மாலை மலர் : துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் காசினா டெட் என்ற பகுதி உள்ளது. மிகச் சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி- சிரியா எல்லையில் அமைந்துள்ளது.
துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக இது பதிவானது.
இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டோடியது. பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நீண்ட நேரம் அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் உயிர் பயத்தில் ரோடுகளில் நின்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. அடுக்கு மாடி கட்டிடங்களும் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. கட்டிடங்களும் கடுமையான சேதம் அடைந்தது. பல கட்டிடங்கள் தரைமட்டமானது.
அதிகாலை நேரம் என்பதால் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பொது மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் பலர் என்ன நடந்தது என தெரியாமல் தூக்கத்திலேயே உயிர் இழந்துவிட்டனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசினா டெட் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானது. இதனால் கட்டிடங்கள் ஆடியது. பொது மக்கள் வீடுகளைவிட்டு அதிர்ச்சியில் வெளியே ஓடி வந்தனர்.
துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் பதற்றம் உருவானது.
துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி, அதியமான், மலாட்டியா, தியார்படுர் உள்ளிட்ட 8 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அந்நாட்டு அதிபர் தயாயில் கிர்டோசன் பாதிக்கப்பட்ட மாகாணங்களை சேர்ந்த கவர்னர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் தொடர்பாகவும், அதிகாரிகள் மீட்பு பணிகளை முழு வீச்சில் செல்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.
துருக்கியை தொடர்ந்து பக்கத்து நாடான சிரியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 230 பேர் வரை இறந்துவிட்டனர். 516 பேர் படுகாயம் அடைந்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நடந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300ஆக அதிகரித்துள்ளது.
உருக்குலைந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் இன்னும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரபடுத் தப்பட்டு உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இடிபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்ட பிறகுதான் எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.
மீட்பு பணி நடந்து வரும் கட்டிடங்கள் முன்பு உயிர் தப்பியவர்கள் சோகத்துடன் நின்று உள்ளனர். தங்கள் குடும்பத்தை சேர்ந்த வர்கள் கதி என்ன என்பது தெரியா மல் அவர்கள் தவித்து வரு கின்றனர்.
தங்கள் கண்முன் வீடுகள் இடிந்து விழுந்ததை பார்த்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சி அளிக்கிறது. தீயணைப்பு துறை மற்றும் போலீசாரின் மீட்பு பணியில் பொதுமக்க ளும் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நில நடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.
லெபனான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் 40 நொடிகள் நீடித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது. படுக்கையில் படுத்திருந்தவர்கள் கீழே உருண்டு விழுந்தனர். 2 நாடுகளை உலுக்கிய நில நடுக்கத்தால் தெற்கு இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்குவதும், இடிந்து கிடக்கும் கட்டிடங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கி நாட்டில் நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 1999-ம் ஆண்டு பூகம்பத்திற்கு 17 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். அந்த சமயம் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பூகம்பத்தில் 40 பேரும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 114 பேரும் இறந்தனர். அதன்பிறகு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 180க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
துருக்கியில் நில நடுக்கத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டு உடமைகள் சேதமடைந்து உள்ளது வேதனை தருகிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக