ஞாயிறு, 29 ஜனவரி, 2012

twitter டுவிட்டர்' தணிக்கை திட்டம்: புறக்கணிக்க மக்கள் முடிவு

நியூயார்க்: சமூக வலைத் தளங்களில் புகழ்பெற்ற, "டுவிட்டர்' நிறுவனம், நாடுகளுக்கு ஏற்றாற்போன்ற தணிக்கை முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து, அந்த சமூக வலைத் தளத்தைப் புறக்கணிக்கப் போவதாக, மக்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்தியாவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைப் பற்றி, கிண்டலான செய்தி, இணையதளம் ஒன்றில் வெளிவந்தது. இதையடுத்து, கூகுள், யாகூ உள்ளிட்ட இணைய நிறுவனங்களும், "பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும், தங்களுக்கு வரும் செய்திகளை, இந்திய சட்டப்படி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த முயற்சி, எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால் என, பலர் கொதித்தெழுந்தனர். இறுதியில், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், அத்தகைய தணிக்கைக்கு சாத்தியமே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தன.


இவ்விவகாரத்தில், புதிய திருப்பமாக, "டுவிட்டர்' நிறுவனம், நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு, செய்திகளைத் தணிக்கை செய்யப் போவதாக அறிவித்தது. மேலும், தணிக்கை செய்யப்பட்டதற்கான காரணம், அந்தந்த நாட்டு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் தணிக்கைக் கோரிக்கைகள் ஆகியவற்றையும் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, இணைய உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதே நேரம், "டுவிட்டர்' பயன்படுத்துவோர் மத்தியில், பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.இதையடுத்து, அவர்கள், "டுவிட்டரின்' இந்த திட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

சீனாவின் பிரபல ஓவியர் அய் வெய் வெய் தெரிவித்த "டுவிட்'டில், "டுவிட்டர், இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், நான் இனி "டுவிட்' டே பண்ண மாட்டேன்' எனத் தெரிவித்து உள்ளார். நீண்ட காலமாக, சீனாவில், "டுவிட்டர்' தடை செய்யப்பட்டுள்ளது. அதை சமாளிக்கும் வகையில், இத்திட்டத்தை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை: