விஜயகாந்தின் 150 ஆவது படமாக ஏவிஎம் தயாரிப்பில் உருவான மாநகர காவல் படத்தின் இயக்குனர் எம் தியாகராஜனின் சாலையோர உயிரிழப்பு திரையுலகின் மற்றொரு கொடூர முகத்தை காட்டியுள்ளது!
கலைஞர் செய்திகள் - Prem Kumar : தமிழ் சினிமாவின் முகவரி என்றால் அது கோடம்பாக்கம்தான்.. அந்த முகவரியால் உச்சாணிக்கொம்பில் ஏறியவர்கள் பலர் என்றால், அதே முகவரியால் முகவரி இல்லாமல் தொலைந்தவர்களும் ஏராளம் உண்டு.
கிராமத்தில் இருந்த வேலை, சொத்து, வசதி வாய்ப்புகளை உதறிவிட்டு சென்னைக்குப் பயணித்த பலரும் இன்று திறைத்துறையில் நிறைந்து கிடக்கின்றனர்.
நடிகர் விஜயகாந்த்தை வைத்து படம் இயக்கிய இயக்குநர் எம்.தியாகராஜனின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. டி.எப்.டி படித்து முடித்துவிட்டு சென்னை வந்த தியாகராஜனுக்கு பல்வேறு சிரமங்களுக்குப் பிறகு நடிகர் பிரபுவை வைத்து ‘வெற்றி மேல் வெற்றி’ என்ற படத்தை இயக்கினார்.
அதன்பின்னர் மீண்டும் சிறிதுகாலம் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த தியாகராஜனுக்கு ஏ.வி.எம் நிறுவனத்தின் மூலம் விஜயகாந்த்தின் 150வது படமான ‘மாநகர காவல்’ என்ற வெற்றிப்படத்தை இயக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின்னர் பல்வேறு இடங்களில் கதைகளை சுமந்துகொண்டு வாய்ப்புக் கேட்டு எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சொந்த ஊருக்கும் செல்ல மனமில்லாமல் சென்னையிலேயே தங்கியுள்ளார்.
வறுமையில் வாழ்ந்துவந்த தியாகராஜன் இன்று ஏ.வி.எம் ஸ்டூடியோ எதிரில் படுத்துக்கிடந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் எழாமல் கிடந்த தியாகராஜனை அக்கம்பக்கத்தினர் பார்த்து தகவல் கொடுத்ததன் பேரில் போலிஸார் வந்து பார்த்துள்ளனர்.
அப்போது அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்ட போலிஸார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக