ஞாயிறு, 29 ஜனவரி, 2012

சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்?


Viruvirupu.com முன்னாள் அமைச்சர் வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரது பதவி பறிபோனதுடன் சேர்த்து அமைச்சர் பதவி போயிருக்க வேண்டிய ஒருவர் கடைசி நிமிடத்தில் தப்பித்துக் கொண்டார் என்கிறார்கள் அ.தி.மு.க. உள் விவகாரங்கள் அறிந்தவர்கள். கவர்னர் மாளிகைக்கு அனுப்ப தயாரான லிஸ்டில் ஆரம்பத்தில் இருந்தவை 3 பெயர்கள் என்கிறார்கள் இவர்கள். ஒரு பெயர் கடைசி நேரத்தில் பட்டியலில் இருந்து தூக்கப்பட்டதாம். எமக்கு கிடைத்த தகவலின்படி, அந்தப் பெயர், டாக்டர் விஜய்.  சுகாதாரத்துறை அமைச்சர்!

சசிகலா குரூப்புடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்ட பின்னரும், தொடர்பு வைத்திருந்த விபரம் தெரியவந்த காரணத்தால் மட்டும் இவரது பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. வேறு சமாச்சாரம் ஒன்றும் அதில் உள்ளதாக சொல்கிறார்கள்.
சசி குருப் வெளியேற்றப்பட்ட பின், சிலரது இல்லங்களில் அதிகாரபூர்வமற்ற ரெயிடுகள் நடைபெற்ற விபரத்தை விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம். ரெயிடு நடைபெற்ற நேரத்தில் சசிகலா சின்டிகேட் முக்கிய நபர் ஒருவர் வீட்டில் இருக்கவில்லை. ரெயிடுக்குச் சென்றவர்கள் தேடிச்சென்ற சில பொருட்களும் அங்கே இருக்கவில்லை. வீட்டில் வேலைக்காரர்கள் இருவரைத் தவிர யாருமில்லாத நிலையில் ரெயிடும் நடக்கவில்லை.
ரெயிடு வருவதற்கு சில மணி நேரத்துக்குமுன் குறிப்பிட்ட நபர், இரு சூட்கேஸ்களுடன் வெளியேறிச் சென்றார் என்ற தகவல்தான் கிடைத்திருந்தது.
அருண் மருத்துவமனை
அவரது நடமாட்டங்கள் தொடர்பாக துருவத் தொடங்கிய உளவுத்துறையின் டீம் ஒன்று, ரெயிடு நடைபெற்ற நேரத்தில் அந்த நபர் சென்னையில் இருந்து வெளியேறி, வேலூரில் இருந்தார் என்பதைக் கண்டுபிடித்தது.
வேலூர் தியாகராஜபுரத்தில் உள்ள அருண் ஹாஸ்பிட்டல் என்ற தனியார் வைத்தியசாலையில் நோயாளி போல அன்று பகல் முழுவதும் தங்கியிருந்தார் என்பது உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்.
இந்த அருண் ஹாஸ்பிட்டல், சுகாதார அமைச்சர் விஜய்க்கு சொந்தமானது என்கிறார்கள்.
தவிர, சில விஷயங்களில் அமைச்சர் விஜய், பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் எக்ஸ்டென்டட் டீலிங்குகளை வைத்திருந்தார் என்று சொல்கிறார்கள்.
சசிகலா குருப் வெளியேற்றப்படுவதற்கு முன், ராவணனின் ராஜ்ஜியம் கோவையில் கொடிகட்டிப் பறந்த நாட்களில், அப்போதைய தொழில் துறை அமைச்சர் வேலுமணியும் ராவணனும் மேற்கொண்ட டீல் ஒன்றில் டாக்டர் விஜய்யின் பெயரும் அடிபட்டது. கோவை அரசு மருத்துவமனை தொடர்பான அந்த டீலில், சுகாதாரத்துறை அமைச்சரான விஜய்யின் கையொப்பம் தேவைப்பட்டது என்றும், அதற்காக அவர் கோவைக்கு வரவைக்கப்பட்டார் என்றும் தகவல் உள்ளது.
கோவை வந்த அமைச்சர் விஜய், ராவணன் டீல் தொடர்பாக கோவை அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்தபோது, அவருடன் அப்போதைய தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சென்றார். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வு என்று இந்த விசிட்டுக்கு காரணம் சொல்லப்பட்டதாம். கடந்த செப்டெம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த விவகாரம் கோவையில் நடைபெற்றதாக கூறுகிறார்கள்.
ராவணனின் பழைய டீல்கள் தொடர்பாக ஆராயத் தொடங்கியுள்ள உளவுத்துறை டீம் ஒன்றில் கண்களில் இந்த டீலும் சிக்கவே, டாக்டர் விஜய்யும் அவர்களுடைய வாட்ச் லிஸ்ட்டுக்குள் வந்திருக்கிறார்.
மேலே குறிப்பிட்ட இரு விவகாரங்கள் தொடர்பாகவே அமைச்சர் விஜய்யில் பதவி பறிபோக இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில், இந்த விவகாரங்கள் தொடர்பாக மேலும் ஆழமாக துருவ வேண்டும் என்ற காரணத்தால், அவரது தலை தப்பியது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
இப்போது அவரது பெயரில் ஒரு பைல் போடப்பட்டு உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்களில் தகவல் உள்ளது. அதில் ஏதாவது சிக்குகிறதா பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: