வெள்ளி, 24 ஜூன், 2011

எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலையில் ஆசிரியை கைது


எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி இவர் கோட்டூர்புரத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சுற்றி வளைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சொத்து தகராறு காரணமாக விஜயன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சுதாவின் தங்கை பானு, போலீஸ்காரர் கர்ணா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். விஜயனை கொலை செய்ய கூலிப்படையினருக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறி உள்ளது. சுமார் 4 1/2 லட்சம் ரூபாய் வரை கூலிப்படையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயன் கொலையில் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஆசிரியை புவனா. ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் பானு நடத்தி வரும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவரும், நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்த கர்ணாவும் ஒன்றாக படித்தவர்கள். கர்ணாவை, பானுவிடம் இவர்தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன்பிறகு கர்ணா மூலமாக விஜயனை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. விஜயன் கொலைக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்துவிட்டு புவனா துபாய்க்கு விமானத்தில் பறந்து விட்டார். இதனால் அவரை உடனடியாக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.
இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் விஜயன் கொலையில் சதிதிட்டம் தீட்டியதாக ஆசிரியை புவனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் புவனா, துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்றார். அங்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த அவரை பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாடினர்.

இதுதொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்டன. 2 வாரங்களுக்கு முன்னர் அபுதாபியில் வைத்து புவனா கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் புவனா சென்னைக்கு கொண்டு வரப்படுவார் என்று தெரிகிறது.  

விஜயன் கொலை வழக்கில் கைதானவர்களில் போலீஸ்காரர் கர்ணாவுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை. அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார்.

கருத்துகள் இல்லை: