மின்னம்பலம் : ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்பு மனு தாக்கல்:ஜெயக்குமார் போலீசில் புகார்!
அதிமுகவின் அமைப்புத் தேர்தலில் தலைமைப் பதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில்...வேட்பு மனு தாக்கல் நேற்றும் இன்றும் நடைபெற்றுள்ளன.
நேற்று (டிசம்பர் 3)ஓமப்பொடி பிரசாத் என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தபோது அவரை தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் பிடித்துத் தள்ளி வெளியேற்றினார்கள். இன்றும் வியாசர்பாடியில் இருந்து வந்த ஒருவரை அதிமுக நிர்வாகிகள் துரத்தி வெளியேற்றினார்கள். இதற்கிடையில்தான் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பொன்னையன், “இன்று வேட்பு மனுவின் இறுதி நாள் என்ற வகையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும்”என்றார்.
“இந்த உள் விவகாரங்களை எல்லாம் தேர்தல் செயல்முறைப்படி வெளியே சொல்லக் கூடாது. நாளை பரிசீலனை முடிந்ததும் அதுபற்றிய எல்லா விவரங்களும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்று பதிலளித்தார்.
”ஈபிஎஸ் ஓபிஎஸ் இப்போது வகிக்கும் அதே பதவிகளுக்குத்தான் போட்டியிடுகிறார்களா? என்ற கேள்விக்கும், “நாளை சொல்லுவோம்”என்று பதிலளித்தார் பொன்னையன்.
ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான ஒரே வேட்புமனுவை கூட்டாக தாக்கல் செய்தனர்.
அதில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓட்டகார தேவர் மகன் ஓ. பன்னீர் செல்வம் என்றும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு கருப்ப கவுண்டர் மகன் எடப்பாடி பழனிசாமி என்றும் எழுதப்பட்டிருக்கின்றன. வேட்பு மனுவை உற்று நோக்கும்போது இது தெரிகிறது.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு சென்று அதிமுக தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி புகார் மனு அளித்திருக்கிறார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,
“எங்களுக்கு கிடைத்த தகவல்படி கட்சிக்குத் தொடர்பில்லாத , கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அடிப்படை உறுப்பினராக இல்லாதவர்கள் சமூக விரோதிகளின் துணையோடு, வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் உள்நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். மாளிகையில் செயல்படத் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்று காவல்துறை ஆணையரிடத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஆணையரும் சொல்லியிருக்கிறார்,
உரிய தகுதிகளோடு வேட்பு மனு கேட்டால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் யாருக்கும் வேட்பு மனு வழங்கப்படும். சிலர் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். அப்படி சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து ஏற்படுத்துகிறவர்களை கண்டுபிடித்து தடுப்பது காவல்துறையின் கடமை” என்றார் ஜெயக்குமார்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக