tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : மைசூர் ஓகே.. ஓசூர் “நோ”.. விமான நிலையம் இல்லையாம்! தமிழர்களை மத்திய அரசு புறக்கணிப்பதாக திமுக புகார்
புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் நகரங்களின் பட்டியலில் ஓசூர் நீக்கப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் நகரங்களின் பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீக்கப்பட்டதால் அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் அமைந்து இருக்கும் தொழில் நிறுவனங்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக எம்.பி வில்சன் விமர்சித்து இருக்கிறார்.
மத்திய அரசு அறிமுகம் செய்த உதான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் வளர்ந்து வரும் நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் விமான நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான நகரங்கள் மத்திய அரசால் கண்டறியப்பட்டு வந்தன. இதில் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஓசூரிலும் விமான நிலையம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன? டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
சென்னை டூ ஓசூர் விமான சேவை
பெங்களூருவுக்கு மாற்றாக ஓசூரில் பல நிறுவனங்கள் தொழில் தொடங்கி வரும் நிலையில் அங்கு விமான நிலையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமான ஓசூருக்கு சென்னையில் இருந்து விமான சேவை தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
திமுக எம்பி வில்சன் கேள்வி
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் விமான நிலையங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய விமான போக்குவரத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்து இருக்கிறார். அதில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.
மத்திய அமைச்சர் விளக்கம்
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருக்கும் கம்பிகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் புதிதாக வேறு எந்த விமான நிலையங்களையும் அமைக்கக்கூடாது என்று ஒப்பந்தத்தில் இடம்பெற்று உள்ளதை குறிப்பிட்ட அமைச்சர் வி.கே.சிங், இதன் காரணமாக ஓசூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் கொடுத்து உள்ளார்.
கைவிடப்பட்ட ஓசூர் விமான நிலையம்
மத்திய அரசு - பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் ஒப்பந்தப்படி 2033 ஆம் ஆண்டு வரை ஓசூர் விமான நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்து இருக்கிறார். அந்த ஒப்பந்தத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஹாசன் விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தொழிலதிபர்கள் அதிருப்தி
ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் அங்கு தொழில் முதலீடுகளும், வளர்ச்சியும் பெருகும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஓசூரை சேர்ந்த தொழிலதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதுடன், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள்.
திமுக எம்பி கண்டனம்
இது குறித்து ட்விட்டரில் விளக்கமளித்து இருக்கும் திமுக எம்.பி. வில்சன், "மைசூர் மற்றும் ஹாசன் ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் செயல்பட அனுமதித்ததை போல் ஓசூரிலும் விமான நிலையம் இயங்க அனுமதி தர வேண்டும். தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் வளர்ச்சித் திட்டங்களில் மத்திய அரசு புறக்கணிப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது." என்று அவர் விமர்சித்துள்ளார்.
DMK has condemned the removal of Hosur from the list of cities where new airports will be set up.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக