செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

பள்ளி மாணவிகளை பணக்காரர்களுக்கு விருந்து படைத்த கொடூரம்: மூடி மறைப்பது யார்?. திருச்சி அருகே முசிறியில்

 minnambalam.com- Kavi  அண்மையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி விவாதிக்க தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் அடங்கிய அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினார்.
அப்போது சட்டம் ஒழுங்கு கெட்டுப் போவதற்கான காரணிகளாக பத்து வகையான குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அந்த பத்து வகையான குற்றங்களில் ஏழாவதாக பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாலியல் வன்புணர்வு வழக்குகள், எட்டாவதாக பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தல் வழக்குகள் ஆகிய குற்றங்கள் இடம் பிடித்திருந்தன.
அந்த அளவுக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக பெண்கள் பாதுகாப்பு விவகாரம் இருக்கிறது. இதை மையமாக வைத்துத்தான்   கடந்த எடப்பாடி ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த நிலையில் ஏழ்மையான குடும்பத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் கிராமத்து மாணவிகளைக் குறிவைத்து அவர்களை மூளைச் சலவை செய்து நகரங்களுக்கு அழைத்துச் சென்று பணக்கார முதியவர்களுக்கும், இளைஞர்களுக்காகவும் அனுப்பி வைத்து வரும் ஒரு கொடூரம் திருச்சி அருகே முசிறியில் நடந்து வருகிறது.

இந்த விவகாரம் புகாராகக் கொடுக்கப்பட்டு காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்படி வழக்காக பதிவு செய்யப்பட்டும் தப்பித்துக் கொண்டே இருக்கிறார் அந்த குற்றவாளி. பெண் குழந்தைகளை இப்படி நகரங்களுக்கு சப்ளை செய்து நரகமாக்கியவர் ஒரு பெண் தான் என்பது கொடுமையிலும் கொடுமை. அவர் மீது நடவடிக்கை எடுக்க மின்னம்பலம் வழிகோல வேண்டும்” என்று முசிறியில் இருந்து நமக்கு கண்ணீர் புகார் வந்தது.

அதிர்ச்சியும் வேதனையுமாக இந்த விவகாரம் பற்றி விசாரிக்க மின்னம்பலம் சார்பில் களமிறங்கினோம்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தாத்தையங்கார் பேட்டை ஒன்றியம் (தா பேட்டை) பகுதியில் உள்ள பைத்தபாறை ஊராட்சியில் அரசு மேல் நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் சுற்றுப்பட்டு கிராமங்களான புதூர், மங்களம், பின்னையூர், பைத்தாபாறை, கிருஷ்ணாபுரம் போன்ற கிராமத்து மாணவ மாணவிகள் சுமார் 600 பேர் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியைச் சேர்ந்த சில மாணவிகளையும், சுற்று வட்டார பகுதிகளில் படிக்கும் பள்ளி மாணவிகளையும் குறிவைத்துதான் ஒரு கும்பல் செயல்பட்டு அந்த மாணவிகளை சீரழிவுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஜனவரி 30ஆம் தேதி முசிறிக்கு நேரடியாக சென்று நமக்கு புகார் அனுப்பியவர்களை சந்தித்தோம்.

பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருப்பதாகத் தகவல் அறிந்து நேரடியாக அங்கே சென்றோம். இப்போதுதான் வெளியில் போனதாகச் சொன்னார்கள்.

நமது தேடலில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டீ கடையில் பசியோடு பன்னும் டீயும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களைச் சந்தித்தோம். பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன்களும், அம்மாவும்தான் அந்த டீக்கடையில் இருந்தனர்.
அவர்களிடம், ”மின்னம்பலம்.காம் மொபைல் பத்திரிகை ஆபிஸிலிருந்து வர்றோம்மா” என்றதும், ‘எங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கீங்களா?” என்று கேட்டனர். ஆமாம்மா என்றதும் பெரும் எதிர்பார்ப்போடு கண்களில் கண்ணீர் ததும்ப, ‘சார் இங்க வச்சி பேச வேணாம் சார்” என்றனர்.

அவர்களை காரில் அழைத்துக்கொண்டு கிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குப் புறப்பட்டோம். போகும் வழியிலிருந்த எம்.ஐ.டி கல்லூரியைக் காட்டியவர்கள், ‘சார் இந்த காலேஜை பாத்துக்கங்க. இந்த காலேஜில வேலை வாங்கித் தர்றதாதான் எங்க வீட்டுப் பொண்ணை கூட்டிக்கிட்டுப் போனாங்க” என்றனர்.

உடனே காரை நிறுத்தி அந்த கல்லூரியை (முசிறி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாலிடெக்னிக் காலேஜ்) ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். சில நிமிடங்களில் அவர்களின் வீட்டைச் சென்றடைந்தோம்.

பட்டியல் சமூகத்தினரும் மாற்றுச் சமூகத்தினரும் சுமார் 150 அடி தூரம் இடைவெளியில் வாழ்ந்து வருகிறார்கள். பட்டியல் சமூகத்தினர் வாழும் வீதிகள் குறுகிப்போய் காணப்பட்டது. வடக்கு தெரு, தெற்கு தெரு என இரண்டு தெருக்கள்தான்.
பாதிக்கப்பட்ட மாணவியின் வீடு 150 சதுர அடியில் மண் சுவரால் கட்டப்பட்டு, ஓடுகளால் வேயப்பட்டு, குனிந்து போகும் வகையில் சிறிய வாசலைக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் இடது பக்கமும் வலது பக்கமும் திண்ணை, இடது பக்கத்தில் அடுப்பங்கரை, வலது பக்கம் விறகு சேமிப்பு இடமாக இருந்தது, உள்ளே ஒரே ஒரு அறை, அதான் அந்த மாணவியின் அறை.

பள்ளி சிறுமிக்கு என்னதான் நேர்ந்தது அவரது தாயார் காளியம்மாளிடம் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) கேட்டோம். அதற்கு முன் தனது மகள் மாரியம்மாவின் புகைப்படத்தைக் காட்டினார். கூர்மையான பார்வை, அகண்ட புருவம், மெலிந்த உடம்பு என இருந்தார் மாரியம்மா.

தன் மகளின் போட்டோவைப் பார்த்துப் பார்த்து கதறிய காளியம்மாளைத் தேற்றி பேச வைத்தோம்.

“கிருஷ்ணாபுரம் என்னோட அம்மா ஊருங்க. என்னைக் கட்டிக் கொடுத்தது ஐயம்பாளையம். அவர் பேரு காளியப்பன். (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அவரோட முதல் சம்சாரம் தவறிட்டதால என்னைய ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டாரு.
இருவது வருசத்துக்கு முன்னாலயே எங்க அம்மா ஊரான கிருஷ்ணாபுரத்துக்கு வந்துட்டேன். மூணு பசங்க, ஒரு பிள்ளை. எங்க வீட்டு பெண் தெய்வமே மாரியம்மாதான். பக்கத்து ஊர் பைத்தாபாறை அரசுப் பள்ளியில எட்டாவது படிக்குது.

கிருஷ்ணாபுரத்துல உள்ள ஆரம்ப பள்ளி சத்துணவுக் கூடத்துல சோறு ஆக்கிப்போடுற ஆயாவா சுலக்சனா என்ற பிருந்தா வேலை செய்யுது. அந்த பொம்பளை நடத்தை ஊர்ல யாருக்கும் பிடிக்காது, அது வேற சாதி. ஆனால் எங்க சாதிகாரங்களோட சேர்ந்து இங்கதான் வாடகை வீடு எடுத்து இருக்கு.

எங்க ஏரியாவுலேர்ந்த பள்ளிக்கூடம் போற பொம்பளப் பசங்கள நோட்டமிட்டு அந்தப் புள்ளைங்களோட குடும்பப் பின்னணி பத்தி விசாரிச்சு… ரொம்ப ஏழையா இருக்குற புள்ளைங்கள கூட்டிக்கிட்டு போயி மதியம் சாப்போடு போடும். நல்லா பேசும். ஏதோ அன்பாதான் அக்கறையாதான் பேசறானு நாங்க நினைச்சோம். ஆனா எங்க வறுமையை சாக்கா வச்சி என் பொண்ணுக்கே குறி வைப்பா அந்த சண்டாளினு எனக்குத் தெரியாமப் போச்சு.

ஒரு நாள் என்கிட்ட அந்த ஆயா சுலக்சனா, ‘சனி, ஞாயிறு வீட்ல சும்மாதான இருக்கு உங்க பொண்ணு. சனி, ஞாயிறு, பள்ளி லீவு நாள்ல பக்கத்துல இருக்குற எம்.ஐ.டி. காலேஜுக்கு வேலைக்கு அனுப்பி வச்சா 150 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதுமட்டுமில்ல. மாசம் ஆயிரம் ரூபாயும் சத்துப் பொருட்கள் மற்றும் சோப்பு சீயக்காய் எண்ணெய் எல்லாம் தருவாங்க, அனுப்பி வைங்கக்கா’ னு சொன்னா.

பாதிக்கப்பட்ட மாணவியின் தாய்

‘என் பசங்க அவளை விடமாட்டானுங்கம்மா. அதனால வேண்டாம்’னு நான் சொல்லிட்டேன். திரும்பத் திரும்ப நம்பிக்கையாகப் பேசி, ‘உங்க பிள்ளையை மட்டுமா கூப்பிடுறேன்? பக்கத்துக் கிராமத்து பிள்ளைங்களையும்தான் அழைச்சிட்டுப் போறேன். இந்த ஊர் பிள்ளைகளும் வருதுங்க’ அப்படினு ரொம்ப நைச்சியமா பேசினா. நானும் சரின்னு சொல்லிட்டேன்.

வருசம் பிறந்து முதல் வெள்ளிக் கிழமை (ஜனவரி 6ஆம் தேதி) காலையில் 9.30 மணிக்கு அழைத்துப் போய் எம்.ஐ.டி காலேஜ் கேட்டில் நிக்க வச்சிருக்கா. அப்ப ஒருவரை அழைத்து வந்து என் பொண்ணை செல்போனில் போட்டோ எடுத்துக்கிட்டு, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் ஆதார் கார்டு ஜெராக்சையும் வாங்கிக்கிட்டு அனுப்பி வச்சிருக்காங்க.

அன்னைக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து சாயந்திரம் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டுட்டா. நான் காலையில வேலைக்குப் போனா சாயந்திரம் 6 அல்லது ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். இரண்டாவதா அடுத்த சனிக் கிழமை (14ஆம் தேதி) காலையில் அழைச்சிக்கிட்டு முசிறிக்கு போகாம கிருஷ்ணாபுரத்தில் உள்ள அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிருக்கா சுலக்சனா. என் பொண்ணு அந்த வீட்ல ஹால்ல டிவி பாத்துக்கிட்டிருக்கும்போது சுலக்சனாவுக்கும் அவ புருசனுக்கும் ஏதோ வாய்ச் சண்டை வந்திருக்கு.

இந்த நேரத்துல எதுக்கு நாம இங்க உக்காந்திருக்கணும்னு நினைச்ச என் பொண்ணு, ‘அக்கா நான் வீட்டுக்குப் போகட்டுமா’னு கேட்டிருக்கு. அதுக்கு சுலக்சனா, ‘இரும்மா மதிய பஸ்சுக்குப் போகலாம்’னு சொல்லியிருக்கா. அதுப்படியே முசிறி காலேஜூக்கு அன்னிக்கு மதியானம் என் பொண்ணை அழைச்சிக்கிட்டுப் போயிருக்கா சுலக்சனா.
அப்போ காலேஜ் கேட் பக்கத்திலேயே நிக்கவச்சிருக்கா. சுலக்சனா கொடுத்த தகவல் தெரிஞ்சு அங்க வந்த ஒருத்தன் என் பொண்ணு கன்னத்துல கை வைச்சி அப்படியே உடம்புலயும் கை வச்சி, ‘சரி பாத்துக்கலாம். நான் சொல்லும்போது கூட்டிக்கிட்டு வாங்க’னு சொல்லியிருக்கான்.

இதுபோக…. அடுத்த சனிக்கிழமை (ஜனவரி 21ஆம் தேதி) காலைல 9.30 மணிக்கு அழைச்சிக்கிட்டுப் போய், முசிறியில உள்ள எனது அண்ணன் மகள் வீட்டுக்குச் சென்று டீ குடிச்சுட்டு, திரும்ப டவுனுக்கு அழைச்சிட்டுப் போயிருக்கா அந்த சுலக்சனா. டவுன்ல ஒரு வீட்டுக்குள்ள என் பொண்ணை விட்டுட்டு, இங்கயே இரும்மா… உடனே வந்துடறேன்’னு சொல்லிட்டு வெளிய போயிருக்கா. அப்போதான் அந்த வீட்டுக்கு ஒருத்தன் வந்து என் பிஞ்சு குழந்தைய கசக்கிருக்கான்” என்று கதறத் துவங்கினார் கண்ணீருடன் தாயார்.

அவரை அமைதிப்படுத்தி பிறகு மீண்டும் பேசவைத்தோம்.
“கொஞ்ச நேரம் கழிச்சு அந்த வீட்டுக்குப் போயிருக்கா சுலக்சனா. என் பொண்ணுகிட்ட ஏதேதோ பேசி, ‘இதெல்லாம் பெரிசா எடுத்துக்காதே…உனக்கு என்னென்ன வேணும்? வா வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கா. அப்புறம் என் பொண்ணை அழைச்சிக்கிட்டுப் போயி புது டிரெஸ் ரெண்டு செட் எடுத்துக் கொடுத்திருக்கா.

நான் கூலி வேலைக்கு காலையில போனா சாயந்தரம்தான் வீட்டுக்கு வற்ரேன். என் பசங்க மூணு பேரும் மூட்டை தூக்குற வேலைதான் செய்றாங்க. நான் வேலை முடிச்சுட்டு சாயந்தரம் வீட்டுக்கு வந்தப்ப, என் மக ஒரு மாதிரி சோகமா சோர்வா இருந்தா. என்னம்மானு கேட்டேன். தூக்கம் வருதும்மானு சொல்லிட்டு போய் படுத்துக்கிட்டா.

கொஞ்ச நேரத்துல வந்த என் பசங்க, ‘ஊர்ல வேற மாதிரியெல்லாம் பேசறானுங்க. மாரியம்ம்மா எங்க போயிட்டு வந்தா?’னு கேட்டு என்னை அடிக்க வந்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. நான் என் பொண்ணை கூப்பிட்டு, என்னாம்மா நடந்துச்சுனு கேட்டேன். பிஞ்சுக் குழந்தை அவளுக்கு நடந்ததை அப்படியே அடுக்கடுக்காக சொல்லிடுச்சுங்க. என் தலையில் இடி விழுந்த மாதிரியாடிச்சு” என்று சொல்லியபடியே தலையில் கை வைத்து அப்படியே உறைந்துவிட்டார் அந்தத் தாய்.

அவரை தொந்தரவு செய்யாமல் காத்திருந்தோம். கண்ணீர் வழிந்து முடிந்த பின்னர் அந்த தாய் தொடர்ந்தார். “விசயம் ஊர்ல உள்ளவர்களுக்கும் தெரிஞ்சுபோச்சு. உடனே ஜனவரி 28ஆம் தேதி ராத்திரி 9 மணிக்கு முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குப் போயி அங்க இருக்குற போலீஸ்கிட்ட விசயத்தைச் சொன்னோம். காலையில் வரச்சொன்னாங்க. மறுபடியும் காலையில 29 ஆம் தேதி காலையில போலீஸ் ஸ்டேசனுக்கு என் மகளையும் கூட்டிக்கிட்டு போனேன். என் பொண்ணு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான போலீஸ் கொஞ்ச நேரத்துலயே அந்த சுலக்சனாவையும் ஸ்டேசனுக்கு கூட்டி வந்துட்டாங்க. அவளையும் விசாரிச்சாங்க.

அப்புறம் இன்ஸ்பெக்டர் அம்மா வந்தாங்க. அவங்களும் விசாரிச்சாங்க விசாரிச்சாங்க அன்னிக்கு ராத்திரி வரையில விசாரிச்சங்க. அதன் பிறகு என் மகளைத் திருச்சிக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. மகள் போகமாட்டேன்னு அழுதா. அதனால நானும் கூட வர்றேனு சொன்னேன். ஆனா போலீஸ் என்னை வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க.
இன்னிக்கு வரையில் என் மகளை கண்ல கூட காட்டல. மகள் என்ன செய்யுறாளோ… தெரியலை. எங்களுக்கு அவ்வளவு விவரம் தெரியாதுங்க. சாமீ.. நீங்களாவது உதவி செய்யுங்க” என்று கதறினார் அந்த தாய்.

சிறுமியின் மாமா பாரதி நம்மிடம், “அந்த பிருந்தா என்கிற சுலக்சனா இப்படிதான் சின்ன சின்ன பிள்ளைங்களா பார்த்துப் பார்த்து வேலைக்கு அழைத்துப் போறேன், ஊட்டச் சத்து பொருட்கள் வாங்கி தருகிறேன்னு சொல்லி ஏமாற்றி அழைத்துப் போய் சிறுமிகளைச் சீரழிக்கிறார்.

இதே ஊர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துப் போனார். அவரது நடத்தையைப் பார்த்து அந்தப் பிள்ளை திரும்ப அந்த பிருந்தா கூட போகவில்லை. எங்களுக்கு யாருக்கும் படிக்க எழுத தெரியாதுங்க, அப்படியே எழுதப் படிக்கத் தெரிந்தாலும் அந்தளவுக்கு விபரம் தெரியாதுங்க, ஜனவரி 28ஆம் தேதி இரவு லதா எஸ்ஐயிடம் புகார் எழுதிக் கொடுக்காமல், வாய்மொழியா புகார் கூறினோம்.
குழந்தையிடமும் விசாரிச்சாங்க. மறு நாள் அந்த பிருந்தா மற்றும் வீட்டில் தங்க வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட வீட்டு உரிமையாளரை வரச்சொன்ன இன்ஸ்பெக்டர், அவர்களை திரும்ப வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டு, பாதிக்கப்பட்ட பிள்ளையை ஹோம்க்கு அனுப்பிட்டாங்க சார், இது என்ன நியாயம், குற்றவாளியான பெண்ணுக்கு சாதி பலம் இருக்கிறது, எங்களுக்கு யாரும் இல்லை சார்” என்று ஆதங்கப்பட்டார்.

அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் காவேரியைச் சந்தித்து பள்ளி மாணவியின் வழக்குப் பற்றிக் கேட்டோம்.

இன்ஸ்பெக்டர் காவேரி

” 29ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துவிட்டோம் குற்ற எண் 3/2023 போக்சோ பிரிவும் வருகிறது, அவர்கள் என்ன புகார் கொடுத்தார்களோ அந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றவரிடம், “மேடம் அவர்களுக்கு யாருக்கும் விபரம் தெரியவில்லை, படிக்கவும் எழுதவும் தெரியவில்லை அவர்களுக்கு என்ன தெரியும்” என்றோம்.
“அதான் சார் அவர்கள் சொன்னதையும், அந்த மாணவி சொன்னதையும் வாக்கு மூலமாக பெற்றுத்தான் வழக்குப் பதிவு செய்துள்ளோம், விசாரணை நடக்கிறது” என்றார்.
புகாருக்குள்ளான பிருந்தா வீட்டுக்குப் போய்விட்டாரா என்று கேட்டோம்?
”ஆமாம் பெண்களை காவல் நிலையத்தில் எப்படி வைத்திருக்க முடியும்? அடித்துக் கூட கேட்டேன் அப்படி ஏதும் தவறு செய்யவில்லை என்றார், பாவமாக இருந்தது, கஷ்டப்படும் பிள்ளைகளைப் பார்த்து உதவி செய்ய முன் வந்துள்ளார் அது தவறா? அந்த பிள்ளை மாற்றி மாற்றி சொல்லுகிறது, அது சொன்னால்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த பிள்ளை சொன்ன நேரத்தில், அந்த பகுதியில் சிசிடிவி கேமரா புட்டேஜ்களை பார்த்தோம். பஸ் விட்டு இறங்குகிறார்கள் ஒரு கடைக்குப் போகிறார்கள் துணி எடுக்கிறார்கள். உடனே வெளியில் வந்து பஸ் ஏறுகிறார்கள். ஒரு அறையில் தவறு செய்தால் குறைந்தது அரை மணி நேரமாவது ஆகாதா? அந்த பிள்ளை முகம் வாடாமல் நல்லாதான் நடந்து வருகிறாள். மேலும் அந்த பிள்ளை மாற்றி மாற்றிப் பேசுகிறது பொய் சொல்கிறது” என்றார்.
“சரிங்க மேடம் அந்தப் பெண்ணுக்கு இரண்டு ட்ரெஸ் எதற்காக எடுத்துக் கொடுக்கவேண்டும்?” என்று நாம் கேட்க….
”ஒரு பாசத்தில் ஏழ்மையை நினைத்து எடுத்துக் கொடுத்திருக்கலாம்” என்றார்.
நாம் குறுக்கிட்டு, ”சிறுவர்களை வேலைக்கு அனுமதிப்பது தவறு. அப்படியிருந்து வேலைக்கு என்று அழைத்து போனது ஏன், ஒரு கல்லூரியில் மாதம் ஆயிரம் தொகையும் பொருட்களும் வாங்கி கொடுப்பதாக பல மாணவிகளை அழைத்து வந்துள்ளாரே?” என்று கேட்டோம்.
“அதையும் அந்த அகடாமியில் விசாரித்தோம். அவர்கள் டிரஸ்ட் மூலமாக வருடந்தோறும் ஆண்டுக்கு 1450 பேருக்கு சத்து பொருட்கள் போன்ற உதவிகள் செய்கிறார்கள், ஊட்டச் சத்து இல்லாத 18 வயதுக்கு குறைவான பெண் பிள்ளைகளாக இருக்கவேண்டும், இந்த ஆண்டு முடிந்துவிட்டது அடுத்த ஆண்டு பார்க்கலாம் என்று சொன்னார்களாம்” என்கிறார் பெண் இன்ஸ்பெக்டர்.

பாதிக்கப்பட்ட மாணவி தனது தாயாரிடம், “அன்று முசிறிக்கு ஒரு வீட்டுக்கு அழைத்துப் போனபோது, ஒரு சார் முத்தம் கொடுத்தார், மடியில் படுத்துக்கொள்ளச் சொன்னார், கொஞ்சம் நேரம் பிறகு அந்த அக்கா பிருந்தா என்னை கூட்டிட்டு வந்து உனக்கு இரண்டாயிரம் கொடுத்தாங்க, உனக்கு 1500, எனக்கு 500 ரூபாய் என்று சொல்லி, இரண்டு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்துள்ளார்” என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். அந்த ட்ரெஸ்சை தற்போது காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்கள்.
மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரிடம் நீதி கேட்டு பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் நாகராஜன், மற்றும் அக்கட்சியின் பிரமுகர் கஸ்தூரிராஜன் சொல்கிறார்கள்.


”முசிறி பகுதியில் அதிகளவில் தவறு நடக்கிறது, பள்ளி படிக்கும் சிறுமிகளை கேட்கிறார்கள் பணம் படைத்த பலர். அவர்களுக்குச் சொற்ப காசு கொடுத்து அழைத்து வந்து விடுகிறார்கள். இந்த மாணவிக்கு 13 வயதுதான் ஆகிறது. அதற்கு வெளி உலகம் தெரியாது. போலீஸ் என்றால் பயப்படும் அந்த பிள்ளையிடம் மிரட்டி மிரட்டிக் கேட்டால் என்ன செய்யும்? விசாரிக்கும் போது அம்மாவை பக்கத்தில் வைத்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனையை சாதாரணமாக முடிக்கிறார்கள், குற்றவாளியை அழைத்து வந்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட பிள்ளையைத் திருச்சியில் தங்க வைத்துள்ளார்கள், அந்த பிள்ளை மன ரீதியாகப் பயப்படும் பாதிக்கப்படும்.

இன்ஸ்பெக்டர் சொல்கிறார் அந்த பாதிக்கப்பட்ட பெண் சொன்னால்தான் நடவடிக்கை எடுக்க முடியும், அவள் சொன்னால்தான் எங்களுக்கும் தெரியும் என்கிறார், என்னென்ன செய்தார்கள் எப்படி செய்தார்கள் எத்தனை பேர் செய்தார்கள் என்று சொல்ல வேண்டுமாம். காவல் துறையில் அதி நவீன தொழில் நுட்பம் உள்ளது, கால் டீட்டெய்ல்ஸ் எடுக்கலாம், வாய்ஸ் ரெக்கார்டு எடுக்கலாம். அவர்களிடம் விசாரிக்கலாம்.

இந்த பிள்ளையை வீதியில் அழைத்துப் போனதைப் பார்த்த அனைவரும் சொல்கிறார்கள். அப்படியிருக்க இந்த இன்ஸ்பெக்டருக்கு தெரியாதா? களத்தில் இறங்கி விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட பிள்ளையை மட்டும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி மிரட்டி வருகிறார்கள், உண்மையை மறைக்க. சார் இந்த கேசு ஒன்றும் இல்லாமல் ஆகும். பிருந்தாவை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள், யார் கொடுத்த நெருக்கடி, எம்.எல்.ஏ கொடுத்தாரா? விடப்பட்ட குற்றவாளியான பிருந்தா இரவோடு இரவாக யார் யாரை பிடிக்கனுமோ, சந்திக்கனுமோ அவர்களைப் பார்த்து, பாதிக்கப்பட்ட புகார் கொடுக்கப்பட்ட குடும்பத்தார்களையே புகாரை வாபஸ் வாங்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்” என்றார்கள்.

நாம் விசாரித்த அளவில் பள்ளி மாணவிகளைச் சனி ஞாயிறுகளில் வேலைக்கு அழைத்துப் போனதும், அதேபோல் விஷ்னம் அகடாமி ட்ரஸ்ட் மூலமாக வருடந்தோறும் 1450 பேருக்கு ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் ஆயில், சோப்பு, சீயக்காய் போன்ற பொருட்கள் கொடுப்பதைப் பெற்று தருவதாக அழைத்துச் சென்றதும், சில மாணவிகளை சொற்ப காசுக்கு படுக்கை அறைக்கு அனுப்பி வைத்துள்ளதும் நமது விசாரனையில் உணரமுடிந்தது.

இரண்டு மூன்று நாட்கள் அழைத்துச் சென்று மாணவிகளிடம் மூளைச் சலவை செய்து சொற்ப பணத்திற்குப் படுக்கை அறைக்கும் அனுப்பியும் உள்ளார். அதன் பிறகு அந்த பிள்ளைகளுக்கு விருப்பம் உள்ளதையும் தேவைப்படுவதையும் வாங்கி கொடுத்து, அடுத்தடுத்து இன்னும் நீ வசதியா வருவீர்கள், உங்கள் வீட்டில்தான் அனைவரும் கஷ்டப்படறாங்க, நீ தான் உங்கள் குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்று ஆசை வார்த்தைகள் பேசி… விஷயங்களை வெளியில் சொல்லாத அளவுக்கு வாயைடைத்து பள்ளி மாணவிகளைச் சீரழித்து வருகிறார் பிருந்தா என்கிற சுலக்சனா.

பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன்கள் மற்றும் அவரது தாயார், பிள்ளையைச் சீரழித்த அவள் தண்டிக்கப்படவேண்டும் என்று ஆவேசப்பட்டவர்கள், ஜனவரி 31ஆம் தேதி காலையில் மாணவியின் தாயாரைத் தொடர்புகொண்டு ஒரு சந்தேகத்தைக் கேட்டபோது, அந்த சண்டாளி பிருந்தா போலீசுக்கு பணத்தை கொடுத்விதுட்டு வீட்டுக்கு வந்துட்டா, என் மகள் திருச்சியில் எங்கேயோ வைத்திருக்கிறார்கள் என் கண்ணில் காட்டச் சொல்லுங்கள் என்றார்.

மதியம் 12.00 மணிக்கு மேல் தொடர்புகொண்டால், ஒரு அண்ணன் மழுப்பலாக பேசினார். அடுத்த முறை தொடர்புகொண்டபோது தம்பியிடம் பேசுங்கள் என்று துண்டித்தார். தாயாரைத் தொடர்புகொள்ள முடியவில்லை, என்னாச்சு ஏன் பின் வாங்குகிறார்கள் என்று விசாரித்தோம்.

பிருந்தா முயற்சியாலும் பலரின் தொடர்பாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களை மிரட்டி அச்சுறுத்தி அவர்களுக்கு தேவையானதை கவனித்து, வழக்கிலிருந்து பின் வாங்க அழுத்தம் கொடுத்து வருகிறார் என்ற புதிய தகவல்களைச் சொன்னார்கள். நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சொன்னதை உண்மையாக்கிவிட்டார் பிருந்தா.

இன்ஸ்பெக்டர் காவேரிக்கு பணம் கொடுத்து சரி கட்டிவிட்டதாக பேச்சு இருக்கிறது. டிஎஸ்பி யாஸ்மினுக்கு இதுதான் புதிய போஸ்டிங். அதனால் நேர்மையாக இருந்தாலும், ஸ்பாட்டுக்கு சென்று, ஆர்வத்துடன் விசாரிக்காமல், இன்ஸ்பெக்டர் சொல்வதை நம்பி மேல் அதிகாரிகளுக்கு அப்டேட் செய்துவிடுகிறார். திருச்சி சரக டிஐஜி சரவணன் சிபிஐயில் பணியாற்றியவர் நேர்மையானவர், அவர் தனி டீம் அமைத்து நேரடி பார்வையில் கண்காணித்தால் பல புரியாத புதிர்கள் வெளிவரும் என்கிறார்கள் முசிறி வட்டாரத்தினர்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: