முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குள் சென்ற பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் டிசம்பர் பத்தாம் தேதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பெரும் சத்தமிட்டு, தன்னை கோவிலைவிட்டுத் துரத்தியதாக ஜாகிர் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் பதிவில், "நான் என் தாய்வீடாக கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன் . காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப்பட்டேன்.
இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை" என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ரத்த அழுத்தம் அதிகரித்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று தற்போது வீடு திரும்பியிருக்கிறார் அவர்.
என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டபோது, "மூன்று வயதிலிருந்து அந்தக் கோயிலுக்கு நான் சென்றுவருகிறேன். அதைப் போலவேதான் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் பெருமாளை சேவிப்பதற்காகப் போனேன்.
நம்பிள்ளை உட்கார்ந்து ஏடு சொன்ன இடத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் என்னைப் பார்த்து சத்தமிட்ட ஆரம்பித்தார். அங்கிருந்து ஆரம்பித்து ரங்க ரங்கா மண்டபம் வரையில் "வெளியே போடா" என்று சத்தம் போட்டார். இன்னொரு தடவை உள்ளே வந்தால் கொலை செய்துவிடுவேன் என்றார். அதனால் வேறு வழியில்லாமல் வெளியே வந்துவிட்டேன்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் ஜாகிர் ஹுசைன்.
பொதுவாக பெரிய இந்துக் கோவில்களில் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் இந்து அல்லாதவர்கள் செல்ல முடியாது. "நான் இஸ்லாமிய பெற்றோருக்குத்தான் பிறந்தேன். என் பெரியப்பாவுக்கு குழந்தை இல்லை என்பதால் என்னைத் தத்துக் கொடுத்துவிட்டார்கள். என்னுடைய பெரியப்பா இந்து நாயுடு சமூகத்தை சேர்ந்த அலமேலு மங்கா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர் மிகப் பெரிய பெருமாள் பக்தர். அவரின் தாக்கத்தில் நான் பெருமாளை சேவிக்க ஆரம்பித்தேன்.
பரத நாட்டியம் கற்றுக்கொண்டேன். பரத நாட்டியத்தில் நான் இந்துக் கதைகளைத்தானே ஆடுகிறேன். கோவில்களின் சன்னிதிக்கு முன்பாக இந்து அல்லாதவர்கள் உள்ளே செல்லக்கூடாது என போர்டு வைத்திருப்பது உண்மைதான். ஆனால், ஒருவர் இந்து நம்பிகைக்களுடன் இருக்கும்போது அவரைத் தடுப்பது எப்படி சரியாகும்? பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் வந்து நிற்க அந்த ரங்கராஜன் யார்?" என்கிறார் ஜாகிர் ஹுசைன்.
திருவரங்கத்திலேயே துலுக்க நாச்சியாருக்கு சன்னிதி உண்டு. பெருமாளுக்கு லுங்கி கட்டி ரொட்டி நைவேத்தியம் செய்கிறார்கள். பெருமாளே இஸ்லாமியர்களை ஏற்கிறார், இவர்கள் ஏன் தடுக்கிறார்கள் என்கிறார் ஜாகிர். ஜேசுதாஸ் கிறிஸ்தவர் என்பதால் ஐயப்பன் கோவிலில் அவரது பாடல்கள் ஒலிக்காமல் இருக்கிறதா என்கிறார் அவர்.
இது குறித்து கேட்பதற்காக ரங்கராஜன் நரசிம்மனை பிபிசி தமிழ் அழைத்தபோது, "இதைக் கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று கூறியதோடு, கடுமையான வார்த்தைகளில் ஏசினார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக பிபிசி கேட்டபோது, "இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறேன். விசாரணை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, ஒருவர் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று சொன்னால் அந்த நடவடிக்கையை கோவில் நிர்வாகம்தான் எடுக்க வேண்டும். யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள முடியாது. விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
பரதநாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன், 1990களில் இருந்தே வைணவத் திருப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். இது தொடர்பாக அவர் மேற்கொண்ட பணிகளை சமூக வலைதளங்களில் பலரும் பட்டியலிட்டு வருகின்றனர்.
கண்டித்துள்ள இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா
ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசிக்கச் சென்ற நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் மோசமாக நடத்தப்பட்டது ஆழமாக பாதிக்கிறது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். துலுக்க நாச்சியாருக்கு சிறப்பிடம் தருவதன் மூலமாக சங்கம பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது ஸ்ரீரங்கம் என்பதை நாம் மறக்கவேண்டாம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக