வியாழன், 20 அக்டோபர், 2022

பேரறிஞர் அண்ணாவை முட்டாள் என்று கூறிய பத்ரி சேஷாத்ரியின் பதவி பறிப்பு!

மின்னம்பலம் - Selvam  : பேரறிஞர் அண்ணா குறித்து சர்சை பேச்சு : பத்ரி சேஷாத்ரி பதவி பறிப்பு!
கிழக்கு பதிப்பக உரிமையாளரும், தமிழ் இணையக்கல்வி கழகத்திற்கான ஆலோசனைக்குழு உறுப்பினருமான பத்ரி சேஷாத்ரி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் தமிழ் இணையக்கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
“மூன்றே மாதங்களில் இந்தி கற்க முடியும். அதன்பிறகு அந்த மொழியில் கற்க ஒன்றுமில்லை” என்று அண்ணா கூறியிருந்தால், அது ஒரு அபத்தமான கூற்று. அண்ணா ஒரு முட்டாள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பத்ரி சேஷாத்ரி கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.


பத்ரி சேஷாத்ரியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை தமிழக அரசு பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக திமுகவினர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில் தமிழ் இணையக்கல்வி கழகத்திற்கான ஆலோசனைக்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிலிருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டுள்ளார்.

பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டது குறித்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி. பத்ரி சேஷாத்ரி தமிழ் இணையக்கல்வி ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

செந்தில் குமார் எம்.பி-யின் பதிவை மேற்கோள் காட்டி, “இது தான் அண்ணாவின் வெற்றியா?” என்று பத்ரி சேஷாத்ரி கருத்து பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த செந்தில் குமார் எம்.பி, “ஆம், இது எங்கள் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களின் வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.

இந்தி ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தி மொழிக்கு எதிராக தமிழக அரசியல் சூழலில் விவாதம் வலுத்து வரும் நிலையில், பத்ரி சேஷாத்ரி பதவி நீக்கம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

கருத்துகள் இல்லை: