புதன், 8 டிசம்பர், 2021

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் தொடர்ந்த வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணை

 Abdul Muthaleef  -  Oneindia Tamil :  கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி மாதம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியுமான டாக்டர் எழிலன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல். இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டு மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
1976 ம் ஆண்டு மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதில் கல்வி முக்கியமானது.



மாநில அரசுகளின் அனுமதியின்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது, இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைத்தது பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு.

கருத்துகள் இல்லை: