திங்கள், 17 அக்டோபர், 2022

இலங்கை இந்து தமிழர்களுக்கு குடியுரிமை : நீதிமன்றம் யோசனை!

 minnambalam.com - Kavi  :  இலங்கையில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் இந்துக்களை இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தின் கீழ் கொண்டு வரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன வெறியால் பாதிக்கப்பட்டுள்ள ‘இந்து – தமிழர்களையும்’ இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தின் கீழ் கொண்டுவரலாம் எனவும் இதை யோசனையாக மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
திருச்சியை சேர்ந்த அபிராமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது தாயும் தந்தையும் 1990 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு,

அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், தான் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியில் உள்ள ஷியாமளா என்ற தனியார் மருத்துவமனையில் பிறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்ததாகவும், தனக்கு ஆதார் அட்டையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அபிராமி,

தனக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கோரி பல்வேறு காலகட்டத்தில் அரசிடம் விண்ணப்பித்தும், தனக்கு குடியுரிமை நிராகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்ததால் தனக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் இன்று (அக்டோபர் 17) விசாரணைக்கு வந்தபோது ,
மனுதாரர் அபிராமி இலங்கை குடியுரிமையை பெறவில்லை என்பதும், அவர் பெற்றோர் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு இந்தியா வந்துள்ளது தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி,
அவருக்கு இந்திய குடியுரிமை தரவில்லையென்றால் அவர் நாடற்றவராகிவிடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டதின் கீழ் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து குடியேறிய மதச்சிறுபான்மையினரான இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் குடியுரிமைச் சட்டத்தில் இலங்கை சேர்க்கப்படவில்லை என்றாலும்,

இலங்கையில் தமிழ் இந்துக்களே இனக்கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி,
அப்படி பாதிக்கப்பட்டுள்ள இந்து சிறுபான்மையினரான தமிழர்களையும் இச்சட்டத்தில் கொண்டுவருவதற்கான அனைத்து காரணிகளும் பொருந்துவதாக தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில், மத்திய அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றாலும், மனுதாரர் அபிராமிக்கு 16 வாரங்களில் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வினோத்

கருத்துகள் இல்லை: