தினத்தந்தி : அங்காரா துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனை அடுத்து, பேரிடர் பகுதிகளுக்கு துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் சென்று பார்வையிட்டு உள்ளார். நேற்று அவர் அதியமான் மாகாணத்திற்கு சென்று பார்வையிட்டார். அரசின் நடவடிக்கை தேவையான அளவுக்கு விரைவாக இல்லை என அவர் கூறினார்.
உலகில் மிக பெரிய தேடுதல் மற்றும் மீட்பு குழுவினரை நாங்கள் கொண்டிருந்தபோதிலும், நாங்கள் விரும்பிய வண்ணம் தேடுதல் முயற்சிகள் விரைவாக இல்லை என கூறியுள்ளார்.
அந்நாட்டில் வருகிற மே 14-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எர்டோகன் மீண்டும் போட்டியிடும் முனைப்பில் உள்ளார். எனினும், இந்த விவகாரம் அவரது எதிர்க்கட்சிக்கு சாதகம் ஏற்படுத்தி உள்ளது. இந்த பேரிடரால் தேர்தல் தள்ளி போடப்பட கூடிய சூழலும் காணப்படுகிறது.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு இந்தியா போன்ற உலக நாடுகள் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில், தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மொத்த உயிரிழப்பு 24 ஆயிரம் கடந்து உள்ளது என சிட்னி மார்னிங் ஹெரால்டு என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக