புதன், 8 டிசம்பர், 2021

மிச்சிகன் துப்பாக்கிச்சூடு... 4 பேரைக் கொன்ற மாணவன்... அதிர்ச்சி பின்னணி!

கலைஞர் செய்திகள் - ராஜசங்கீதன் : அமெரிக்க மிச்சிகன் மாகாண ஆக்ஸ்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளிக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
பகல் 12.51 மணிக்கு ஈதன் க்ரம்ப்ளே என்கிற 15 வயது மாணவன் பள்ளியின் கழிப்பறையிலிருந்து வெளிவந்தான். கையில் துப்பாக்கி!
சில நிமிடங்கள் மட்டும்தான். படபடத்தது துப்பாக்கி. தோட்டாக்கள் பறந்தன. 30 தோட்டாக்கள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதைபதைத்தனர். காவல்துறைக்கு தொடர்பு கொண்டனர். நூற்றுக்கணக்கான அழைப்புகள். 12.57 மணிதான் ஆகியிருந்தது. காவல்துறை ஈதன் க்ரம்ப்ளேவை கைது செய்தது. நால்வர் கொல்லப்பட்டிருந்தனர். ஆறு பேருக்குக் காயம்.  அமெரிக்காவில் பள்ளிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு புதிதில்லை. ஓயவுமில்லை. எல்லா துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் துப்பாக்கிச் சூடுகள் ஓயவில்லை.

ஈதன் க்ரம்ப்ளேவின் கைதுக்குப் பிறகு அவனது சமூகவலைதளக் கணக்குகள், செல்பேசி முதலியவை பரிசோதிக்கப்பட்டன. சக மாணவர்களை சுட்டுக் கொல்ல வேண்டுமென திட்டமிட்டே அவன் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் ஒரு முக்கியமான திருப்பம் நேர்ந்தது. ஈதன் க்ரம்ப்ளேவின் பெற்றோரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதற்குக் காரணமாக சில பின்னணி தகவல்கள் குறிப்பிடப்படுகிறது.

ஈதன் க்ரம்ப்ளேவின் சமூகவலைதளத்தில் துப்பாக்கியின் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. ‘என்னுடைய புது அழகு’ என பதிவிட்டு ‘ஹார்ட்டின்’ பதித்திருந்தான் ஈதன் க்ரம்ப்ளே. அந்தத் துப்பாக்கி அவனது தந்தையின் புதுத் துப்பாக்கி.

துப்பாக்கிச் சூடுக்கு ஒருநாளுக்கு முன் ஒரு ஆசிரியர் முக்கியமான விஷயத்தை கவனித்திருக்கிறார். ஈதன் க்ரம்ப்ளே இணையத்தில் தோட்டாக்கள் வாங்கத் தேடிய விஷயம். ஆசிரியர் சுதாரித்துக் கொண்டு தகவல் கொடுத்ததில் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஈதன் க்ரம்ப்ளேவின் பெற்றோருக்கும் தகவல் சொல்லப்பட்டது. அப்போது ஈதன் க்ரம்ப்ளே ஒரு குறுந்தகவலை மகனின் செல்பேசிக்கு அனுப்பினார்.

“ஹா ஹா... எனக்கு உன் மீது கோபமில்லை. மாட்டாமல் இருக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும்.”

என ஒரு குறுந்தகவல்.

சம்பவம் நடந்த அன்று சில மணி நேரங்களுக்கு முன் பெற்றோர் அவசரச் சந்திப்புக்காக பள்ளிக்கு அழைக்கப்பட்டனர். ஈதன் க்ரம்ப்ளேவின் இடத்துக்கு அருகே சில குறிப்புகளை ஆசிரியர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். துப்பாக்கி மற்றும் ரத்தவெள்ளத்தில் கிடக்கும் மக்களின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றுக்குக் கீழ் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“என்னுடைய எண்ணங்கள் நிற்க மறுக்கிறது. யாரேனும் உதவுங்கள். எங்கும் ரத்தம்.”

ஈதன் க்ரம்ப்ளேவுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றனர் ஆசிரியர்கள். பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. அவன் பள்ளியிலிருந்து நீக்கப்பட அவர்கள் விரும்பவில்லை.

எல்லாம் முடிந்த பிறகுதான் 12.51 மணிக்கு ஈதன் க்ரம்ப்ளே கையில் துப்பாக்கியுடன் கழிவறையிலிருந்து வெளிவந்தான்.

துப்பாக்கிச் சூட்டைப் பற்றிய தகவல் பரவியது. பள்ளியில் ஒரு மாணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறான் என தொலைக்காட்சிகள் செய்திகள் வாசித்தன. ஈதன் க்ரம்ப்ளேவின் தாய் அவனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினார்:

“ஈதன்.. அதைச் செய்யாதே!”

துப்பாக்கி உரிமத்துக்காகவும் பதின் வயது மகன் பயன்படுத்த துப்பாக்கியைக் கொடுத்தமைக்காகவும் மகனிடம் இருக்கும் சிக்கலை பொருட்படுத்தாமல் இருந்தமைக்குமென பெற்றோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு என்பது மாணவர் மற்றும் பெற்றோர் ஆகியோருடன் முடிந்துவிடக் கூடியதா?

ஒரு நாடு அத்தகையச் சூழலுக்கு ஏதுவாக இருந்தால் மட்டுமே இத்தகைய அசம்பாவிதங்கள் சாத்தியம்.

அமெரிக்காவில் அதன் அரசு அத்தகையச் சூழலை எந்தளவுக்கு சாதகமாக வைத்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தப் புகைப்படம்.

மிச்சிகன் துப்பாக்கிச்சூடு... 4 பேரைக் கொன்ற மாணவன்... அதிர்ச்சி பின்னணி!

புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் தாமஸ் மெஸ்ஸி. உடன் இருப்பது அவரின் குடும்பம். அனைவரின் கையிலும் ஆயுதங்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக இப்புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அதுவும் பள்ளியில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு படம் பதிவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தாமஸ் மெஸ்ஸி என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதி!

கருத்துகள் இல்லை: