செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணை கிடையாது-விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மேலும் சொத்துக் குவிப்பு வழக்கை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் விரைந்து முடிக்குமாறும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பது வழக்கு.
இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக பெங்களூர் தனிக் கோர்ட்டில் பல்வேறு இழுத்தடிப்புகளுடன் நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தரப்பினர் பல்வேறு காரணங்களை முன்வைத்து வழக்கை இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வராக மே மாதம் ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

புதிய மனு என்ன?

ஜெயலலிதா பொறுப்பேற்றதும் ஜூன் மாதம் தலைமைச்செயலாளர் தலைமையிலான கூட்டத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணை நடத்தக் கோரி முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இம்முடிவைக் காரணம் காட்டி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ய மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில்...

இறுதியாக ஜெயலலிதா தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மனு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசின் புதிய அரசாணைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

அதிரடி தீர்ப்பு

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி வாதிட்டனர். எதிர்தரபில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்திலேயே ஜெயலலிதா தரப்பினர் மனுத்தாக்கல் செய்திருப்பதாக சுட்டிக்காட்டி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்த வழக்கில் எதுவித குறுக்கீட்டுக்கும் அனுமதிக்காமல் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை: