ஞாயிறு, 13 ஜூன், 2010

தங்கரின் பேச்சுதயாரிப்பாளர்கள் இல்லையென்றால், யாருக்கும் வேலை இருக்காது. ஆனால் அந்த தயாரிப்பாளர்களின்

இயக்குநர் தங்கர் பச்சான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட கதைதான் பிரதானமாக வெளியானது.

அது என்ன விவகாரம்...?

இதோ தங்கரின் பேச்சு:

"சினிமாவில் தயாரிப்பாளர்கள் இல்லையென்றால், யாருக்கும் வேலை இருக்காது. ஆனால் அந்த தயாரிப்பாளர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில், 99 சதவீதம் பேர் கடனிலும், கஷ்டத்திலும் மாட்டிக்கொள்கிறார்கள். ஒரு சதவீதம் பேர்தான் தப்பி வருகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்கள் அறிமுகம் செய்தவர்கள் படத்துக்கு படம் அதிக ஊதியமும், பெயரும், புகழும் வாங்கிக்கொண்டே போகிறார்கள். எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் சிலர் படம் தயாரிக்க வந்துவிடுகிறார்கள்.

எனவே தயாரிப்பாளர்களுக்கு, கவுன்சிலிங் வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். "இங்கே ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள்'' என்று படம் தொடங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு, வருகிறவர்களிடமெல்லாம் காசை வாங்கிப் போட்டுக் கொண்டு உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டே போகிறது சங்கம்.

ரொம்ப கடுமையாக உழைப்பவர்கள் எல்லாம் சினிமாவில் எடுபட மாட்டார்கள். நிறைய வியர்வை சிந்தி உழைத்தவர்கள் எல்லாம் சினிமாவில் காணாமல் போயிருக்கிறார்கள்.

கலைக்குள் அரசியல் நுழைந்ததால், சினிமா குளறுபடியாகி விட்டது. சிக்கல்களையும், சீரழிவுகளையும் சந்தித்து வருகிறோம். வெளியில் சொல்ல முடியாமல், நிறைய தயாரிப்பாளர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

எல்லா படங்களுக்கும் தியேட்டர்களில் ஒரே கட்டணம் வசூலிப்பதால், யாரும் தியேட்டர்களுக்கு வருவதில்லை. இதற்கு யாரையும் குறை சொல்லக்கூடாது. குற்றவாளிகள் நாம்தான். தியேட்டர்களில் கட்டணத்தை குறைக்காத வரை சினிமா முன்னேறாது. ரூ.50 கோடியில் தயாராகும் படத்துக்கும் அதே கட்டணம். ஒரு கோடியில் தயாராகும் படத்துக்கும் அதே கட்டணம் என்றால், எப்படி தியேட்டர்களுக்கு வருவார்கள்?

இந்த நிலை மாற, நடிகர்கள் முகத்தில் பணம் கட்டுவதை குறைக்க வேண்டும். படைப்பாளிகளின் கையில் திரைப்பட துறை வரவேண்டும்.

இந்த படத்துக்கு வெளிநாட்ல படப்பிடிப்பு நடத்தினார்களாம்... தமிழ் படத்துக்கு எதுக்குங்க வெளிநாட்டுக்கு போகணும்? இங்க எடுத்தா என்ன? இப்படிதான் காசை கொண்டு போய் கரியாக்கிட்டு கடன்காரங்களா திரியுறாங்க. இந்த படத்தின் தயாரிப்பாளர் என்னோட உறவுக்காரர்தான். படம் எடுக்க போறாருன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கன்னத்தில அறைஞ்சாவது தடுத்திருப்பேன்.

இங்க எந்த ஹீரோவும் கதை கேட்கறதில்ல. தயாரிப்பாளரும் திரைக்கதை புத்தகத்தைக் கொடுத்தா படிச்சு பார்க்கறதே இல்ல. என்னோட கார்ல நாலைஞ்சு ஸ்கிரிப்ட் பைண்டிங் பண்ணி அப்படியே கிடக்கு" என்று பேசிக் கொண்டே போக, மேடையிலிருந்தவர்கள் நெளிய ஆரம்பித்தார்கள்.

ஒருவழியாக அவர் கையிலிருந்த மைக், தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கைக்குப் போனது மைக்.

கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்கர்பச்சானை வறுத்தெடுத்தார் பாண்டியன். அவர் கூறுகையில், "`சினிமாவில் ஜெயித்தவர்கள் தொடர்ந்து ஜெயிப்பதற்கு போராடுகிறார்கள். இதில், உங்களை (தங்கர்) மாதிரி ஆட்கள், என்னை மாதிரி ஆட்கள் வழிவிட தயாராக இருக்கிறோமா?

தங்கர்பச்சான், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வருவதே இல்லை. அங்கு வராமல், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பேசக்கூடாது.

நாங்களும் புதுசா வர்ற தயாரிப்பாளர்களிடம் இந்த தொழிலில் எவ்வளவு கஷ்டம் இருக்குன்னு சொல்லிதான் பதிவு பண்ணுறோம். அதை கேட்காம போய் விழுந்தா நாங்க என்ன செய்யுறது? இதே தயாரிப்பாளர் எனக்கு உறவினர்னு சொன்னாரே, ஆஸ்திரேலியாவுல எடுத்த பிலிம் பாக்சை இங்க எடுத்திட்டு வர முடியாம அவரு கஷ்டப்பட்ட போது இவரு எங்க போயிருந்தாரு? தயாரிப்பாளர் சங்கம்தான் இதில தலையிட்டு அந்த படப் பெட்டிகளை இந்தியாவுக்கு எடுத்திட்டு வந்திச்சு...," என்று டோஸ் விட, எழுந்து போக வழியிருக்கிறதா என்று வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் தங்கர்.

பின்னர் பேசிய ராம நாராயணன், தனது 'பஞ்சாயத்துத் தலைவர்' பதவிக்கே உரிய ஸ்டைலில், "இந்த விழா மேடை, கருத்தரங்க மேடையாகி விட்டது. தயாரிப்பாளர்களின் நலனுக்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் போராடி வருகிறது. எத்தனையோ பிரச்சினைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்த்து வைத்து இருக்கிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்களின் நலனுக்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து பாடுபடும்'' என்று சமாதானக் கொடியைப் பறக்க விட்டார்.

படவிழாவுக்கு வந்த அனைவரையும் 'அரிது அரிது' பட தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இயக்குநர் கே.ஆர்.மதிவாணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பிஆர்ஓ பிடி செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை: