திங்கள், 14 ஜூன், 2010

கபாலீசுவரர் கோவில் கருவறையில் வழிபாடு நடத்த முயன்ற பழ.நெடுமாறன் கைது




சென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கருவறையில் வழிபாட்டு திருப்பணி நடத்த முயன்ற பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர்கள் தொட்டு வழிபடவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று அனைத்து தன்மான தமிழர் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து ஞாயிறு அன்று மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
மாலை 4 மணியளவில் தமிழ் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் தலைமையில் கபாலீசுவரர் கோவில் முன்பு போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தெய்வநாயகம் முன்னிலை வகித்தார். பழ.நெடுமாறன் வாழ்த்துரை வழங்கினார். இதில், 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  திடீரென' கோவிலுக்குள் சென்று கருவறையில் வழிபாடு நடத்த முயற்சித்தனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பழ.நெடுமாறன், ராமச்சந்திரன், தெய்வநாயகம், தலைவர் பச்சையப்பன், ஆனூர் ஜெகதீசன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது: தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்து பயிற்சி அளித்து, 200 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களை உருவாக்கி உள்ளது. இந்த அர்ச்சகர்களை பணியில் அமர்த்த விடாமல் ஒரு கூட்டம் தடுத்து வருகிறது.

ஆனால், வடஇந்தியாவில் காசி விசுவநாதர் கோவிலில் பக்தர்கள் சிவலிங்கத்தை தொட்டு வழிபடுகிறார்கள். இதை போன்று மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பக்தர்களை வழிபட விட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. வெற்றி கிடைக்கும் வரை தினமும் 2 பேர் கபாலீசுவரர் கோவில் கருவறையில் வழிபாட்டு திருப்பணி நடத்துவார்கள் என்று அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: