
பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியையும் அது கேட்டுள்ளது.
அதாவது கடல் மார்க்கமாக அக்காலத்தில் வந்த கப்பல்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் முழ்கியிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ள சீன அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளது. பட்டுப்பாதை என்பது பண்டைய காலத்தில் வண்டிகளும் கடற்கலங்களும் பயணம் செய்த பாதையாகும்.
ஆசியாவுக்கு ஊடாக சென்று ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைத்த பெருமையைப்பெறும் தரைவணிகப்பாதையாக விளங்கும் பட்டுப்பாதை சுமார் இரண்டாயிரம் வருட வரலாறு கொண்டது என்பது முக்கிய விடயம். ஐரோப்பாவிலிருந்து தரை மார்க்கமாக எகிப்து, அரேபியா ,பாரசீகம் (இன்றைய ஈரான்) இந்தியா ஆகிய நாடுகளூடாக சீனாவின் தென் பகுதி வரை இந்த பட்டுப்பாதை செல்கிறது.கடல் மார்க்கமாகப் பார்த்தால் மத்திய தரைக் கடலிலிருந்து ஆரம்பிக்கும் பாதை ஆபிரிக்காவிற்கு ஒரு பிரிவாகவும் அரேபியா,ஈரான் வழியாகவும் அங்கிருந்து இந்தியா மற்றும் இலங்கையை ஊடறுத்து சீனா மற்றும் தென்கிழக்காசியாவின் ஜாவா வரை செல்கிறது. உண்மையில் ஆசியா கண்டத்தின் தென்பகுதிகளையே கூடுதலாக இப்பாதை இணைக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னர் கூட ரூபவாகினி தொலைகாட்சியில் கூடஞு குடிடூடு கீணிச்ஞீ என்ற விவரணம் தொடராக ஒளிபரப்பாகியது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். இதன் முக்கியத்துவம் உணரப்படுவதற்குக்காரணம் பண்டப்பரிமாற்றங்கள் ஊடாக குறிப்பிட்ட நாடுகளிடையே வளர்ந்த நாகரிக வளர்ச்சிதான்.
அதாவது குறிப்பிட்ட மார்க்கமாக வணிகப்பரிமாற்றம் மட்டும் இடம்பெறவில்லை. இப்பாதை ஊடறுத்துச்செல்லும் வழியில் உள்ள நாடுகள்,நகரங்கள், அங்கு வாழும் மக்கள் பற்றியும் அவர்களின் நாகரிகங்கள் பற்றியும் பல தகவல்கள் பரப்பப்பட்ட அதே வேளை புதிய உலகொன்றை உருவாக்கும் வளர்ச்சிக்கும் இவை வித்திட்டன.மொழி மற்றும் பண்பாடு வளர்ச்சிக்கு இந்தப் பட்டுப்பாதை அளப்பரிய சேவையாற்றியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
பண்டைய சீனா, எகிப்து , ரோம்,மெசபெத்தேமியா,பாரசீகம்,இந்தியா ஆகிய நாடுகளின் நாகரிக வளர்ச்சிக்கு இந்தப் பட்டுப்பாதை உறுதுணை புரிந்துள்ளது என்பது உண்மையே.இப்பெயர் வரக்காரணம் சீனாவின் கிழக்கு மாநிலமான ஷெங்சியானின்( The Silk Road) பழம்பெரும் நகரான சிஆனிலிருந்து மத்தியதரைக் கடல் வரை செல்லும் மார்க்கத்தில் சீனாவின் பிரபல பட்டுத்துணிகளைக் கொண்டு சேர்ப்பதே அக்காலத்தின் பிரதான வணிகமாக இருந்தது. அக்காலத்தில் சீனாப்பட்டிற்கு உலகளவில் ஏற்பட்ட வரவேற்பே இதற்குக்காரணம்.ஆகையால் இம்மார்க்கமூடாக பட்டுத்துணிகளே ஆரம்பத்தில் கொண்டு செல்லப்பட்டன.
இதன் காரணமாக இது பட்டுமார்க்கம் (the silk Route) ) அல்லது பட்டுப்பாதை என அழைக்கப்படலாயிற்று. பட்டுப்பாதையின் மொத்த நீளம் சுமார் 7ஆயிரம் கிலோ மீற்றர்களாகும் சீனாவிற்குள்ளேயே இது அரைவாசிப்பகுதியை கொண்டுள்ளது என்பது தான் விசேட அம்சம்.
எனினும் காலப்போக்கில் ஏனைய விடயங்களையும் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு இது விரிவடைந் தது.காலப்போக்கில் நாடுகளிடையேயான எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டவுடன் இந்தப் பட்டுப்பாதையும் கைவிடப்பட்டது. பட்டுப்பாதையின் மொத்த நீளம் சுமார் 7ஆயிரம் கிலோ மீற்றர்களாகும் சீனாவிற்குள்ளேயே இது அரைவாசிப்பகுதியைக் கொண்டுள்ளது என்பது தான் விசேட அம்சம்.
எனினும் சீனாவில் இன்றும் இந்த மார்க்கம் உல்லாசப்பயணிகளால் பெரிதும் கவரப்பட்டு வருகின்றது. இந்த பட்டுப்பாதை ஆரம்பிக்கப்பட்ட காலகட்டம் கி.மு 202 ஆம் ஆண்டு ஆகும். இது ஹான் (The Han Dynasty)என்ற அரசமரபுக்குரிய காலகட்டம்.
இந்தப் பரம்பரையினர் கி.மு 202 இலிருந்து கி.பி 220 வரை 426 ஆண்டுகள் சீனாவை ஆண்டனர்.இந்த காலகட்டம் சீனாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகின்றது. கைப்பணி ,வணிகம்,விவசாயம் ஆகிய துறைகளில் சீனா முன்னேறியிருந்தது மட்டுமல்லாது இக்காலகட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை 5 கோடியையும் தாண்டியிருந்தது என குறிப்புகள் கூறுகின்றன.
பட்டுப்பாதை வழியாக வணிகம் இடம்பெறும் போது எச்சந்தர்ப்பத்திலும் வணிகர்களுக்கு இன்னல்கள் வரக்கூடாது என்பதில் இவர்கள் அக்கறையாக இருந்தனர். இதற்காக இவர்கள் பட்டுப்பாதை வழியெங்கும் காவற்கோபுரங்களை அமைத்திருந்தனர்.இன்றும் கூட அம்மார்க்கத்தில் சிதைந்த நிலையிலான காவற்கோபுரங்களைக் காணலாம்.
ஆய்வுக்கான காரணங்கள் சரி .இனி சீனா ஏன் இந்த இரண்டாயிரம் வருடம் பழமையான பாதை பற்றிய ஆய்வை மேற்கொள்ளப்போகின்றது என்பதையும் பார்க்க வேண்டும்.
கடல் மார்க்கமாக சீனாவுக்கு வந்த சுமார் 75 கப்பல்களின் சிதைவுகள் காலி துறைமுகத்தை சூழவுள்ள பகுதிகளில் இருப்பதாக தெரிவித்துள்ள சீனா இதில் 25 கப்பல்களின் சிதைவுகள் குறித்த ஆவணங்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேற்படி கப்பல்களை ஆராய்வதற்கு நிபுணர்களை ஈடுபடுத்துவது குறித்தே அனுமதியை சீனா கேட்டுள்ளது.
கடலுக்கடியில் இருக்கும் கப்பற் சிதைவுகளை ஆராயும் அளவிற்கு சீனாவின் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதா என இந்தியாவும் அமெரிக்காவும் வாய் பிளக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு இதில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
ஏற்கனவே இலங்கையில் தனது தலையீட்டை பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் ஸ்திரப்படுத்தியிருக்கும் சீனா, கப்பல் ஆராய்ச்சி என்ற பெயரில் தனது பிராந்திய பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு அதற்கு தக்கபடி திட்டங்களை வகுக்கப்போகின்றதோ என்ற அச்சமும் இந்தியாவுக்கு தோன்றாமலில்லை.
பிராந்திய வல்லாதிக்கம் என்ற விடயத்தில் இந்தியாவும் சீனாவும் தென்னாசியாவிலுள்ள பல சிறிய நாடுகளை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தம்வசப்படுத்தி வருகின்றன.
துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய கட்டுமானத்திட்டங்களுக்கு இலங்கைக்கு சீனாவே பல வழிகளில் உதவி வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ள சீனா அனுமதி கேட்கும் போது இலங்கைக்கு மறுக்கத்தான் முடியுமா? இது தொடர்பாக பரிசீலனை இடம்பெற்று வருவதாக இலங்கை தொல்லியல் திணைக்களம் கருத்துத்தெரிவித்துள்ளது.
இவ்விடயத்தில் நழுவல் போக்கை இலங்கை கடைபிடிக்க முடியாது. அதே நேரம் தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வழிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது என இந்தியா பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்து வருகின்றது.
இன்னமும் சில நாட்களில் இராமாயண காலத்து பாலம் குறித்து ஆராய இந்தியா இலங்கையிடம் அனுமதி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு நாடுகளிடம் அகப்பட்டுக்கொண்டு முழி பிதுங்கி நிற்கும் நிலை இலங்கைக்கு வரப்போகின்றது என்பதே உண்மை. ___
virakesari.lk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக