நக்கீரன் : 'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' ஆக வாழ்ந்தவர் ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார். கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தவர்.
இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியை போக்க, சத்தியஞான சபையில் தருமசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கி வருகிறது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 -ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களிலும், காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையிலும் கொடியேற்றம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.
கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி இன்று அதிகாலை முதல் ஜோதி தரிசனத்தை தரிசித்தனர். தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 5.30 மணி ஆகிய நேரங்களில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
வடலூா் தைப்பூச விழாவையொட்டி, குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், போக்குவரத்தை சீா் செய்யவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் 800 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக