புதன், 22 ஜூன், 2011

பார்ப்பனர் – பனியா ஒப்பந்தம்தான் இந்த சுதந்தரம். இந்த ஏமாற்றுத் திருவிழாவில் திராவிடர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்

மந்திரி குமாரியின் புண்ணியத்தில் கிடைத்த பணத்தைக் கொண்டு வேறொரு திட்டத்தை வகுத்தார் கருணாநிதி. கோவைக்குப் புறப்படுவதற்கு முன்பு நின்று போயிருந்த முரசொலி பத்திரிகையை மீண்டும் கொண்டுவரவேண்டும். அதற்கு கைவசம் இருந்த பணம் போதாது. வீட்டில் இருந்த மிச்சசொச்ச நகைகளில் சிலவற்றை எடுத்து அடகுவைத்தார். கணிசமாகத் தேறியதும் முரசொலியை மீண்டும் தொடங்கிவிட்டார்.
கருணாநிதியின் திட்டம் இதுதான். நல்ல அச்சகம் ஒன்றைப் பிடிப்பது. பிரதிகளை அவர்களிடம் அச்சடித்து வாங்கிக்கொள்வது. அவற்றை விற்பனையாளர்களுக்கு அனுப்புவது. அவர்களிடம் இருந்து பணம் வந்ததும் அச்சகத்துக்கான பணத்தைக் கொடுப்பது. எஞ்சிய பணத்தை செலவுக்கு வைத்துக்கொள்வது. கருணாநிதியின் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக கருணை ஜமால் என்பவர் தனது அச்சகத்தில் முரசொலியை அச்சடித்துக்கொடுக்க சம்மதித்தார்.
வழக்கம்போல கட்டுரைகளை எழுதும் பொறுப்பு கருணாநிதியுடையது. பத்திரிகையை அச்சடித்துக்கொடுப்பது ஜமாலின் பொறுப்பு. அவற்றை கருணாநிதியே தலையில் சுமந்துகொண்டு திருவாரூருக்கு எடுத்துவருவார். அவருக்கு உதவியாக முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் முரசொலிக் கட்டுகளை சுமப்பது வழக்கம்.
முரசொலி பத்திரிகைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. திராவிடர் கழகத் தொண்டர்கள் ஆர்வத்துடன் படித்தனர். இத்தனைக்கும் திராவிட இயக்கத்தின் சார்பாக குடி அரசு, விடுதலை, திராவிட நாடு உள்ளிட்ட ஏராளமான இதழ்கள் களத்தில் இருந்தன. ஆனாலும் முரசொலிக்கு நல்ல வரவேற்பு. என்ன ஒன்று. விற்பனையாளர்களிடம் இருந்து பணம் வருவது மட்டும் தாமதமாகிக்கொண்டே போனது. விளைவு, வீட்டில் இருந்த சின்னஞ்சிறு நகைகள் எல்லாம் அடகுக்கடைக்குள் அடைக்கலம் புகுந்தன. நித்திய கண்டம் பூரண ஆயுசு போல, முரசொலி இதழ் தட்டுத்தடுமாறி வெளிவந்துகொண்டிருந்தது.
இத்தனை சிரமப்பட்டு முரசொலியை நடத்த வேண்டுமா என்று நினைத்தார் கருணாநிதி. ஆம், நடத்தியே தீரவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஒன்று நடந்தது. இந்தியாவுக்குச் சுதந்தரம் தர பிரிட்டிஷார் முடிவுசெய்தனர். காங்கிரஸ் கட்சிக்கு எல்லையில்லா மகிழ்ழ்சி. 15 ஆகஸ்டு 1947 அன்று நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது காங்கிரஸ் கட்சி.
உடனடியாக திராவிடர் கழகத்தில் இருந்து அறிக்கை வெளியானது. அறிக்கை வெளியிட்டவர் திராவிடர் கழகத்தின் நிர்வாகத் தலைவர் தி.பொ. வேதாச்சலம். சுதந்தரத்தால் திராவிடர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஆகவே, அதைக் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என்றது அந்த அறிக்கை. அடுத்ததாக பெரியாரிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. பிரிட்டிஷார் – பார்ப்பனர் – பனியா ஒப்பந்தம்தான் இந்த சுதந்தரம். இந்த ஏமாற்றுத் திருவிழாவில் திராவிடர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றது அந்த அறிக்கை.
ஆக, சுதந்தர நாள் குறித்து இரண்டு முக்கிய அறிக்கைகள் வெளியாகிவிட்டன. ஆனால் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணா எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. திடீரென திராவிட நாடு இதழில் அண்ணாவின் அறிக்கை வெளியானது. சுதந்தர நாளை இன்ப நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதுதான் அந்த அறிக்கையின் சாரம்.
உண்மையில் தன்னுடைய அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னால் அதனை பெரியாரிடம் அனுப்பியிருந்தார் அண்ணா. அப்போது ஆகஸ்டு 15ஐ ஏன் இன்ப நாளாகக் கொண்டாட வேண்டும் என்று விரிவாக விளக்கியதோடு, அந்த நிலைப்பாட்டையே பெரியாரும் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் அண்ணா. ஆனால் அவருடைய கோரிக்கையை பெரியார் ஏற்கவில்லை. அதனையடுத்தே திராவிட நாட்டில் அண்ணாவின் அறிக்கை வெளியானது.
கட்சியின் தலைவரும் கட்சியின் பொதுச்செயலாளரும் இருவேறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்தது கட்சிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தக் குழப்பம்தான் முரசொலியை நின்றுவிடாமல் தடுத்து நிறுத்தியது. ஆம். பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளைக் களையவேண்டும்; தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை நீக்கவேண்டும்; அதற்கு முரசொலி அவசியம் என்ற முடிவுக்கு வந்தார் கருணாநிதி.
அண்ணாவின் வளர்ச்சியைப் பொறுக்காத சிலர்தான் இருவருக்கும் இடையே கலகம் மூட்டுகிறார்கள் என்பது கருணாநிதியின் சந்தேகம். அதனைப் பல தரப்பினரிடம் பேசி உறுதிசெய்துகொண்டார். அதன்பிறகு பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்துபவர்களை விமரிசித்துக் கட்டுரைகள் எழுதினார். இது சம்பந்தப்பட்டவர்களை ஆத்திரப்படுத்தியது. முரசொலி இதழைக் கொத்துக்கொத்தாக வாங்கி எரித்தனர். ஆனாலும் கவலைப்படாமல் தனது கருத்துகளை எழுதினார் கருணாநிதி. அந்தக் கருத்துகள் அண்ணாவின் கவனத்துக்குச் சென்றன. விளைவு, அண்ணாவும் கருணாநிதியும் மேலும் நெருக்கமாகினர்.
பிறகு திராவிடர் கழகத்தில் தோன்றிய பிரச்னைகள் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கின. வழக்கம்போல பத்திரிகை வேலைகளிலும் கட்சிக்கூட்டங்களிலுமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. இடைப்பட்ட காலத்தில் ஆண் குழந்தை பிறந்திருந்தது. தனது தந்தையின் பெயரையே மகனுக்கும் வைத்தார். மு.க. முத்து. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மனைவி பத்மா மரணம் அடைந்துவிட்டார். கருணாநிதிக்கு இளம் வயது. கையிலே குழந்தை வேறு. இரண்டாவது திருமணம் செய்துவைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகே திருமாகாளம் கிராமத்தைச் சேர்ந்த தயாளு என்ற பெண்ணை முடிவுசெய்தனர்.
திருமணச் செலவுகளுக்காக கருணாநிதி நாடகம் ஒன்றை எழுதினார். அதன் பெயர், தூக்குமேடை. விஷயம் கேள்விப்பட்டதும் அண்ணாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தூக்குமேடை நாடகத்துக்கு நானே தலைமை தாங்குகிறேன் என்று அறிவித்தார் அண்ணா. அந்த நாடகத்துக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு. அந்தப் பணத்தைக் கொண்டுதான் திருமண ஏற்பாடுகள் நடந்தன.
15 செப்டெம்பர் 1948. விடியற்காலை. மணமேடை தயார். மணப்பெண் தயார். மற்றவர்கள் தயார். ஆனால் மாப்பிள்ளையைக் காணவில்லை!
(தொடரும்)

கருத்துகள் இல்லை: