மின்னம்பலம் - christopher : கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தி.மு.க-வின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.
இதனை அறிவித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளும் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
திருமாவளவன் முதலமைச்சராக ஆகக்கூடாதா?
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “நேற்று சினிமாவில் வந்தவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று சொல்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே இப்போது துணை முதல்வராக ஆகும் போது, 40 வருஷமாக அரசியலில் இருக்கின்ற எங்கள் தலைவர் திருமாவளவன் முதலமைச்சராகவோ, துணை முதலமைச்சராகவோ ஆகக்கூடாதா?’ என ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், “கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்த திமுக 37 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் 10 ஆண்டு ஆட்சிக்கான அதிருப்தியோடு பாஜகவுடன் கூட்டணி அமைத்தும் கூட அதிமுக 33 சதவீத வாக்குகளை பெற்றது. திமுகவுக்கு இருப்பது போல், அதிமுக வலுவான கூட்டணியை அமைத்திருந்தால், தேர்தல் முடிவுகளை மாற்றியிருக்கலாம். இதன்மூலம் வெற்றித் தோல்விகளை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் யார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது. பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறிவிட்டதால், சிறுபான்மையினரின் வாக்குகள் பிரியும். கூடவே புது வரவுகளும் இருப்பதால் பெரும்பான்மைக்கு மிக அருகில் எம்.எல்.ஏக்களை பெற்று, கூட்டணி கட்சிகளை அரவணைத்திடும் நிர்பந்தம் நிச்சயம் ஏற்படும்” என்றெல்லாம் பேட்டியளித்திருந்தார்.
இதனை பத்திரிகைகளில் படித்தும், தொலைக்காட்சிகளில் பார்த்தும் டென்சனாகியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆதவ் அர்ஜூனாவின் பேட்டி திருமாவளவனின் அனுமதி பெற்றே தரப்பட்டுள்ளது என்றும், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளை அதிமுகவுடன் கூட்டணி சேர்க்கும் முயற்சியில் ஆதவ் முழு மூச்சாக ஈடுப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் முதல்வருக்கு சென்றடைந்தது.
இதைத் தொடர்ந்தே இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா.
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ’4 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவரெல்லாம், துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ள திருமாவளவன் ஏன் துணை முதல்வர் ஆகக்கூடாது என கேள்வி எழுப்பியிருக்கிறாரே’ என பத்திரிகையாளர்கள் கேட்டபோது,
A.Raja says Thirumavalavan will not accept Aadhav Arjuna opinion - TNN | A.Raja: ஆதவ் அர்ஜுனா கருத்தை திருமாவளவன் ஏற்றுக் கொள்ள மாட்டார் -ஆ.ராசா நம்பிக்கை
திருமாவளவன் இந்தக் கருத்தை ஏற்க மாட்டார்!
அதற்கு ஆ.ராசா, ”அந்த பேட்டியை நானும் பார்த்தேன். விசிக தலைவர் திருமாவளவனை எனது கல்லூரி காலத்தில் இருந்தே அறிவேன். இடதுசாரி சிந்தனை இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இன்று மதவாதத்தை ஒழிப்பதிலும், சமூக நீதியைக் காப்பதிலும் திமுக-வுடன் தோள் கொடுக்கின்ற அரசியல் கட்சிகளில் நல்ல இடத்தில் இருக்கின்ற கட்சி விசிக.
இந்த சூழலில், அந்தக் கட்சியில் புதிதாகச் சேர்ந்திருக்கின்ற ஒருவர் கொள்கைப் புரிதலின்றி பேசியிருப்பது கூட்டணி அறம் மற்றும் அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. எனவே இடதுசாரி சிந்தனையில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள திருமாவளவன் இந்தக் கருத்தை நிச்சயம் ஏற்க மாட்டார். நிச்சயமாக இந்தக் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுப்பார்.
குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது முரண்பட்ட கொள்கை உள்ளவர்களுடன் கூட்டணி வைக்கும்போது தான் வகுக்கப்படும்” என்று ஆ. ராசா தெரிவித்தார்.
முதல்வர் ஆலோசனையின் பேரிலேயே ஆ.ராசா இந்தப் பேட்டியை அளித்தார் என்றும், ஆதவ் அர்ஜூனா தான் சொன்ன கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், இது நடைபெறாவிட்டால் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி தொடர்வது குறித்து திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் என்று திருமாவளவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் மின்னம்பலத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
திருமாவளவன் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக