ஞாயிறு, 16 அக்டோபர், 2022

குழந்தை திருமணம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கைது! 20 தீட்சிதர்கள் மீது சட்டம் பாயும்

மின்னம்பலம் - Prakash  :  குழந்தை திருமணம் சிதம்பரம்  நடராஜர் கோயில் தீட்சிதர்கள்  கைது!
குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் இன்று (அக்டோபர் 15) கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் மீது சமீபகாலமாக பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்துவருகின்றன.
அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சிறு வயதில் திருமணம் செய்துவைப்பதாக புகார் எழுந்து வருகிறது.
இதுதொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில் 2020 மற்றும் 2021ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்ததாக 20க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில், குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் இன்று (அக்டோபர் 15) கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதைக் கண்டித்து நடராஜர் கோயில் கிழக்கு கோபுரம் முன்பு 100க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏடிஎஸ்பி அசோகன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், அவர்கள் தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். இந்தச் சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெ.பிரகாஷ்

கருத்துகள் இல்லை: