திங்கள், 30 ஜனவரி, 2012

30 லட்சத்தைத் திருப்பிக் கேட்டதால் அதிமுக மா.செ.வை கொலை செய்தாரா ராவணன்?


கோவை: மாவட்டச் செயலாளர் பதவி தர எனது தந்தை ரூ. 30 லட்சம் பணத்தை ராவணனிடம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி மாவட்டச் செயலாளர் பதவியை ராவணன் வாங்கித் தரவில்லை. இதையடுத்து பணத்தைத் திருப்பிக் கேட்டபோது உயிருடன் ஊர் திரும்ப மாட்டாய் என எனது தந்தையை எச்சரித்தார் ராவணன். இந்த நிலையில்தான் எனது தந்தை விபத்தில் இறந்ததாக தகவல் வந்தது. ஆனால் ராவணன்தான் எனது தந்தையைக் கொலை செய்துள்ளார் என்று நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராஜின் மகன் சதீஷ் குமார் புகார் கூறியுள்ளார்.இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸாரை நீலகிரி மாவட்ட எஸ்.பி கேட்டுக் கொண்டுள்ளார். புகாரில் முகாந்திரம் இருக்குமானால் செல்வராஜ் விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு அவர் அதிலும் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சதீஷ் குமார் கூறுகையில், எனது தந்தை அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்த போது ராவணன் எனது தந்தையிடம் நீலகிரியை சேர்ந்த 10 பேருக்கு அ.தி.மு.க.வில் மாவட்ட பதவி கொடுக்கும்படி உத்தர விட்டார். ஆனால் எனது தந்தை, அந்த பத்து பேரும் எந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது இல்லை. ஆகையால் பதவி கொடுக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டார். பின்னர் தந்தையின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் கேட்டபோது மறுக்கப்பட்டு விட்டது. மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வாங்கும் நோக்கில் ராவணனை எனது தந்தை சந்தித்து பேசினார். அப்போது அவர் ரூ. 30 லட்சம் கொடுத்தால் மாவட்ட செயலாளர் பதவி வாங்கித் தருவதாக கூறினார்.

இதனை நம்பி எனது தந்தையும் ரூ.30 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர் கூறியபடி செயலாளர் பதவி வாங்கித்தரவில்லை. இது சம்பந்தமாக எனது தந்தை சென்னையில் ராவணனை சந்தித்து பேசினார். அப்போது ராவணன் ரூ. 30 லட்சமும் கட்சி நிதியாகத்தான் தந்துள்ளாய். மாவட்ட செயலாளர் பதவி வாங்கித்தர முடியாது என கூறி மறுத்து விட்டார். இதனால் எனது தந்தைக்கும், ராவணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எனது தந்தை கட்சி தலைமையிடம் புகார் தெரிவிக்கப்போவதாக ராவணனிடம் கூறினார். உடனே ராவணன் நீ அப்படி செய்தால் உயிரோடு ஊருக்கு செல்ல முடியாது என மிரட்டினார்.

கடந்த மாதம் 13-ந் தேதி எனது தந்தை நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பிவரும் வழியில் சூலூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறினார்கள். எனது தந்தை நாமக்கல்லுக்கு சென்றுவரும் போது வழக்கமாக பெருந்துறை அவினாசி வழியாகத்தான் வருவார். ஆனால் விபத்து நடந்த அன்று பல்லடம் வழியாக வந்துள்ளார்.

டிரைவரிடம் இது குறித்து கேட்டால் பாதை மாறி வந்து விட்டதாக கூறுகிறார். என் தந்தையுடன் இருந்தவரிடம் கேட்டால் தூங்கி விட்டதாக கூறுகிறார். மேலும் விபத்தில் டிரைவரும், உடன் இருந்தவரும் லேசான காயங்களுடன் தப்பி விட்டனர். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது தந்தை விபத்தில் இறக்கவில்லை. முன்விரோதத்தில் கொலை செய்திருக்கிறார்கள் என ஐ.ஜி.யிடம் வாய்மொழியாக புகார் தெரிவித்தேன். எனது தந்தையின் சாவிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காமல் ஓயமாட்டேன் என்றார்.

இந்த விவகாரம் குறித்து எஸ்.பி. உமா கூறுகையில்,

நீலகிரி மாவட்ட முன்னாள் செயலாளர் செல்வராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் சதீஷ்குமார் வாய்மொழியாக புகார் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து சூலூர் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர். லாரி டிரைவர், கார் டிரைவர் மற்றும் செல்வராஜ் உடன் இருந்தவர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்றார்.

மாவட்டச் செயலாளர் பதவி தருவதற்கு பெருமளவில் பணம் வாங்கியதாகவும், அதைத் திருப்பிக் கேட்டதால் கொலை செய்ததாகவும் ராவணன் மீது எழுந்துள்ள புகாரால் அவர் மீதான போலீஸ் பிடி மேலும் இறுகும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: