ஞாயிறு, 29 ஜனவரி, 2012

தமிழக அரசுக்குத்தான் அதிக நஷ்டம்.கூடங்குளம் இயங்காததால்

கூடங்குளம் இயங்காததால், மத்திய அரசுக்கோ, அணுசக்தி இயக்குனரகத்துக்கோ ஏற்படும் நஷ்டத்தை விட, மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டம் தான் அதிகம் என, இந்திய அணுசக்தி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்திய அறிவியல் ஆராய்ச்சி கூட்டமைப்பு சார்பில், கன்னியாகுமரியில் மாநாடு நடந்தது. இதில், இந்திய அணுசக்தி விழிப்புணர்வுத் துறை தலைவர் மற்றும் அணுசக்தி இயக்குனரக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், எஸ்.கே.மல்கோத்ராவுக்கு, அறிவியல் தொழில்நுட்ப சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற எஸ்.கே.மல்கோத்ரா, "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

* போராட்டக்காரர்களின் நோக்கம் என்னவென்று தெரியுமா?

இந்தப் பகுதியில் சுனாமி வந்தால் பாதிப்பு ஏற்படும் என, போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். கடந்த முறை சுனாமி வந்த போது, கன்னியாகுமரியில், கடலுக்குள் இருக்கும் திருவள்ளுவர் சிலை, தண்ணீரில் மூழ்கி விட்டதாக வதந்தி பரப்பியுள்ளனர். திருவள்ளுவர் சிலையின் மட்டத்தை விட, குறைந்த மட்டத்தில் கன்னியாகுமரி உள்ளது. திருவள்ளுவர் சிலை தண்ணீரில் மூழ்கியிருந்தால், நகரமும் மூழ்கியிருக்கும். இந்த அடிப்படை அறிவியல் காரணம் கூட தெரியாமல், அணு எதிர்ப்பாளர்கள் பொய் சொல்கின்றனர்.

* போராட்டத்தால் அணுசக்தி துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதா?

ரஷ்யாவிடம் குறிப்பிட்ட தொகையை கடன் பெற்று, முதலீடு செய்துள்ளோம். இதற்கு, கூடுதல் காலம் வட்டி தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், எத்தனை மாதங்கள் உற்பத்தி தள்ளிப்போகிறதோ, அந்த அளவுக்கு, மின்சாரம் விற்பனை செய்வதற்கான தொகை நஷ்டமாகும். இந்த திட்டத்தை பொறுத்தவரை, எங்களுக்கு நஷ்டம் என்பதை விட, இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கிடைக்காமல், மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டம் தான் அதிகம்.

* அணுமின் நிலையத்தில், குறைந்த உற்பத்தி திறனைத் தான் எட்ட முடியும் என சொல்கிறார்களே?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், செறியூட்டப்பட்ட யுரேனியம், ரஷ்யாவிலிருந்து தேவையான அளவுக்கு கிடைக்கிறது. இந்த நிலையத்தில், 90 சதவீத மின் உற்பத்தித் திறனை எட்ட முடியும்.இவ்வாறு மல்கோத்ரா கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: