சனி, 31 ஜூலை, 2010

ராமேஸ்வரத்தில ராமர் கல் என கூறி 500, 1000 ரூபாய்க்கு விற்பனை

ராமேஸ்வரத்தில் மடம், சிறு கோயில்களில், தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை, ராமர் கல் என கூறி 500, 1000 ரூபாய்க்கு விற்பனைசெய்வது தொடர்கிறது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பலவகை பவளப்பாறைகள் உள்ளன. கடலில் சாக்கடை, ரசாயனக்கழிவு, வெட்டியெடுப்பது, தடை வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது, பாசி வளர்ப்பது போன்ற காரணங்களால் அழிந்து வரும் பவளப்பாறைகளை பாதுகாக்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பவளப்பாறைகளை வெட்டியெடுப்பது, வைத்திருப்பது சட்டவிரோத செயலாக அறிவிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் பவளப்பாறைகளை மிதக்கும் கல் என்றும், ராமர் பாலம் கல் என்றும் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. பவளப்பாறைகளில் மிதக்கும் தன்மை கொண்ட பாறைகளும் உண்டு. இந்த பவளப்பாறைகளை கடலுக்கு செல்லும் மீனவர்கள் எடுத்து வந்து, சில நூறு ரூபாய்களுக்கு விற்கின்றனர்.
இவற்றை ராமேஸ்வரத்தில் பல்வேறு மடங்கள் மற்றும் தனியார் கோயில்களில், "சிறிய தொட்டியில் நீர் ஊற்றி மலர்களுடன் மிதக்கவிட்டு ,"ராமர் தொட்டதால் இக்கற்களுக்கு நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது,' எனக்கூறி, பக்தர்களிடம் சிறிய கற்களுக்கு 500, 1000 ரூபாய்,' என, விற்பனை செய்கின்றனர். இதை விற்கும் பூஜாரிகள், இதற்காக சிறப்பு மந்திரங்கள் சொல்லி பாறையின் மேல் குங்குமம் வைத்து தருவர். பயபக்தியுடன் வாங்கி செல்லும் பக்தர்கள் நோய் தீராமல் ஏமாந்து போவதுதான் மிச்சம்.
இதனிடையே நேற்று மணிப்பூர் இம்பால் நகரில் இருந்து ராமேஸ்வரம் வந்த தினேஷ் (40) இங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 500 ரூபாய் கொடுத்து மிதக்கும் பவளப்பாறை கல்லை வாங்கினார். ""இதை தண்ணீரில் ஊறவைத்து அதன் நீரை குடித்தால் மூட்டுவலி, தலைவலி, வயிற்றுவலி, கால்வலி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தீரும்,'' என, பூஜாரி கூறியதாக தெரிவித்தார். ராமேஸ்வரம் பகுதியில் பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக பவளப்பாறைகளை விற்பனை செய்து, ஆயிரக்கணக்கில் பணம் பார்ப்பது தொடர்ந்தாலும், இவற்றை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர்

கருத்துகள் இல்லை: