திங்கள், 26 ஜூலை, 2010

கார் இறக்குமதி மோசடி: சசிகலா கணவர் நடராஜன்-உறவினர் பாஸ்கரனுக்கு 2 ஆண்டு சிறை

வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்ததி்ல் வரி ஏய்ப்பு செய்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனால், அவர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக அடுத்த மாதம் 13ம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய இந்தியன் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் சுஜரிதா, நடரஜானின் உறவினர் பாஸ்கரன் மற்றும் லண்டனில் வசிக்கும் யோகேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1994ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்தார் நடராஜன்.

நடராஜன் தனது தமிழரசி பப்ளிகேஷன் நிறுவனம் சார்பில் இதை வாங்கினார்.

3,000 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இந்தக் கார் பல கோடி மதிப்புடையது. இந்தக் காரின் ஆவணங்களி்ல் அது 1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் என்றும் குறிப்பிடப்பட்டு குறைவான வரி கட்டப்பட்டது.

ஆனால், சந்தேகமடைந்ச சுங்கத் துறையினர் விசாரணை நடத்தியதி்ல் அந்தக் கார் 1994ல் தயாரிக்கப்பட்ட, புத்தம் புதிய கார் என்பதும், வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து பழைய கார் போல காட்டியதும் தெரிய வந்தது.

இதன் மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 412 இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து நடராஜன், தமிழரசி பப்ளி கேஷன் நிர்வாகியான ஜே.ஜே.டிவி நிர்வாகியாக இருந்த சசிகலாவின் உறவினர் வி.என். பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், அயல்நாட்டு வர்த்தக சான்றிதழ் வழங்கிய சென்னை அபிராமிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் சுஜரிதா சுந்தர்ராஜன், உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ விசாரணையின்போது பவானி அரசுத் தரப்பு சாட்சியாக மாறினார். பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். எனவே நடராஜன், வி.என்.பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜாதா ஆகிய 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் நீதிபதி ரவிந்திரன் இன்று தீர்ப்பளித்தார். பாலகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டதால் அவர் மீதான வழக்கு தனியே பிரிக்கப்பட்டு விட்டது.

நீதிபதி தனது தீர்ப்பில், வெளிநாட்டு கார் இறக்குமதி வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.நடராஜன், வி.என். பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜரிதா சுந்தர்ராஜன் ஆகிய 4 பேர் மீதும் கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இவை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. இவற்றை ஏக காலத்தில் (இரண்டு ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும்.

தண்டனை பெற்ற 4 பேரில் நடராஜன், பாஸ்கரன், சுஜரிதா சுந்தர்ராஜன் ஆகியோர் தலா ரூ. 20 ஆயிரமும், யோகேஷ் பாலகிருஷ்ணன் ரூ. 40 ஆயிரமும் அபராதம் செலுத்த வேண்டும்.

இதைக் கட்டத் தவறினால் நடராஜன் உள்ளிட்ட 3 பேர் மேலும் மூன்று மாதமும் யோகேஷ் பாலகிருஷ்ணன் மேலும் 6 மாதமும் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் அவர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக அடுத்த மாதம் 13ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைத்தார் நீதிபதி.

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 26 Jul 2010 5:34 pm
இந்த விஷயமே மொத்தத்தில் ஒரு நல்ல காமெடிதான். இறக்குமதி செய்யப்பட இந்த வண்டியை வாங்கியதற்கான ரசீது என்று எதையுமே கேட்காமலா துறைமுகத்தில் இருந்து அனுமதித்தார்கள். வண்டியைப் பார்த்தால் புதிதாகவே இருந்திருக்கும். அப்படி அது ஓரிரு ஆண்டுகள் பழையதாக இருந்தாலும், ரசீது இருந்தே இருக்கும். இந்த இருவரைத் தண்டித்த அரசாங்கம், தனது தரப்பில் இந்த முறைகேடுக்குத் துணை போனவர்களையும் கண்டறிந்து தண்டிக்கட்டும்.


பதிவு செய்தவர்: ஜெயா கும்பல்
பதிவு செய்தது: 26 Jul 2010 2:58 pm
நாங்க வாய்தா மேல் வாய்தா வாங்கி ஏமாற்றுவோம் சாகும் வரை

கருத்துகள் இல்லை: