வியாழன், 29 ஜூலை, 2010

விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரக‌சிய ஆவணங்கள்,அமெரிக்க ???

ஆஃப்கானிஸ்தான் மக்களை தாலிபான் மற்றும் அல் கய்டா பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்க” 2001ஆம் ஆண்டு முதல் தாங்கள் நடத்திவரும் போரில், முழுமையாக ‘உதவி’வரும் பாகிஸ்தானிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் (100 கோடி) டாலர் நிதியுதவி அளித்துவரும் அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தானில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்நாட்டின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.தான் தாலிபான்களுக்கும், அல் கய்டாவிற்கு உதவியிருக்கிறது என்கிற அமெரிக்க (இராணுவ) உளவு அமைப்பு திரட்டிக் கொடுத்த இரகசிய ஆவணங்கள் இன்று உலகின் பார்வைக்கு வெளியாகியிருப்பதில் முகம் வெளிறிப்போய் உள்ளது.

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூ யார்க்கின் இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஆஃப்கானிஸ்தான் மீது (ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசை மிரட்டி தனது நண்பனாக்கிக் கொண்டு) போர் தொடுத்த அமெரிக்காவி்ற்கு, தனது நண்பனுக்கு இரண்டு முகங்கள் உண்டு என்பதை புரிந்துகொண்ட பின்னரும், அவனுடைய பயங்கரவாத முகத்தை உலகின் பார்வைக்கு கொண்டுவராமல், இன்று வரை ‘பாகிஸ்தான் துணையின்றி ஆஃப்கான் போர் சாத்தியமில்லை’ என்று கூறிவருவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை விக்கிலீக் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தொடங்கி, டெல்லியின் மக்கள் அதிகம் புழங்கும் சந்தைகள், அக்சார்தாம் கோயில், மும்பையின் புறநகர் ரெயில்கள், இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் என்று வரிசையாக பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த பின்னரும், தனது பாகிஸ்தான் நண்பனை விடாமல் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, பயங்கரவாத யுத்தத்தை தொடர்ந்துகொண்டிருந்த அமெரிக்கா, மும்பையின் மீது 2008ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தாக்குதலிற்குப் பிறகுதான், ‘தாக்குதலிற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’ என்று ஓரளவிற்கு பேச ஆரம்பித்தது. அமெரிக்காவின் அயலுறவு அமைச்சரிலிருந்து ஒபாமா வரை எல்லோரும் கண்டிக்கும் தொனியில் பேசினாலும், பாகிஸ்தானிற்கு கொடுக்க வேண்டியது எதையும் நிறுத்தவில்லை, ஆயுதங்கள் உட்பட.

பாகிஸ்தானின் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.பற்றி நேரிடையாக இந்தியா குற்றம்சாற்றிய போதெல்லாம், ஏதோ அந்த அமைப்பிற்கும் பாகிஸ்தானின் அரசிற்கும் எந்த சம்மந்தமும் இல்லாததுபோல், ‘குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பாகி்ஸ்தான் அரசிற்கு இந்தியா ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றுதான் சமாதானம் சொன்னதே தவிர, ஒருமுறை கூட, ஐ.எஸ்.ஐ.தான் பாகிஸ்தான் மண்ணில் இருந்து உருவெடுத்துவந்து இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு உதவுகிறது என்று ஒருபோதும் கூறவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் கூட, இந்தியா வந்திருந்த அமெரிக்க இராணுவக் கூட்டுப்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் மைக் முல்லன், “பாகிஸ்தானை தளமாகக் கொண்டு பயிற்சிபெற்று செயல்படும் லஸ்கர் இ தயிபா பயங்கரவாத இயக்கத்தினர் மும்பையில் நடத்தியதைப் போன்றதொரு தாக்குதலை இந்தியா மீது மீண்டும் நிகழ்த்த உள்ளனர்” என்று கூறியிருந்தார். அதுமட்டமின்றி, லஸ்கர் இயக்கம் சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அரசின், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவின்றி அந்த இயக்கம் எப்படி சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது என்பதை விளக்கவில்லை!

பாகிஸ்தானிற்குள் இருந்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டுவரும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக எந்த ஒரு கூட்டு நடவடிக்கை குறித்து என்றாவது அமெரிக்கத் தலைவர்கள் பேசியதுண்டா? இந்தியாவும் பாகிஸ்தானும்தான் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆகாத ஒன்றை மட்டும் பேசிவிட்டு, பிறகு இஸ்லாமாபாத்திற்குப் பறந்து செல்கின்றனர். அங்கு சென்று இதையெல்லாம் பேசுவதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்துக் கொண்டிருப்பதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பாராட்டிப் பேசிவிட்டு ஆஃப்கானிற்கு பறந்து செல்வர். இதுதான் அன்றுமுதல் இன்றுவரை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை: