சனி, 28 செப்டம்பர், 2024

மாணவனை நரபலி கொடுத்த பள்ளி உரிமையாளர்... மூடநம்பிக்கையால் நடந்த கொடுமை - Hathras Human Sacrifice பின்னணி என்ன?

zeenews.india.com  - Sudharsan G :   கடந்த 2020ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான தலித் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.
நான்கு பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் அந்த பெண்ணை தாக்கியதில் முதுகு தண்டில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 15 நாள்கள் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல், கடந்த ஜூலை மாதம் ஒரு ஆன்மீக நிகழ்வில் கூட்ட நெரிசல் காரணமாக 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் ஹத்ராஸில் நடந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு மனதை கனக்கவைக்கும் சம்பவம் ஒன்று ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்துள்ளது.



ஒரு தனியார் பள்ளி ஒன்றில் அதன் நிர்வாகம் 2ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, பள்ளி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காவும் மக்கள் இடையே பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும், பில்லி சூனியம் பூஜையின் ஒரு பகுதியாக அந்த மாணவனை நரபலி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த செப். 22ஆம் தேதி பள்ளி விடுதி அறையில் மூன்று பேர் சேர்ந்து அந்த மாணவனின் கழுதத்தை நெறித்து கொலை செய்துள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை

பள்ளியின் உரிமையாளர் அந்த பள்ளியை பிரபலமாக்குவதற்கு பில்லி சூனியத்தை நம்பியுள்ளார். இந்த மூடநம்பிக்கையால் ஒரு சிறுவனின் உயிர் பலியாகி இருக்கிறது. பள்ளி உரிமையாளரின் தந்தை இதுபோன்ற பில்லி சூனியம் மேற்கொள்பவர் என கூறப்படும் நிலையில், இந்த நரபலிக்கான திட்டத்தையும் அவர்தான் கொடுத்திருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.


மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"குற்றவாளிகள் இதற்கு முன்னரே கடந்த செப். 6ஆம் தேதி அன்று மற்றொரு மாணவனை நரபலி கொடுக்க திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால், அந்த மாணவன் அச்சத்தில் சத்தம் எழுப்பியதால் அந்த திட்டத்தை அப்படியே கைவிட்டுள்ளனர். மேலும் தற்போது அந்த மாணவனுக்கு நாங்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அவனுக்கும் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம்" என்றனர்.

நரபலிக்கான காரணம் என்ன?

செப். 6ஆம் தேதி போட்ட திட்டம் தோல்வியடையவே செப். 22ஆம் தேதி மற்றொரு சிறுவனை பிடித்து பள்ளிக்கு பின்னால் உள்ள கிணற்றின் அருகே நரபலி கொடுத்துள்ளனர். அந்த சிறுவனை விடுதியில் இருந்து கடத்தியுள்ளனர். சிறிதுநேரத்திலேயே அந்த சிறுவனுக்கு முழிப்பு வந்த உடன் அவனின் கழுத்ததை நெறித்து பள்ளிலேயே கொலை செய்துள்ளனர்.

அந்த கிணற்றின் அருகே பில்லி சூனியம் சார்ந்த பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்கு நரபலி நடந்திருப்பது உறுதியானது. பள்ளி கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், பள்ளி மக்களிடையே பிரபலமடைந்து பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அந்த சிறுவனை அவர்கள் நரபலி கொடுத்ததாக கூறப்படுகிறது.

தந்தை கூறியது என்ன?

இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை ஊடகங்களிடம் கூறுகையில்,"என் மகன் படிக்கும் பள்ளியில் இருந்து எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்தது. 'எனது மகனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது, உடனே வாருங்கள்' என என்னிடம் தகவல் தெரிவித்தார்கள். நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் வழியிலேயே,"மகனின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவனை சதாபாத்திற்கு கொண்டு செல்கிறோம்" என்றனர். அவர்கள் ஆக்ரோவை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது, அவர்களை பின்தொடர்ந்தோம். அவர்களை நாங்கள் அழைத்தபோதும் காரை நிறுத்தவே இல்லை. நாங்கள் திரும்பி சென்று, அவர்களை சதாபாத்தில் நிறுத்தியபோது காரில் என் மகனின் உடல் இருப்பதை பார்த்தோம்" என்றார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால்,"இதுதொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளோம். பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்காகவும், அதனை முன்னேற்றத்திற்காகவும் மாணவனை நரபலி கொடுத்துள்ளனர்" என்றார்.

கருத்துகள் இல்லை: