வியாழன், 9 டிசம்பர், 2021

கனகி புராணம் ! 19ம்நூற்றாண்டு : யாழ்ப்பாண காமசூத்திரம்! (ஆறுமுக நாவலரும் கனகியின் வாடிக்கையா?)


Kaala Subramaniam  :  கனகி புராணம் (19ம்நூற்றாண்டு : யாழ்ப்பாண காமசூத்திரம்.
டாக்டர் கு. மகுடீஸ்வரன்.
(ஆறுமுக நாவலரின் காமரூபம் பற்றியும் இக்கட்டுரையில் ஓரிரு வரிகள் உண்டு.)
இந்தக்கால PornStarகளைப்போல 19ம் நூற்றாண்டில் யாழ் வண்ணார் பண்ணையில் வசித்தவர் பிரசித்தமான கனகி என்னும் கணிகை. இவருடைய வாடிக்கையாளர்களில் ஆறுமுகநாவலரும் அடங்குவார் என்பது கனகிபுராண செய்யுள்களிலிருந்து விளங்கும். முக்காடு போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் ஆறுமுகநாவலர் வண்ணார் பண்ணை கணிகையர் தெருக்களில் திரிந்தது யாழ்ப்பாண வாய்மொழி வரலாறு அறிந்த உண்மை.
கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர்களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார் நம் புலவர் சுப்பையனார். அவருடைய ஆதி ஒலைப்பிரதிகள் தொலைந்திருக்கவேண்டும். 19ம் நூற்றாண்டில் கனகி புராணம் வாய்மொழி இலக்கியமாகவே வாழ்ந்தது. பின்வரும் குறிப்பு முக்கியமானது.
"1914 வரையிற் கனகி புராணத்துச் செய்யுட்களை அதிக சிரமப்பட்டு ஊரூராய்த் திரிந்து சம்பாதித்தேன். அப்பாடலில் எனக்கு அதிவிருப்பு அப்போதிருந்தது. 1935 வரையில் ந..சி. கந்தையா அவர்களின் சினேகம் கிடைத்தது. அவருடன் கனகி புராணம் பற்றிய சம்பாஷணை நடைபெற்றது. சிறீ. ந.சி.க. அவர்கள் அப் பிரதிகளை அச்சிட விரும்பியமையினால் அவற்றையெழுதிக் கொடுத்தேன்."
20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயை கனகி புராணத்தின் தவறிப்போன பகுதிகள் தவிர்து மற்றவை அச்சுப்பதிப்பாக வருகின்றன. இப்போது இந்த நூல் நூலகம் இணைய நூலகத்தில் கிடைக்கிறது. இணைப்பு இக்கட்டுரை முடிவில்.
செய்யுள் 01
"தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத்,
தளதளத் தொன்றோ டொன்றமையா(து)
அடர்த்திமையாத கறுத்த கணதனால்
அருந்தவத் தவருயிர் குடித்து,
வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து,
மதகரிக் கோட்டினுங்கதித்துப்,
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து,
பருமித்த துணைக் கன தனத்தாள்"
பொழிப்புரை
பருத்து அடிவிரிந்து மேலோங்கி விம்மிச் செழித்து இரண்டும் தம்முள் ஒன்றோடொன்று மென்மேலும் நெருக்கி முனைந்து நிற்பது போல ஒத்திருந்து தம்முடைய கண்களாலே செய்தற்கரிய தவஞ்செய்த முனிவருடைய உயிரைப் பருகியது போலத் தோன்றி முத்துமாலை முதலா வடங்களுக்குள் அடங்காமல், இரட்டித்துப் போட்ட இறவுக்கையையும் கிழித்து, மதம் பொழியும் யானைக் கொம்பைக் காட்டிலும் குத்துவதுபோல நிமிர்ந்து, மேலாடைக்கு மேலும் புலப்படுகின்ற, தேமல் வரிசைகள் பரந்து புடைத்த இரண்டு பாரமான கொங்கைகளை யுடையவள் (கனகி).
நூலாசிரியர் வரலாறு
உதயதாரகைப் பத்திராதிபர், திரு. J. R. ஆணல்ட் சதாசிவம் பிள்ளை அவர்கள் தாம் 1886ம் ஆண்டு மானிப்பாய் மிஷன் அச்சுக் கூடத்தில் பதிப்பித்த பாவலர் சரித்திர தீபகம் என்னும் நூலில் கனகி புராண ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றின் பகுதியை இங்ஙனம் தந்துள்ளார்.
"யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை மேளகாரப் பகுதியைச் சேர்ந்த இவர் தம் சுய சாதித் தொழிலிற் பயின்றிராதபோதும் வழக்கமாய் "நட்டுவச் சுப்பையன்" எனப் பட்டார். சிறுவயதிலே பதிதனாகி இவர் தெல்லிப்பழையிலே வாழ்ந்த அமெரிக்க மிஷினரிமாரைச் சேர்ந்து கிறீஸ்து மதானுசாரியானார். மறுகால் அம்மதம் விட்டு மல்லாகக் கோயிற்பற்றைச் சார்ந்த ஏழாலைக் குறிச்சியிலே கல்யாணஞ்செய்து, அவ்வூரைத் தம் உறைபதியாக்கினார்.
"இவரை நாம் கண்டிருந்தும் இவருடைய கல்வி சாமர்த்தியங்களைக் குறித்து யாதும் உணர்ந்தோம் அல்லேம். இலக்கண இலக்கியங்களிற் பயின்றவரோ, அன்றி வாணி வாக்கில் உறையப்பெற்றவரோ யாதும் அறியோமாயினும், வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் தாசிகளுள் ஒருத்தியும், இற்றைக்குச் சிலகாலத்தின் முன் இறந்தவளுமாகிய கனகி என்பவள் பேரிற் "கனகி சயமரம்" என பாடிய ஓர் பாடலால் நல்ல சரள நடைப் புலவராய் இருந்தார் இவர் என அறிகிறோம்.
இப்பாடல்கள் முழுவதையும் எடுத்துக் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாப் பரிசு கொடுப்பதாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் பல வருடங்களின் முன், யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தோடு தொடர்புடைய சிலருக்குத் தெரிவித்தபோது, இக் கையெழுத்துப் பிரதியிலுள்ள பாடல்கள் திரட்டப்பட்டனவெனத் தெரிய வருகின்றது. இப் பாடல்கள் அனைத்தும் அகப்படாமையை நினைதொறும் நினைதொறும் எமக்கு வருத்த மிகுகிறது.
செய்யுள்     02
மானைக் கயலை வேல் வாளை
மறுநீர்க் கடலைக் குவளையை நற்
கானிற் கமலந் தனைவெல்லும்
கண்ணாய் கனகே யிவணிருப்போன்,
ஞானக் குணமும் நல்லறிவும்
நலஞ்சேர் புகழு மிகவுடையோன்,
ஆனைக்கோட்டை வேளாளன்
ஆறுமுகன்கா ணென்பாரே.
பொழிப்புரை
மானையும், கயல் மீனையும், வேலையும், வாளையும், சுழலுகின்ற நீரையுடைய கடலையும், கருங்குவளைப் பூவையும், நல்ல சோலையிலுள்ள தாமரைப் பூவையும், வென்று சிறந்த கண்களையுடையவளே! கனகே! இங்கிருக்கின்றவன் கல்வி அறிவுத் தன்மையும் நல்ல இயற்கை அறிவும் நன்மை பொருந்திய கீர்த்தியும் மிகவுடையவன். ஆனைக்கோட்டையில் வாழும் வேளாளன். இவனைத்தான் ஊரார் ஆறுமுகன் (ஆறுமுகநாவலர்) என்று சொல்வார் காண்.
செய்யுள்   03
கொஞ்சிக் கடிக்கத் தனங் கொடுத்துக்
கொடுத்த தனத்தைத் தான் வாங்கும்,
மஞ்சட் புரண்ட முகத்தாளே!
மாரன் கரும்பை வளைப்பவளே!
கிஞ்சிற் றனமும் குத்திரமுங்
கேடு நிறைந்த மனமுடையோன்
வஞ்சக் கொடியோன் பெரியதம்பி
வரத்தால் வந்த வைத்தியனே.
பொழிப்புரை
முத்தமிட்டுக் கடிப்பதற்கு தன் தனத்தை(முலைகள்)  ஆடவர்க்குக் கொடுத்து, அவர் கொடுத்த தனத்தைத் தான் வாங்குகின்ற, அரைத்த மஞ்சளிலே புரண்டாற் போல் மஞ்சள் ஒட்டிய முகமுடையவளே! மன்மதனுடைய கரும்பு வில்லை வளைக்கின்றவளே! உலோபத்தன்மையும் வஞ்சனையும் வேறு கெட்ட எண்ணங்களும் நிரம்பிய மனமுடையவன் வஞ்சகஞ் செய்கின்ற இரக்கமற்ற பாவி பெரியதம்பி என்பவன். இவன் தன் பெற்றோருக்கு வரத்தினால் பிறந்த வைத்தியத் தொழிலாளி.


Kaala Subramaniam  :  ஞானக் குணமும் நல்லறிவும்/நலஞ்சேர் புகழு மிகவுடையோன் யாராயிருக்கமுடியும்? பிறர் அறியாமல் செல்ல இட்ட முக்காடா? சிறுத்த உருவமும் பெருத்ததலையும் கொண்டதால் பானாத்தலையர் என்று வரைமுறைதவறி திட்டுவாங்கியவர் தம்மை மறைத்துக்கொள்ளப் போட்ட தலைத்துண்டு முக்காடா? கனகி புராணம் புனைவா? தமிழில் ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட தாசிகளைப் பற்றி ஏராளமான குஜிலி இலக்கியம் இருக்கிறது. (இவற்றை எல்லாம் மேலுள்ள கட்டுரை ஆசிரியர் சேகரித்து வைத்துள்ளவர்). கனகி உண்மையல்ல புனைவிலக்கியப் பாத்திரம் என்று அவ்வளவு எளிதாக தமது வசதிக்காக ஒதுக்கிவிட முடியுமா? ஸ்மார்த்த விசாரம் இல்லாத தாத்ரிக் குட்டி வரலாற்றைப் போல இது இல்லையா? மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற முற்காலத் தமிழறிஞர் முதல் இக்கால மு.வ. ‘முதலி’யோர் வரை இந்தக் பெண்ணடிமைத்தனக் காலத்தின் வெளிப்படை இயல்புகளுள் ஒன்றான பெண்வழிச் சோரத்திலிருந்து யாரையும் காபந்த பண்ணமுடியுமா?

Pirashanthan Srivaratharajan :   ஐயா இந்நூல் நகைச்சுவை இரசித்திற்காக எழுதப்பட்ட புனைவென்பதை அட்டையைப் பார்த்துப் புரியுங்கள். நல்லூர், ஆனைக்கோட்டை வேறுபாட்டை அறிய ஈழம் வாருங்கள். புனைவில் வரும் பெயரை உண்மையென மயங்கினால் யாது செய்ய முடியும். சுப்பிரமணியம் என்று ஏதேனும் இன்றைய நாவலில் வரும் பாத்திரம் தாங்கள்தான் என எதிர்கால உலகம் முடிவெடுப்பின் அது வேடிக்கையல்லவா? பாத்திரங்கள்
உண்மையெனில் கனகி புராணத்தில் வரும் மற்றைய நபர்கள் யாவர் என, தங்கள் ஆய்வாளர் கூறுவாரா?
முன்னைய ஈழத்து இலக்கியங்கள் பற்றி சற்றே அறிந்து பேசுவது நாகரிகம்.
மேலும், இவ்விடத்தில் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, மு.வ. பற்றிய செய்திகள் தேவையற்றவை என்பதை மாணவரும் அறிவர். ஒருவர் இப்படி இருந்தார், ஆகவே மற்றவரும் இப்படித்தான் இருந்திருப்பார் என முடிவெடுப்பதுதான் ஆய்வு நேர்மையா?
எதனையும் நிறுவுவதற்கு வேண்டும் ஆதாரம்.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
நன்றி

Umapalan Sinnadurai :   "ஞானக் குணமும் நல்லறிவும்ஃநலஞ்சேர் புகழு மிகவுடையோன் யாராயிருக்கமுடியும்? "
யாழ்ப்பாணத்தில் பெரும்புலவர்கள் பலர் இருந்ததும், தமிழ் வளர்த்ததும் தங்களுக்குத் தெரியாததல்ல.
தங்கள் கூற்றுப்படி இது புனைவிலக்கியமாக இல்லாமல் உண்மைச் சரித்திரமாக இருப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் ஆனைக்கோட்டை ஆறுமுகம் என வருகிறதே. அப்படியானால் கதாசிரியர் பொய் சொல்கிறாரா? இலங்கையில் இருப்பவர்களுக்கு ஆனைக்கோட்டை எங்கே இருக்கிறது, நல்லூர் எங்கே இருக்கின்றது என்பது தெரியும். நூலாசிரியரும் இலங்கையரல்லவா? நல்லூர் ஆறுமுக நாவலர் மட்டுமா யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர்?
பெரும்புலவர்கள் பலர்பெண்வழிச்சோரம் போனார்கள் " அதனால் நாவலரும் அப்படித்தான் என எண்ணுவது தவறல்லவா? தவறேயில்லாத மனிதர் இருக்க முடியாது என்பதில் இருவேறுகருத்தில்லை. ஆனால் இத்தகு தவறை நாவலர் விட்டதாக எதுவித தகவல்களும் இல்லை. மாறாகக் கோயில்களில் ஒருசில நடனநிகழ்வுகளை நாவலர் எதிர்த்தமைக்கான தகவல்கள் உண்டு. தங்களைப் போன்ற தமிழறிஞர்களின் பதிவுகளை, கருத்துகளைச் சரியென்றே பலர் ஏற்றிடுவர் என்பதைத் தாங்கள் கருத்திலெடுக்க வேண்டும்.
இதுசம்பந்தமாக மேலதிக தகவல்கள் தேவைப்படின் நடுவுநிலை தவறாத யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர்களுடன் வரலாற்றாசிரியர்களுடன் பேசுங்கள்.

கருத்துகள் இல்லை: