வெள்ளி, 24 ஜூன், 2011

23 மீனவர்களை கச்சதீவில் அல்ல தலைமன்னாரில்தான் பிடித்தோம் இலங்கை அரசு

 இலங்கை சிறையில் உள்ள 23 தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 20ம் தேதி 700 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 2 ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 5 படகுகளுடன் 23 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றனர்.

அவர்கள் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் ஜூலை 1ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். இதற்கிடையே, இலங்கை சிறையில் உள்ள 23 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

இந் நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 இந்திய மீன்பிடி இழுவை படகுகள் மற்றும் அவற்றில் இருந்த 23 மீனவர்களை கடந்த 20ம் தேதி அன்று இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஊடகங்களில் செய்தி வெளியிட்டது போல, மேற்கண்ட சம்பவம் கச்சத் தீவுக்கு அருகில் நடக்கவில்லை. இந்த சம்பவம் இலங்கையின் தலைமன்னார் கடற்கரையில் இருந்து வெறும் 6 கடல் மைல் தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது.

எனவே, கடற்படை இலங்கையின் சட்டத்திற்கு உட்பட்டு அந்த மீனவர்களை கைது செய்தது. இந்த செயல், ஒரு நாட்டின் சட்டம் மீறப்படும்போது, அந்த நாடு எடுக்கும் வழக்கமான சட்ட நடவடிக்கை ஆகும். எனவே, இதுபோன்று சட்டப்பூர்வ கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதை சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடி, அட்டூழியம் என்றோ அல்லது கடத்துதல் என்றோ கூறுவது தவறு ஆகும்.

இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லைக்கோட்டை தாண்டும் விஷயத்தில் சுலபமான விதிமுறைகளை கையாண்டு, அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளில் நெருக்கமாகவும், சுமூகமாகவும், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகமும் தமிழக மீன்வளத்துறையும் செயல்பட்டு வருகின்றன.

கடல் எல்லைக்கோட்டை மீறியதற்காக கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்கள், அவர்களின் படகுகளுடன் தற்போது நீதிமன்ற காவலில் பாதுகாப்பாக உள்ளனர். உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, அவர்கள் மிக விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மீனவர்கள் கெளரவமாகவும், மனிதாபிமான முறையிலும் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் படகுகளுடன் உரிய நடைமுறைகள் முடிந்த பிறகு இலங்கை அதிகாரிகளால் விரைவில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்:

23 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, ரமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

English summary
The government of Sri Lanka said Thursday that it will soon release the 23 Tamil Nadufishermen arrested for fishing in Sri Lankan waters. "Following the due process of the law, they are expected to be released at an early date," Sri Lankan high commission in India said in a statement.
இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் அளவுக்கு மீறி உரிமம் கொடுத்த மதிய மாநில அரசுகல்மீது நஷ்ட ஈடு கோரவேண்டும். அடாவடித்தனமாக இலங்கை மீது பழி போடுவதை இனியாவது நிறுத்தி இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கவேண்டும்

கருத்துகள் இல்லை: