வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

பசு அணைப்பு தின அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.

மாலை மலர் :  புதுடெல்லி உலகெங்கும் காதலர் தினமான கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதி, இந்தியாவில் பசு அணைப்பு விழாவாக கொண்டாடவேண்டும் என மத்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை கடும் விமர்சனங்களை பெற்றது. இணையதளத்தில் பலரும் மீம்ஸ் போட்டும், வீடியோக்களை பதிவிட்டும், கிண்டலான கருத்துக்களை வெளியிட்டும் கலாய்த்தனர்.
இந்நிலையில், பசு அணைப்பு தின அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது.
கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் வந்ததையடுத்து, பசு அணைப்பு தினம் தொடர்பான அறிக்கையை விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினத்தை கொண்டாட, இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என விலங்குகள் நல வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா கூறியுள்ளார்.
இந்தியாவில் காதலர் தினத்தை கொண்டாடும் ஜோடிகள், ஒவ்வொரு ஆண்டும் கடுமையான எதிர்ப்பினை எதிர்கொள்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்தியாவில், குறிப்பாக சில கிராமப்புறங்களில், காதலர் தினத்தன்று, காதல் ஜோடிகள் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. காதலர் தின கொண்டாட்டம் மோசமான மேற்கத்திய இறக்குமதி என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: