புதன், 1 பிப்ரவரி, 2012

தி.நகரில் தீ விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை : சி.எம்.டி.ஏ., பதில்

சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில், தீ விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை' என, ஐகோர்ட்டில் சி.எம்.டி.ஏ., பதிலளித்துள்ளது. அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி, தி.நகரில் கட்டடங்கள், வணிக வளாகங்கள், கடைகள் கட்டப்பட்டதாகக் கூறி, அவற்றுக்கு, "சீல்' வைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில், கட்டடம் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள், வியாபாரிகள் சங்கங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. இம்மனுக்கள் கடந்த வாரம், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தன. அரசும், சி.எம்.டி.ஏ.,வும் பதிலளிக்க, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, 7ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இதையடுத்து, சி.எம்.டி.ஏ., தாக்கல் செய்த பதில் மனு: கடந்த அக்டோபர் 31ம் தேதி, ஆறு கட்டடங்களுக்கு, "சீல்' வைக்கப்பட்டது. சட்ட வழிமுறைகளை பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் கட்டடங்களுக்கான திட்ட அனுமதியை கேட்டு, முதலில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களிடம் பதில் பெறப்பட்டு, பைசல் செய்த பின், குறைகளை நிவர்த்தி செய்ய அவகாசம் வழங்கி, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின், கட்டடங்களுக்கு, "சீல்' வைத்தோம். சீலிடப்பட்ட கட்டடங்கள் பலவற்றில், தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. கட்டடங்களைச் சுற்றி, தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு, போதிய இடமில்லை. கண்காணிப்புக் குழுவின் அறிவுறுத்தலின்படி, தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் தீ விபத்து பாதுகாப்பு ஏற்படுகளை, தீயணைப்புத் துறை ஆய்வு செய்தது. அதன்படி பார்த்தால், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் தீ விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பது தெளிவாகிறது. அனுமதிக்கப்பட்ட தளங்களில் செய்துள்ள மாற்றங்கள், குறிப்பிட்ட எல்லையை மீறுவதாக இருந்தால், அவை நடவடிக்கைக்கு உட்பட்டது. அரசு தான், மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. சி.எம்.டி.ஏ., அல்ல. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவும் விலக்கப்பட்டு விட்டது. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: