புதன், 16 ஜூன், 2010

வரிக்கு வரி புளுகும் சீமான் செபஸ்டியன் இவருக்கு இன்னும் பொழுது விடியவில்லை

விழுப்புரம் குண்டுவெடிப்புச் சம்பவம் முழுக்க முழுக்க பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதியே, என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி நாம்தமிழர் இயக்க தலைவர் சீமான் இன்று கூறியதாவது:

தமிழர்கள் எவரும் இது போன்ற காரியத்தை செய்ய மாட்டார்கள். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்ற துண்டு பிரசுரம் கிடந்ததாக போலீஸ் சொல்கிறது.

பிரபாகரனே வன்முறைக்கு எதிரானவர்தான். 30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் மீது ஒரு அரசு ஏவிய பயங்கரவாதத்தை எதிர்த்துதான் போரிட்டார் அவரது எதிரிகள் சிங்கள ராணுவமும் ராணுவ தளவாடங்களும்தான். சிங்கள மக்கள் அல்ல. பலாலி விமான தளம் மீது தாக்குதல் நடத்திய போது பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடத்தை தாக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான தமிழ் பெண்களை சிங்களர்கள் பாலியல் பலாத்காரம் செய்த போதும் கூட, பதிலுக்கு ஒரு சிங்கள பெண்ணின் தாவணியை கூட தொட்டு இழுக்கவில்லை.

அப்படிப்பட்டவரின் பெருமையை கொச்சைப்படுத்துவதாக இந்த துண்டு காகிதம் உள்ளது. ஈழ விடுதலைக்கு போராடுபவர்களை தலை குனிய வைக்கவும் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பு போல் காட்டி முடக்கி போடவும் நடந்துள்ள சதித் திட்டமாகவே இது படுகிறது. ராஜபக்சேவை திருப்திப்படுத்த அரசுகளின் ஆதரவுடன் நடந்த சதி இது என்கிறேன்.

ஈழத்தில் போரை நிறுத்த சொல்லி இங்கு தமிழர்கள் போராட்டம் நடத்தியபோது ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லையே. மழையில் நனைந்தும், பட்டினி கிடந்ததும் முத்துக்குமார் போல் எரிந்தும் தன்னைத்தானே வருத்துகிற நிகழ்வுகள்தான் நடந்தன. கடும் மன அழுத்தத்தில் கூட வன்முறையில் ஈடுபடவில்லை. மொழிப் போராட்டத்தில் கூட தங்களை தாங்களே மாய்த்தனர்.

தமிழர்கள் முழு ஜனநாயகவாதிகள். பிரபாகரன் தம்பிகள் வன்முறையில் காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல. தேசிய இன விடுதலை மீது பற்று கொண்ட போராளிகள்.

தொடர் வண்டி தண்டவாள குண்டு வெடிப்பில் இருப்பு பாதை மரக்கட்டைகள் உருக்குலைந்துள்ளன. ஆனால் பிரபாகரன் தம்பிகள் என்ற துண்டுப் பிரசுரம் மட்டும் எவ்வித சேதமும் இல்லாமல் புத்தம் புதிதாகக் கிடந்தது. அது மட்டுமல்ல... விபத்து குறித்து முதலில் வந்த செய்திகளில் துண்டுப் பிரசுரம் குறித்து தகவலே இல்லை. இதற்கு காரணம் யார் என போலீஸார் தேடி வருகிறார்கள் என்று மட்டும்தான் சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் துண்டுப் பிரசுரம் வந்திருக்கிறது. எப்படி என்றுதான் புரியவில்லை!

பெரும் காற்று வீசும் வனப்பகுதியில் துண்டு பிரசுரம் பறக்காமல் கிடக்குமா அதன் மேல் கல் வைத்திருந்தால் கூட அழுக்குப் படிந்திருக்கும். அப்படி இல்லாமல் காகிதம் பளிச்சென்று உள்ளது. இதில் மறைந்துள்ள சதி... உள்நோக்கம் நம்மைவிட அரசுகளுக்கே நன்கு தெரியும். அவர்கள்தான் விளக்க வேண்டும்.." என்றார்.

கருத்துகள் இல்லை: