாபாத்திரத்துடன் ஒரு ஹோட்டல் அறையில் தங்க நேருகிறது. அட்வர்டைஸ்மெண்ட் பார்ட்டியின் பணம் திருடு போகிறது. தமிழிலும் டிட்டோ. ஓட்டை வாய் கதாபாத்திரம் தனக்கு குடும்பம் இல்லாத நிலையிலும் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறது.
டிரெயின், கார் என பல வாகனங்களில் பயணம் செய்து அரை நாளில் சென்று சேர வேண்டிய இடத்தை மூன்று நாட்கள் பயணம் செய்து அடைகிறார்கள். ததாஸ்து. இப்படிப் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கும் நிலையில் கதை, திரைக்கதையைத் தானாகவே எழுதியதாகப் போட்டுக்கொள்ளும் தைரியம் பலருக்கும் இருக்காது. ஆனால், சகலகலாவல்லவரான கமல்சாருக்கு அந்த தைரியம் நிறையவே இருக்கிறது.  கம்பர்கூட காப்பிதான் அடித்திருக்கிறார். இல்லையா… நமக்கு கம்பர்போல் மூலப் படைப்பு பற்றிய குறிப்பை நேர்மையாக இடம்பெறச் செய்யவும் தெரியாது. மூலத்தை விடச் சிறப்பாகப் படைக்கவும் இயலாது. குறைந்தபட்சம் காப்பி அடித்தாவது அவருடன் நம்மை இணைத்துக் கொள்வோமே என்ற கமல்சாரின் நல்லெண்ணம் இங்கு வெளிப்படுவதை நாம் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
இதை வேறொருவகையிலும் பாராட்டலாம். அதாவது, சிலருக்கு எதிர்காலத்தில் நடக்கப் போவது தெரிந்திருக்கும். தீர்க்கதரிசி என்று அவர்களைச் சொல்வார்கள். கமல்சாருக்கோ கடந்த காலத்தின் மீது கூட பெரும் செல்வாக்கு இருக்கிறது. 1991-ல்தான் அன்பே சிவத்தை எடுத்தார் என்றாலும் 1987-ல் எடுத்த படம்கூட இதன் தாக்கத்தைக் கொண்டிருக்கும்வகையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் என்றுகூட அன்னாரைப் பாராட்டலாம். அவர் மீசையை முறுக்கிப் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடும் என்றாலும் இது கொஞ்சம் அதீதமான பாராட்டாகிப் போய்விடும். எனவே, அவர் செய்த சாதனைகளை மட்டுமே மதிப்பிட்டுப் பாராட்டினால்தான் அவருக்கும் மரியாதை. நமக்கும் கவுரவம்.
அந்தவகையில் பார்த்தால், ஒரிஜினலில் இல்லாத ஒரு காதல் கதையையும் சமூக அக்கறையையும் (?) தமிழில் நைசாக நுழைத்ததில்தான் கமல்சாரின் மேதைமை ஒளிந்துகொண்டிருக்கிறது. அதிலும் சிவப்புக் கைக்குட்டையைக் கையில் கட்டிக்கொண்டு கம்யூனிஸ தத்துவத்துக்கே ஒரு புதிய பரிமாணத்தைத் தந்துவிட்டிருக்கிறார். தான் கடுமையாக எதிர்க்கும் முதலாளியின் மகளையே காதலித்து, வேறொருவருடன் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கும் நிலையில் யதேச்சையாக சந்தித்து, தொழிலாளர்களுக்கு சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால்தான் திருமணத்தை நடத்தவிடுவேன் என்று மிரட்டி தொழிலாளர் பிரச்னையை வெகு அருமையாகத் தீர்த்துவிடுகிறார். கம்யூனிஸத்தின் பிதாமகர்களான மார்க்ஸுக்கோ, லெனினுக்கோ, ஸ்டாலினுக்கோ, மா சேதுங்குக்கோ,  சே குவேராவுக்கோ தோன்றியிராத அதி அற்புதமான வழி ஒன்றைக் காட்டியிருப்பதன் மூலம் அவர்கள் அனைவரையுமே மிஞ்சிவிட்டார் காம்ரேட் கமல்.
இதையெல்லாத்தையும்விட மிகச் சிறந்த சாதனை என்னவென்றால், கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தைப் பிரதானமாகக் கொண்ட படத்துக்கு அன்பே சிவம் என்று ஒரு தலைப்பை வைத்ததுதான். அன்பே சிவம் என்பது ஆத்திகர்கள் தெய்வ வழிபாடு, பூஜை புனஸ்காரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற புற விஷயங்களில் மட்டுமே திளைப்பவர்களாக இருந்துவிட்டால், ஆன்மிகத்தின் அடிப்படை அம்சமான சக மனிதர் மீதான அன்பு என்பது விடுபட்டுப் போய்விடும். எனவே, அப்படியானவர்களைத் திருத்தும் நோக்கில் அன்புதான் தெய்வம் என்று சொல்லும் கோட்பாடு அது. எதையும் அனுசரித்துச் செல் என்று சொல்லும் கோட்பாடு அது.
கம்யூனிஸம் முற்றிலும் வேறான ஒன்று. எல்லாவற்றையும் புரட்டிப் போடு என்று சொல்லும் கோட்பாடு அது. தெய்வ நம்பிக்கையை அதிகாரவர்க்கத்தின் நயவஞ்சக உருவாக்கமாகவும் மக்களின் புரட்சி மனோபாவத்தை மட்டுப்படுத்தும் ஒன்றாகவும் பார்க்கக்கூடியது. உடல் உழைப்பை உயர்வாகச் சொல்லக் கூடியது. அது சார்ந்த சமத்துவ அமைப்பை வன்முறை வழியிலாவது உருவாக்க வேண்டும் என்று சொல்லக்கூடியது. எதிர்க்கிறோம்; அதனால் இருக்கிறோம் என்று சொல்லக்கூடியது. சுருக்கமாகச் சொல்வதானால் அது போராட்டத்தையே தெய்வமாகச் சொல்லக்கூடியது. அப்படியாக அடிப்படையிலேயே முரண்படும் இரண்டு அம்சங்களை எந்தவித கவலையும் புரிதலும் இல்லாமல் ஒன்று சேர்த்திருக்கும் சாதுரியத்தை நாம் பாராட்டியே தீரவேண்டும்.
இத்தனைக்கும் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த ஒருவர் வன்முறைச் செயலில் ஈடுபட்டு அதனால் ஏற்படும் இழப்பைக் கண்டு மனம் வருந்தி சக மனிதர் மீதான அன்புதான் சிறந்த வழி என்று மனம் மாறுவதாக ஒன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கவில்லை. அப்படியெல்லாம் செய்தால் படம் தரமானதாகிவிடுமென்பதால், தன்னுடைய அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி அப்படியான விபத்து நடக்காமல் தடுத்திருப்பதில் கமல்சாரின் சாதுரியம் நன்கு வெளிப்பட்டிருக்கிறது.
இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. எனவே, இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமாக எடுத்து அவர் எப்படியெல்லாம் செதுக்கியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
கதை ஒரிஸாவில் இருந்து ஆரம்பிக்கிறது. அட்வர்டைஸிங் டைரக்டரான ஒரு நவ நாகரிக இளைஞன் அன்பரசன் (மாதவன்) விமான நிலையத்துக்கு வருகிறான். ஓரிரு தினங்களில் சென்னையில் அவனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. ஆனால், புவனேஷ்வரில் ஒரே புயலும் மழையுமாக இருப்பதால் எல்லா விமானங்களும் ரத்தாகிவிடுகின்றன. லான்ச்சில் சோகமாகப் போய் உட்காருகிறான். அப்போதுதான் நம் கதாநாயகன் நல்லசிவம் (கமல்சார்) எண்ட்ரி கொடுக்கிறார். சுமார் 45-50 வயது மதிக்கத் தகுந்தவர்போன்ற தோற்றம். முகத்தில் ஆங்காங்கே தழும்புகள். கையில் ஒரு செய்தித்தாளை காலண்டர் போல் சுருட்டி வைத்திருக்கிறார்.
விமான நிலைய தொலைக்காட்சிப் பெட்டியில் தீவிரவாதிகள் சிலரைப் பிடித்த செய்தி காட்டப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், பைப் பாம்கள் எல்லாம் திரையில் வரிசையாகக் காட்டப்படுகின்றன. அதைப் பார்த்ததும் அன்பரசனுக்கு நல்லசிவம் கையில் சுருட்டி வைத்திருப்பது பைப் பாம் ஆக இருக்கும் என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. காவல் துறை அதிகாரிகளிடம் சொல்கிறார். அவர்களும் நல்லசிவத்தை சோதனை செய்கிறார்கள். பேப்பரில் சுருட்டி வைத்திருப்பது ஒரு வெள்ளரிக்காய் என்பது தெரியவருகிறது.
இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஒரிஸ்ஸாவில் புயலும் மழையும் அடிக்கும் காலம் அது. வெள்ளரிக்காயோ கோடை காலத்தில் விளையும் ஒரு காய். அதை மழைக்காலத்தில் விளைவித்துக் கொண்டுவந்த கமல்சாரின் விவசாய சாமர்த்தியம் நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒன்றுதான். அதிலும் அந்த வெள்ளரிக்காயை உலகில் யாருமே வைக்காத கோணத்தில் பேப்பரில் சுருட்டி வைத்ததிலும் அவருடைய மேதமை வெளிப்படுகிறது.
அதோடு, நல்லசிவம் ஒரு தொழிற்சங்கவாதி. கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்கள்கூட கட்டணம் குறைந்த போக்குவரத்து சாதனங்களைத்தான் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், கமல்சார் அந்த சம்பிரதாயத்தைத் தகர்த்து, கடைக்கோடி கட்சி உறுப்பினர் ஒருவரை விமான டிக்கெட் எடுக்கவைத்து, விமானம் என்பது முதலாளிகளுக்கு மட்டும் உரியதா என்ன… ஏழை காம்ரேட்களும் அதில் பறக்கலாம் என்ற உரிமைக்குரலை அதிநுட்பமாக வெளிபடுத்தியிருக்கிறார்.
ஆனால் பாவம், விமானம் ரத்தாகிவிடுவதால் பஸ், ரயில் போன்ற ஏழைகளின் வாகனத்தில் பயணிக்க வேண்டிவருகிறது. வானில் பறந்தாலும் தரையில் கால் ஊன்றியிருக்கும் அம்சமாக இதை நாம் பார்க்கவேண்டும். அப்படியாக, நல்லசிவமும் அன்பரசனும் சேர்ந்து தங்கள் சாகசப் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.
அதற்கு முன்னால், அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையில் ஒருவித நட்பு உருவாவதற்கான ஆரம்பகாட்சிகள் இடம்பெறுகின்றன. இரண்டு சராசரி கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளில் ஒருவர் கூடுதல் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வதாகக் காட்டுவதன் மூலம் அந்தக் காட்சிகளை சுவாரசியமாக ஆக்கலாம். அல்லது ஒருவரை படு முட்டாளாகக் காட்டுவதன் மூலம் அந்த சுவாரசியத்தை வரவைக்கலாம். இதில் கமல்சார் தனக்கு மிகவும் இயல்பாக வரக்கூடியதைக் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
லான்ச்சில் அமர்ந்தபடி அன்பரசன், தான் இயக்கிய விளம்பரக் காட்சியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். நல்லசிவம் தன் பையில் இருந்த வெள்ளரிக்காயை சாப்பிடுவதற்காக வெளியில் எடுக்கிறார். இன்னொரு கையில் மிளகாய்ப் பொடியைப் பிடித்துக் கொள்கிறார். டி.வி. விளம்பரத்தில் அவரும் மெய்மறந்துவிடுகிறார். பக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் மின் விசிறி மிளகாய்ப்பொடியை நேராக அன்பரசனின் முகத்தில் தூவிவிடுகிறது. அதைப் பார்த்ததும் நல்லசிவம் பதறிப்போய் மிளகாய்ப் பொடி பொட்டலத்தைத் தன்னுடைய பைக்குள் அவசரமாக மடித்துப் போட்டுவிடுகிறார். அதாவது, அப்படிப் போட்டுவிடுவதாக காட்டப்படுகிறது.
அன்பரசு தன் கண்ணில் விழுந்த மிளகாய்ப் பொடியைக் கழுவ பாத்ரூமுக்குப் போகிறார். கூடவே உதவிக்குப் போகும் நல்லசிவம், மிகவும் சமர்த்தாக, அந்த மிளகாய்ப் பொடி பொட்டலத்தை சோப் குழாய்க்கு மேலே வைத்துவிட்டு வருகிறார். ஏற்கெனவே கண் எரிச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அன்பரசன் சோப் என்று நினைத்து குழாயைத் திறக்கும்போது குழாய் மேலிருந்து மிளகாய்ப் பொடி கொட்டுகிறது. அதை முகத்தில் பூசிக் கொள்ளும் அன்பரசனுக்கு கண்ணோடு சேர்த்து முகமும் எரிய ஆரம்பிக்கிறது. லான்ச்சில் இருந்தபோதே மிளகாய்ப் பொடி பொட்டலத்தை நல்லசிவம் கீழேயோ பைக்குள்ளோ போட்டாரே என்று நாம் நினைக்கையில் அவர் அதைக் கையிலேயே வைத்துக் கொண்டிருந்ததோடு பொறுப்பாக சோப் குழாய் மேலும் வைத்து நம்மை நகைச்சுவையில் ஆழ்த்தியிருக்கும்விதம் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், நல்லசிவம் பாத்ரூமுக்குள் நுழையும்போது கையில் அவருடைய பை எதுவும் கிடையாது. வெறும் மிளகாய்ப் பொடி பொட்டலம் மட்டுமே இருக்கும். பாத்ரூமில் இருந்து வெளியே வரும்போது கையில் பை இருக்கும். அந்தப் பை எப்படி பாத்ரூமுக்குப் போனது? விஷயம் என்னவென்றால், பாத்ரூமுக்குள் நுழையும்போது கையில் பை இருந்தால் மிளகாய்ப் பொடி பொட்டலத்தை சோப் குழாய்க்கு மேலே வைப்பது கடினம். எனவே, நம்மைச் சிரிக்க வைக்கும் உயரிய நோக்கில் பையைத் தானாகவே பாத்ரூம் ஸ்லாப் மேல் போய் உட்காரும்படிச் செய்துவிடுகிறார் கமல்சார்.
அடுத்ததாக, இருவருக்கும் மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு அறை ஒதுக்கப்படுகிறது. நல்லசிவத்தை நைஸாகக் கழட்டிவிட்டு அன்பரசு ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுகிறார். கார் டிரைவர் நேர்வழியில் போய்க்கொண்டிருக்கும்போது, அன்பரசன் முட்டளவுக்கு தண்ணி தேங்கிக் கிடக்கும் ஒரு குறுக்கு சந்துவழியாகப் போகச் சொல்கிறார். கார் டிரைவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் காரை அந்த வழியில் போக கட்டாயப்படுத்துகிறார். கார் வழியில் தண்ணிக்குள் சிக்கிக்கொண்டுவிடுகிறது. பொதுவாக, சாலையில் நீர் தேங்கிக் கிடந்தால் அதுவழியாகப் போகவேண்டாம் என்றுதான் ஒருவர் நினைப்பார். ஆனால், அன்பரசு கதாபாத்திரம் நம்மைச் சிரிக்க வைக்க வேண்டிய ஒன்று என்பதால், அப்படி முட்டாள்த்தனமாக நடந்துகொள்வதாகக் காட்டுகிறார்.
அதோடு ஓரிரு காட்சிகள் கழித்து அந்தத் தெருவழியாக அன்பரசனும் நல்லசிவமும் நடந்துவரும்போது அந்த காரானது தரையில் இருந்து எட்டு-பத்து அடி உயரத்தில் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத வாகனத்தின் மேல் செருகிக் கொண்டு நிற்பதாக வேறு காட்டப்படும். முட்டளவு-இடுப்பளவு தண்ணீரில் சிக்கிக் கொள்ளும் காரானது ஒன்றரை ஆள் உயரத்துக்கு எப்படிப் போனது என்பது மேலே இருக்கும் ஆண்டவருக்கும் கீழே நம்முடன் மனித உருவில் நடமாடிக் கொண்டிருக்கும் ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்.
இதாவது பரவாயில்லை, ஒரு கட்டத்தில் ஹோட்டல் அறையில் இருந்து நீச்சல் குளத்தில் விழுந்துவிடும் அன்பரசு மேலேறி வந்ததும் செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா? நீரில் நனைந்த தன்னுடைய செல்போனை பிளக் பாயிண்டில் சொருகுவதுதான். அப்படிச் செய்தால் ஷார்ட் சர்க்யூட் ஆகும் என்பது ஐந்தாம் வகுப்பு சிறுவனுக்குக்கூடத் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால், அந்த நவநாகரிக இளைஞன் ஒருவகையான முட்டாள் என்று காட்டினால்தானே அந்தக் காட்சிகளில் நகைச்சுவை மிளிரும். எனவே, அவ்வண்ணமே அவன் செயல்படுகிறான். இதுபோல் கமல்ஹாசனின் இயல்பான தன்மை வெளிப்படும் பல காட்சிகள் படத்தில் இடம்பெற்று இதை அவருடைய படமாகவே ஆக்கியிருப்பதை நாம் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
பிளேன் ரத்தானாலும் திருமணத்துக்குப் போயாக வேண்டியிருக்கிறதே… அதனால், பஸ்ஸில் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இதில் பாருங்கள், அந்த பஸ் போகும் சாலையில் புயலோ, வெள்ளமோ, மழையோ பெய்ததற்கான எந்த அடையாளமும் தென்படவே இல்லை. சாலை பளீரென்று இருக்கிறது. வயலில் நெற்கதிர்கள் சிலு சிலுவென அசைந்தாடுகின்றன. நீல வானில் வெண் பஞ்சு மேகங்கள் தவழ்கின்றன. வெய்யில் சுள்ளென்று அடிக்கிறது. பஸ்ஸின் கூரையில் உட்கார்ந்துகொண்டு பயணிக்கிறார்கள் (அதற்குக் கட்டணம்வேறு குறைவாம்). விமானங்கள் ரத்தாகும்படி விமான நிலையத்திலும் ரயில்கள் போக முடியாதபடி ரயில்வே ஸ்டேஷனிலும் மட்டும் பெய்யும் விசித்திர மழையை உருவாக்கிய திரைக்கதை ஆசிரியரின் மேதைமை இங்கு புலப்படுவதை நாம் கவனிக்காமல் விட்டுவிடவே கூடாது.
அடுத்ததாக, ஒரிஸ்ஸாவில் ஒரு அணை உடைந்ததால் நூறு தமிழர்கள் இறந்துவிடுகிறார்களாம். ஐம்பது ரூபாய்க்குப் பானையை வாங்கி அதில் ஐந்து ரூபாய்க்கு தண்ணியை  ஊற்றிவிட்டு ஐந்தாயிரம் ரூபாய்க்கு டிஜிட்டல் பேனர் வைத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் திராவிட தேசத்தின் ஆறரைக்கோடி தமிழர்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிதானே ஒரே பிரதிநிதித்துவக் கட்சி. அதிலும் கமல்சார் ஏற்று நடிக்கும் நல்லசிவம் கதாபாத்திரம் மட்டும்தானே அதற்கான ஒரே பிரதிநிதி. எனவே, ஒரிஸ்ஸா அரசு, நஷ்ட ஈடான 32 லட்ச ரூபாய்க்கான செக்கை லட்டுபோல் எடுத்து நல்லசிவம் கையில் கொடுத்துவிடுகிறார்கள். அவரும் தன்னுடைய இத்துப்போன பை ஒன்றில் அதை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு புயலும் மழையும் நிறைந்த ஒரு காலத்தில் புறப்பட்டுவிடுகிறார்.
பேரூந்தில் பயணம் செய்யும்போது உலகமகா தத்துவம் ஒன்று பாடலில் சொல்லப்படுகிறது. சாராயம் போதைதரும்… அதுபோல் தாய்ப்பாலும் போதைதரும்… என்பதுதான் அந்தத் தத்துவம். விஷயம் என்னவென்றால், குழந்தை தாய்ப்பாலை அருந்தியதும் பசி அடங்கிய நிம்மதியில் கண் அசந்துவிடும். சாராயம் அருந்துபவர்கள் போதை மிகுதியாகி ஃபிளாட் ஆவது வழக்கம். இரண்டையும் ஒன்றாகக் கருதி குழந்தை ஃபிளாட் ஆவதாகவும் தாய்ப்பாலில் இருப்பதும் போதையே என்ற அரிய உண்மை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பாராட்டை நிச்சயம் பாடலாசிரியருக்குத்தான் தரவேண்டும் என்றாலும் கமல்சார் தந்த உத்வேகம் அதற்குக் காரணமாக இருந்திருக்கும் என்பதால் அன்னாரையும் பாராட்டுவதே நல்லது.
வழியில் ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். இரண்டு பேருடைய பர்ஸிலும் தம்படி காசு கூடக் கிடையாது. ஆங்கிலப் படத்திலும் இப்படியான ஒரு காட்சி உண்டு. அதில் பாத்ரூம் திரைச்சீலை வளையங்கள் விற்பவராக வரும் ஓட்டை வாய் கதாபாத்திரம் திரைச்சீலை வளையங்களைத் தந்திரமாக புராதன மதிப்பு மிகுந்த வளையங்களாகச் சொல்லி விற்று அந்தப் பணத்தை சம்பாதித்திருக்கும். தமிழில் அன்பரசனின் ஷூவை நைசாக விற்று காசு சம்பாதித்துவிடுகிறார் நல்லசிவம். அப்படியாக, ஒரு யதார்த்தமான வழி ஒன்றைக் காட்டியிருப்பதன் மூலம் ஒரிஜினலின் பெயரைப் போடாதது சரிதானே என அவருடைய ரசிக சிகாமணிகள் வாதாட வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பாங்கை நாம் ஓரமாக உட்கார்ந்து வியக்கத்தான்வேண்டும்.
ஒருவழியாக, பஸ் பயணம் முடிந்து ரயில் பயணம் ஆரம்பிக்கிறது. ரயிலுக்காக இருவரும் ஸ்டேஷனில் காத்திருக்கும்போது நல்லசிவத்தின் ஃபிளாஷ் பேக் காட்சிகள் விரிகின்றன.
அதில் அவர் மிகப் பெரிய கம்யூனிஸ தெருக்கூத்து கலைஞர் என்பதும் நடு வீதியில் ஆடிப் பாடி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துபவர் என்பதும் தெரியவருகிறது.
வீதி நாடகத்துக்காக எழுதியிருக்கும் கதையில் கமல்சாரின் புரட்சிகர ஒலக அறிவு கிரஹண கால சூரியன்போல் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. இந்தியா, தேயிலை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. இயற்கை வளங்களைச் சுரண்டுதல், உழைப்பைச் சுரண்டுதல், குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுதல், அணு உலை சப்ளை என பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை எத்தனையோ வகையில் சுரண்டுகின்றன. ஆனால், தேயிலை இறக்குமதி என்பது மிகவும் குறைவான அளவில் நடக்கும் ஒன்று. அந்தவகையில் இந்தியாவின்மீது அது ஏற்படுத்தும் தாக்கமும் குறைவான ஒன்றே. ஆனால், கமல்சார் அப்படி மிகவும் மெல்லிய சுரண்டலுக்கு எதிராகத்தான் அந்த வீதி நாடகத்தில் படு ஆவேசமாகக் களமாடுகிறார். இப்படி ஒரு நுட்பமான சுரண்டலைக் கண்டுணர்ந்ததற்கே அவருக்கு நாம் ஆளுயர மலர் வளையம் ஒன்றை அணிவிக்க வேண்டும்.
இதில் இன்னொரு அபாரமான விஷயம் என்னவென்றால், படத்தின் பிரதான வில்லனான கந்தசாமிப் படையாச்சி (நாசர்) பால் பியரிங், கார்பரேட்டர், மெஷின்கள் விற்பனையில் ஈடுபட்டுவருபவர். 910 ரூபாய் சம்பளத்தை உயர்த்திக் கொடு என்று அந்த கந்தசாமிப் படையாச்சி போல் வெண்ணிற தாடி வைத்துக் கொண்டுதான் காம்ரேட் நல்லசிவம் வீதி நாடகமே நடத்துவார். பால் பியரிங் முதலாளியாக இருந்தால் என்ன பால் தேயிலை முதலாளியாக இருந்தால் என்ன… முதலாளி முதலாளிதானே. எதிர்ப்பு எதிர்ப்புதானே. அப்படியாக தேயிலை இறக்குமதிக்கு எதிரான கோஷங்களை பால் பியரிங் முதலாளிக்கு எதிராக வெளுத்து வாங்குகிறார். அப்போது கந்தசாமிப் படையாச்சியின் மகள் பாலா (கிரண்) காரில் வருகிறாள். நல்லசிவத்தின் கம்பீரமான மீசையையும் அதை அவர் முறுக்கும் வீரத்தையும் பார்த்ததும் பாலாவுக்குள் இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது.
சில நாட்கள் கழிகின்றன. கோவையில் இருக்கும் நல்லசிவம் இன்னொரு தோழருடன் பைக்கில் போய்க்கொண்டிருக்கிறார். அப்போது சென்னையில் வசிக்கும் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் ஒரு காரில் விரைந்து செல்கிறார். போகும்போது சாலையில் தேங்கியிருக்கும் சேற்றை நல்லசிவம் மீதும் தோழர் மீதும் அந்த கார் வாரி இறைக்கிறது. மன்னிப்புக் கேட்டபடியே இறங்குகிறார் மதன். அவர் கம்யூனிஸ்ட் நல்லசிவத்தின் நெருங்கிய நண்பராம். விஷயம் என்னவென்றால், கமல்சாருக்கு பிரபல பத்திரிகையில் பொம்மைகள் வரையும்/வரைவதால் மதன் நண்பர். அவருக்கும் கம்யூனிஸ சித்தாந்தத்துக்கும் எந்த ஒட்டுறவும் கிடையாது. ஆனால், கமல்சாருக்கு நண்பர் என்பதால் அவர் ஏற்று நடிக்கும் கம்யூனிஸ கதாபாத்திரத்துக்கும் நண்பராக துணிச்சலாக அவரைச் சித்திரிக்கிறார் நம் காலத்து நாயகன்.
அந்த மதனும், தான் ஒரு விருந்துக்குப் போய்க்கொண்டிருப்பதாகவும் நல்லசிவத்தை அதில் பங்கெடுக்கும்படியும் அழைக்கிறார். சென்னையில் வசிப்பவர் அங்கு எப்படி சாவகாசமாக உலவுகிறார் என்ற சந்தேகத்துக்கு விடை தரும் வகையில் அந்த விருந்துல சாப்பாடு பிரமாதமாக இருக்கும் என்ற வசனத்தை இடம்பெறச் செய்திருக்கிறார்கள். விருந்தில் நல்லசிவம் தன் ஓவியத் திறமையை வெளிப்படுத்துகிறார். நாயகிக்கு அவர் மீது காதல் பிறந்துவிடுகிறது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நல்லசிவம் தீவிர கம்யூனிஸ்ட். நாயகியோ பெரும் செல்வந்தரின் மகள். ஆனால், அவள் நல்லசிவத்தை வெறும் ஏழையாகவே பார்க்கிறாள். ஒரு போராளியாக அல்ல. என்ன இருந்தாலும் கமல்சார் அடிப்படையில் ஓர் ஆணழகன். கொள்கை, தத்துவம், கத்தரிக்காய் இத்யாதியெல்லாம் அதன் பிறகுதானே.
அந்த படையாச்சியின் அலுவலக அறையை அலங்கரிக்கும் ஓவியத்தை வரையவேண்டிய பொறுப்பும் நல்லசிவத்துக்கே வந்துவிடுகிறது. முதலில் அவர் தயங்குகிறார். கலைஞன்தான் விலை போகக்கூடாது… கலை விலை போகலாம் என்ற முத்து ஒன்றை நாயகி உதிர்த்து அவரை அதற்கு ஒப்புக்கொள்ளவைக்கிறார். ஆனால், முதலாளித்துவ ட்யூனுக்கும் கம்யூனிஸ ஸ்டெப் வைத்தே ஆடுகிறார் நல்லசிவம். அந்த ஓவியத்தில் அருவாள், சுத்தியல், கார்ல் மார்க்ஸ், பால் பியரிங்குகள், சம்பள ரூபாய் 910 என அனைத்துக் குறியீடுகளையும் கலந்து பிரமிக்க வைக்கிறார்.
தன் மகள் ஒரு காம்ரேட்டைக் காதலிக்கிறார் என்பது படையாச்சிக்கு ஒருவழியாகத் தெரியவருகிறது. ஆனால், அந்த காம்ரேட் ஒரு ஒன் மேன் ஆர்மி என்பது தெரியாததால் ஆளைவிட்டு அடிக்க ஏற்பாடு செய்கிறார். காம்ரேட் நல்லசிவம் அனைவரையும் பந்தாடுகிறார். படையாச்சி அவரை காவல் துறையை ஏவிவிட்டுக் கைது செய்கிறார். சிறையில் அடைக்கப்பட்டவரை படையாச்சியின் மகள் ஜாமீனில் வெளியெடுக்கிறார். இது தெரியவந்ததும் கோபப்படும் படையாச்சி மகளை வீட்டுக்குள் அடைத்துவைத்து வேறொரு பணக்காரருக்கு திருமணம் செய்துதர முடிவுசெய்கிறார்.
ஆனால், காதலர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். ரஷ்யாவுக்கு ஃபிளைட் டிக்கெட் கிடைக்காததாலோ படத்தின் பட்ஜெட் இடித்ததாலோ என்னவோ கம்யூனிஸ்ட்களின் கோட்டையான கேரளாவுக்குச் சென்று எளிமையாகத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். தமிழகத் தோழர்களுக்கு ஒரு பாட்டாளி-முதலாளி காதல் ஜோடியைச் சேர்த்துவைக்க தைரியம் இல்லையா… காம்ரேட் நல்லசிவம் ஒருவரே ஒரு ராணுவத்தையே சமாளிக்கும் திறமை கொண்டவர்தானே… எதற்காக கேரளாவுக்கு அபயம் தேடி ஓடவேண்டும் என்ற பலத்த சந்தேகமெல்லாம் எழுந்தது. அதற்கான விடையை கமல்சார் படத்தில் பின்னால் நடக்கும் காட்சிகளில் அழகாகத் தந்திருக்கிறார்.
புரட்சித் திருமணம் இனிதே நடப்பதற்குத் தோதாக, வீட்டுச் சிறையில் இருந்த மகளைத் தனியாக கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் படையாச்சி அனுப்பிவைக்கிறார். மகளோ சென்னைக்குப் போகாமல் தப்பித்துவிடுகிறார். நல்லசிவத்துடனும் அவர் போகவில்லை. அவர் எங்குதான் போனார் என்பது மிகவும் சஸ்பென்ஸாகவே படம் முழுவதும் வைக்கப்படுகிறது.
இப்படியான நிலையில் நல்லசிவம் தன் தோழர் ஒருவருடன் பேருந்தில் கேரளாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அந்தப் பேருந்து விபத்தில் சிக்கிவிடுகிறது. அதில் உயிர் தப்பிக்கும் அதி சொற்ப நபர்களில் நல்லசிவமும் ஒருவர். அது எப்படித் தெரியுமா… உண்மையில் அந்த விபத்து ஒரு நாயினால் ஏற்படுகிறது. நல்லசிவம் ஏறிய பேருந்து மலைப் பாதையில் போகும்போது எதிரில் ஒரு கார் வருகிறது. அந்த காரைத் துரத்தியபடி ஒரு நாய் பின்னாலேயே ஓடிவருகிறது. அது திடீரென்று சாலையின் குறுக்கே வந்துவிடவே நாய் மீது மோதிவிடக்கூடாதென்று பேருந்து ஓட்டுநர் வண்டியை வேகமாகத் திருப்புகிறார். அது வினையாகிப் போய் பேருந்து மலையில் இருந்து உருண்டு கீழே விழுந்து நொறுங்கிவிடுகிறது.
நல்லசிவம் மட்டும் பிழைக்கிறார். இதில் ஒரு அற்புதமான காட்சி என்னவென்றால், அந்த விபத்துக்குக் காரணமான நாயை ஊரார் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள். அது விழுந்தடித்து உயிர் பயத்தில் ஓடுகிறது. கீழே பள்ளத்தில் நல்லசிவம் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் மிதக்கும் இடத்துக்கு வருகிறது. அதுவரை ஓடிவந்த நாய் அவரைப் பார்த்ததும் பேரன்பும் குற்ற உணர்ச்சியும் மேலிட அவர் அருகிலேயே மவுன அஞ்சலி செலுத்தியபடி உட்கார்ந்துவிடுகிறது. அந்த நேரம் பார்த்து நல்லசிவமின் தாடை லேசாக அசைகிறது. அந்தப் பேரூந்தில் பயணம் செய்தவர்களில் ஆகச் சிறந்தவர் உயிருடன் இருக்கிறார் என்ற நல்ல செய்தி தெரியவந்ததும் அந்த நாயானது மிகுந்த மனநிறைவுடன் அந்த இடத்தை விட்டுச் செல்கிறது. இந்தக் காட்சி உங்களைப் புல்லரிக்கவைக்கவில்லையா… நீங்கள் உண்மையிலேயே கல்நெஞ்சக்காரர்தான். இப்படியான கல் நெஞ்சக்காரர்கள் உலகில் நிறைய உண்டு என்பதால் அந்தக் கல்லைக் கரைக்க கமல்சார் இன்னொரு காட்சியும் வைத்திருக்கிறார்.
உடம்பு குணமானதும் நல்லசிவம் விபத்து நடந்த இடத்தை மீண்டும் பார்க்க வருகிறார். விபத்தில் உயிர் பிழைத்த உத்தமர் நம்மை இன்னும் வந்து பார்க்கவில்லையே என்ற சோகத்தில் அந்த நாயானது வெறும் சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு பிற எந்த கேளிக்கைகளிலும் ஈடுபடாமல் தவமிருந்துவருகிறது. நல்லசிவம் வந்து தன் உதட்டைக் குவித்து விஷ்க் விஷ்க் என்று சீழ்க்கையொலி எழுப்பியதும், இதற்குத்தானே இத்தனை நாளாக இந்த உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன் பிரபோ என்று துள்ளிக் குதித்து வாலாட்டியபடி ஓடிவருகிறது. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதப் பாசம் அல்ல… அதையும் தாண்டிப் புனிதமானது…புனிதமானது…புனிதமானது என்ற கர்ஜனையானது எக்கோ எஃபெக்டுடன் உங்கள் மனத்தில் கேட்கவில்லையென்றால், கரைவதற்கு உங்களிடம் கல்லால் ஆன இதயம் கூட இல்லை என்றுதான் அர்த்தம். அப்படியாக அந்த நாய் நல்லசிவத்திடம் தஞ்சம் அடைகிறது. ஆம்பளை நாயென்பதால் அதை அவர் தன்னுடைய மகனாக வளர்த்துவர முடிவெடுக்கிறார்.
ஃபிளாஷ் பேக் முடிந்து நாயகர்களின் சாகசப் பயணத்துக்குக் கதை திரும்புகிறது.
இந்த நாய் எபிசோடுக்கு முன்பாக இன்னொரு அபாரமான காட்சியும் இடம்பெறுகிறது. உடல் சரியானதும் நல்லசிவம் நேராக தன் காதலியைத் தேடிப் போகிறார். படையாச்சியோ தன் மகளுக்கு வேறொரு இடத்தில் திருமணமாகிவிட்டதாகவும் அவள் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்கிறார். அதை நல்லசிவம் அப்படியே நம்பிவிடுகிறார். தன் நண்பர்களிடம் அது உண்மையா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவெல்லாம் செய்வதில்லை. விபத்தில் நல்லசிவம் இறந்துவிட்டதாக இதற்கு முன்பாக படையாச்சி சொன்னபோது அவருடைய மகளும் அப்படியே நம்பத்தான் செய்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சகஜமாக வந்துபோய்க் கொண்டிருந்த நிலையிலும் அப்பா சொன்னது உண்மையா… இறந்தவரின் உடல் எங்கே என்றுகூட சக தோழர்களைக் கேட்காமல் இருந்துவிடுகிறார்.
இதுகூடப் பரவாயில்லை, ஒட்டு மொத்த சமூகமே இந்தப் பொய்யை ஏற்றுக்கொண்டு அதன்படியே நடக்கவும் செய்கிறது. யாரும் நாயகன் நாயகியிடம் எதுவும் சொல்லாமலேயே இருந்துவிடுகிறார்கள். சிவபெருமானின் முதுகில் பட்ட பிரம்பு அடி உலகில் இருந்த அனைத்து உயிர்களின் உடம்பிலும் பட்டதுபோல் சிவபெருமானின் ஆத்மார்த்தமான பக்தர் சொன்ன பொய்யானது ஒட்டுமொத்த சமூக மனத்தையும் வசியம் செய்துவிடுகிறது. விஞ்ஞான உலகம் மட்டுமல்ல மெய்ஞான உலகம் கூட திகைத்துப் போய்விடும்படியான ஒரு காட்சியை தனியொரு மனிதனாக சொந்த மூளையை உபயோகித்து சிந்தித்திருக்கும் கமல்சாரைப் பாராட்ட தமிழில் மட்டுமல்ல… ஒட்டுமொத்த உலகின் மொழிகளை சேர்த்தால்கூட வார்த்தைகள் பத்தாது.
சரி… நம்மைச் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு நாயகர்களின் சாகசப் பயணத்தைத் தொடருவோம். புவனேஷ்வரில் ரத்தான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் எப்படியோ அந்தக் குக்கிராமத்துக்கு வந்துசேர்கிறது. பகல் மணி 1.58 க்கு வந்து 2.2க்குப் புறப்படும் என்பதை வெகு நகைச்சுவையாக டூ டு டூ டு டூ டு என்று அந்த ஸ்டேஷன் மாஸ்டர் சொல்கிறார். ஆனால், ரயிலோ இரவிலே வந்து சேருகிறது. நல்லசிவமும் அன்பரசனும் ஏறுகிறார்கள். மினரல் வாட்டர் பாட்டிலை ஸ்டேஷனிலேயே வைத்துவிட்ட அன்பரசு அதை எடுத்துவரச் சொல்லி நல்லசிவத்தைக் கீழே இறக்கிவிடுகிறார். அந்த நேரத்தில் ரயில் புறப்பட்டுவிடவே, கதவு ஜாம் ஆகிவிட்டதுபோல் நடித்து நல்லசிவத்தை ரயிலில் ஏறவிடாமல் செய்துவிடுகிறார்.
ரயிலில் உத்தமன் என்பவருடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. டிப் டாப்பாக உடை அணிந்திருக்கும் அந்த நபர் ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் இவற்றை சரளமாகப் பேசுகிறார். அதையெல்லாம் பார்த்து அன்பரசு அசந்துவிடுகிறார். அந்த உத்தமனோ ஒரு பக்கா திருடன். ராத்திரியில் அன்பரசு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து அவனுடைய பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறான். மறுநாள் டி.டி.ஆர். வந்து, அதுபோல் பலருடைய பெட்டிகளை உத்தமன் திருடிக்கொண்டு போய்விட்ட விஷயத்தைச் சொல்கிறார். அதோடு முன்னால் போன ரயில் ஒன்று தடம் புரண்டுவிட்டதால் பாதை சரியாகும்வரை இரண்டு நாட்கள் இங்கேயேதான் இருக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
இதில் ஒரு தமாஷ் என்னவென்றால், ஒரு ரயில் தடம் புரண்டால், பின்னால் வரும் ரயிலை முந்தின ஸ்டேஷனிலேயே நிறுத்திவிடுவதுதான் வழக்கம். ஆனால், விபத்து தொடர்பான  சில காட்சிகள் படத்தில் இடம்பெற வேண்டியிருப்பதால் தன்னுடைய செல்வாக்கின் மூலம் விபத்து நடந்த இடத்துக்கு வெகு அருகே அடுத்த ரயிலைக் கொண்டுவந்து நிறுத்துகிறார் திரைக்கதை ஆசிரியரான கமல்சார். அன்பரசு அதில் இருந்து இறங்கிவந்து விபத்துக் காட்சிகளைப் பார்க்கிறான்.
இரவில் எப்போதோ பெட்டி படுக்கையைத் திருடிக்கொண்டு ஓடிய உத்தமன் அந்த விபத்துக்குள்ளான ரயிலிலும் திருடிக் கொண்டிருக்கிறான். மக்கள் அவனை பிடித்து அடிக்கிறார்கள். அவனோ திருடிய பொருட்களையெல்லாம் ஒரு சாமியாரிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறான். அவரும் அந்த கோர விபத்து நடந்த இடத்திலும் பெட்டி படுக்கைகள் புடை சூழ உட்கார்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தில் இதுபோல் திருடனாகவும், வில்லனாகவும் காட்டப்படுபவர்கள் இந்துக்கள். அடிபட்டவர்களுக்கு உதவும் நர்ஸ்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள். தன்னை முற்போக்கானவராகக் காட்டிக்கொள்ள (!?) கமல்சார் அடிக்கும் இது போன்ற சம்மர்சால்ட்கள் இந்தப் படத்தில் இன்னும் அதி உயரத்துக்குப் போகின்றன. விபத்தில் சிக்கி நல்லசிவம் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது ஒரு கம்யூனிஸ்ட் தோழர் கூட அருகில் இல்லை. சர்வம் கிறிஸ்தவ மயம். இந்துவாக இருந்துகொண்டு இந்துவை மோசமான ஒளியில் காட்டுபவர் கம்யூனிஸ்ட் வேடம் புனைந்ததும் தன்னுடைய ரத்தத்தில் ஊறியிருக்கும் சேம் சைடு கோல் சாமர்த்தியத்தை அங்கும் வஞ்சனையில்லாமல் வெளிப்படுத்திவிடுகிறார்.
அன்பரசுவின் ரத்த வகை மிகவும் அரிதான ஏபி நெகட்டிவ் க்ரூப். விபத்தில் சிக்கிய ஒரு சிறுவனுக்கு அந்த வகை ரத்தம் உடனே தேவைப்படுகிறது. ஆனால், அவரோ ரத்தம் கொடுக்க பயப்படுகிறார். ஒருவழியாக அவரை தைரியப்படுத்தி ரத்தம் கொடுக்க வைக்கிறார் நல்லசிவம். கால் ஊனமான அவர் அங்கு எப்படி முன்பாகவே வந்து சேர்ந்தார் என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுகிறதா? இது மாதிரியான கேள்விகள் வரும்போது நீங்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் தெரியுமா? இயக்குநர் ஒரு சீன் சொன்னா ரசிக்கணும். கேள்வி கேட்கக்கூடாது என்ற பொன்விதிப்படி கதை விவாதத்தில் பங்கெடுக்கும் உதவி இயக்குநர் பட்டாளமும் எழுத்தாள சாம்ராட்களும் எப்படிச்  செயல்படுவார்களே அதுபோல் நடந்துகொள்ளவேண்டும். ரோமாபுரியில் இருக்கும்போது ரோமாபுரியனாக இரு. தமிழ் படம் பார்க்கும்போது தமிழ் ரசிகனாக இரு என்ற உயரிய விதியை இதுபோன்ற படங்களால் ஆணி அறைந்தாற்போல் நிலைநிறுத்திவரும் கமல்சாரை நாம் பாராட்டாவிட்டாலும் உலகம் பாராட்டத்தான் செய்யும் என்பதை இந்த இடத்தில் நான் குறிப்பிட்டுச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த களேபரங்கள் எல்லாம் முடிந்தபிறகு அடுத்ததாக ஒரு காட்சி வருகிறது. அன்பரசின் ரத்தம் செலுத்தப்பட்ட சிறுவன் உயிர் பிழைத்துவிடுகிறான். விபத்து நடந்த இடத்தில் இருந்து அவனை உடனே ஏதாவது ஒரு மருத்துவமனைக்கு பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கவேண்டும் என்றுதானே நினைக்கத் தோன்றும். ஆனால், அன்பரசனுக்கு திருமணத்துக்கு வீடு திரும்ப வேண்டியிருக்கிறதே. அவருக்கு ஒரு வாகனமும் தேவைப்படுகிறதே. எனவே, அந்தச் சிறுவனை ஆம்புலன்ஸில் ஏற்றி அதிலேயே நல்லசிவமும் அன்பரசுவும் டாக்டரும் நர்ஸுமாக சென்னையை நோக்கி நெடும்பயணத்தை ஆரம்பித்துவிடுகிறார்கள்.
வழியில் ஒரு கடையில் இறங்கி டீ குடிக்கிறார்கள். அந்தச் சிறுவனுக்கு மூச்சு முட்டுகிறது. நர்ஸும் டாக்டரும் வேனுக்குள் நுழைந்து சிகிச்சை தருகிறார்கள். பலன் தராமல் இறந்துவிடுகிறான். அன்பரசு அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுகிறான். இந்த சோகமயமான காட்சியிலும் நல்லசிவம் கடவுள் குறித்த தன் தத்துவத்தைத் தெளிவாக முன்வைக்கிறார். தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றும் முன்பின் தெரியாத சிறுவனுக்காக அழும் அன்பரசுவைப் போன்றவர்கள்தான் அந்தக் கடவுள் என்றும் அருமையாகச் சொல்கிறார். நீங்களும் நல்ல மனிதர்தான் என்று அன்பரசு சொல்கிறார். அது எனக்குத் தெரியும் என்று கர்வமாகச் சொல்லிவிட்டு கமல் நகர்கிறார். அன்பரசு, அந்த பதிலால் புளகாங்கிதம் அடைந்து, நீர் ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமய்யா என்பதுபோல் ஒரு ஆங்கில வாசகம் ஒன்றைச் சொல்லிவிட்டு பின்னாலேயே சிரித்தபடி செல்கிறார். இதெல்லாம் அந்த சிறுவன் இறந்து கிடக்கும் ஆம்புலன்ஸுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு, அதுவும் அவன் இறந்த அடுத்த நிமிடமே நடக்கும் உரையாடல். இப்படியாக பெரும் சோகத்தை டக் என்று மறந்துவிடும் மாயக் கலை கைவரப்பெற்றிருப்பது அப்படி ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. இதுபோல் பின்னால் வரும் ஒரு காட்சியில், தன் முகத்தில் இருக்கும் தழும்புகள் குஜராத்தில் ஷேவிங் செய்யப் போனபோது பூகம்பம் ஏற்பட்டதால் அதில்பட்ட காயம் என்று மிகப் பெரும் சோகத்தை வேடிக்கையாகக் குறிப்பிட்டு தனக்கு இருப்பது தடித்த தோல் என்பதை அழகாக உணர்த்தியிருக்கும் விதம் மெச்சத் தகுந்த ஒன்றே.
ஆம்புலன்ஸ் சென்னையை வந்தடைகிறது. நல்லசிவத்திடமிருந்து அன்பரசு  விடைபெற்றுப் போகிறார். ஆனால், நல்லசிவம் கொண்டுவந்த 32 லட்ச ரூபாய் செக் அன்பரசுவிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறது. நல்லசிவம் கொடுத்த முகவரியை வைத்துக்கொண்டு தேடி போய்ப் பார்க்கிறான். அந்த முகவரியில் இருப்பது நல்லசிவத்தின் வீடு அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம். நல்லசிவத்துக்கு வீடு வாசல் கிடையாது. திருமணம் ஆகவே இல்லை. மகன் என்று சொன்னது ஒரு நாயைத்தான் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவருகின்றன. நெகிழ்ந்துபோகும் அன்பரசு, நல்லசிவத்தைத் தன் அண்ணனாக ஏற்றுக்கொண்டு தன்னுடன் அழைத்துச் செல்கிறான். இந்த இடத்தில்தான் ஒரு அபாரமான ட்விஸ்ட் வருகிறது. அன்பரசு திருமணம் செய்து கொள்ளப்போவது யார் தெரியுமா? நல்லசிவம் காதலித்த அதே பாலாதான்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், படையாச்சி கோவையைச் சேர்ந்த வியாபார காந்தம். ஆனால், தன் மகளின் திருமணத்தை சென்னையில் கொண்டாடுகிறார். திருமண வீட்டில் படையாச்சி யதேச்சையாக நல்லசிவத்தைப் பார்த்துவிடுகிறார். இங்கு எதற்காக வந்தாய். திருமணத்தை நிறுத்த வந்தாயா? ஓடிப் போய்விடு என்று மிரட்டுகிறார். நல்லசிவமோ, மரியாதையாகப் பேசுங்கள். நான் மாப்பிள்ளை அன்பரசுவின் அண்ணன் என்கிறார். அதைக் கேட்டு அரண்டுவிடும் படையாச்சி பணிந்துபோய் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்கிறார். நல்லசிவமும் எனக்குப் பணம் தரவேண்டாம். தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்துக் கொடுங்கள். அது மட்டும் போதும் என்று கேட்டுக்கொள்கிறார்.
விபத்தில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிய காலகட்டத்தில் ஒரு தோழர்கூட அருகில் இருந்து உதவிசெய்திருக்காத போதிலும் நல்லசிவம் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் தொழிலாளர் நலனே தன்னுடைய நலன் என்று சொல்கிறார். படையாச்சியும் வேறு வழியில்லாமல், தொழிற்சங்க ஆட்களை அழைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுகிறார். அப்படியாக, கோவைத் தொழிலாளர்கள் பிரச்னைக்கு சென்னை தொழிற்சங்கவாதிகள் கையெழுத்துப் போட்டு ஒப்பந்தம் செய்துமுடித்துவிடுகிறார்கள். ரஷ்யாவில் உட்கார்ந்துகொண்டு ஒரு கமிசார் குழு ஒட்டுமொத்த உலகத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு சொல்லும்போது சென்னைக்காரர்கள் கோவைப் பிரச்னைக்குக் கையெழுத்துப் போடக்கூடாதா என்ன என்ற அபாரமான கேள்வி இந்தக் காட்சியில் ஒளிந்துகிடப்பதை நாம் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.
நல்லசிவம் தன் காதலை மீண்டும் தியாகம் செய்து தொழிலாளர் பிரச்னையைத் தீர்த்துவைக்கிறார். இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். பாலாவுக்குத் திருமணம் ஆனதாக படையாச்சி முதலில் பொய் சொன்னதும் அதை அப்படியே நம்பியவர் கோவைத் தொழிலாளர் பிரச்னையை அம்போ என்று விட்டுச் சென்றுவிட்டார். ஆனால், அதைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்ததும் பாய்ந்து கபக் என்று பற்றிக்கொண்டுவிடுகிறார். அப்படியாக, ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் புரட்சிக் கொக்கு என்று கமல்சார் பழைய பழமொழிக்கு புதிய பதவுரை எழுதிவிட்டிருக்கிறார்.
க்யூபாவில் கடமை முடிந்ததும் காங்கோ, பொலிவியாவுக்குப் புறப்பட்ட சே குவெரா போல் நல்லசிவமும் கோவைத் தொழிலாளர் பிரச்னை தீர்ந்ததும் அடுத்த இடம் தேடித் தன் சிறகுகளை விரிக்கிறார். அதற்கு முன்பாக, அன்பரசுவிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு தன் ‘மகனை’ அழைத்துக்கொண்டு விடைபெற்றுச் செல்கிறார். படையாச்சி இப்போது தன் அடியாளை அழைத்து நல்லசிவத்தை வெட்டிக் கொல்லும்படி உத்தரவிடுகிறார். இதை அவர் முன்னாலேயே செய்திருக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால், அப்படியெல்லாம் செய்தால், க்ளைமாக்ஸ் எடுபடாமல் போய்விடும் என்பதால், ஆற அமர யோசித்து ஒப்பந்தமெல்லாம் கையெழுத்தான பிறகு கொல்லச் சொல்கிறார். அருவாளை எடுத்துக்கொண்டு பின்னாலே வரும் அடியாள், அன்பரசுவுக்கு நல்லசிவம் எழுதிக் கொடுத்த கடிதத்தைப் படித்துப் பார்த்து நல்லசிவமின் நல்ல மனதைப் புரிந்துகொண்டு அவரைத் தப்பித்துப் போகவிட்டுவிடுகிறார். நல்லசிவமும் அவருடைய ஈரமான மனதைப் போலவே மழை பெய்து நனைந்திருக்கும் சாலையில் மெள்ள நடந்து செல்கிறார். நம்மையும் கண்ணீரால் நனைந்த இதயத்துடன் வீடு திரும்ப வைக்கிறார்.
(தொடரும்)
0
B.R. மகாதேவன்

கருத்துகள் இல்லை: