வெள்ளி, 10 டிசம்பர், 2021

பிபின் ராவத் என்னிடம் தண்ணீர் கேட்டார்...விபத்தை பார்த்தவரின் சாட்சி..!

பிபின் ராவத் என்னிடம் தண்ணீர் கேட்டார்...விபத்தை பார்த்தவரின் சாட்சி..!

dailythanthi.com :  ஹெலிகாப்டர் விபத்தின் போது பிபின் ராவத்தை உயிருடன் பார்த்ததாக ஒருவர் கூறுகிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தை நேரில் கண்ட சிவக்குமார் என்பவர், விபத்து குறித்தும் பிபின் ராவத் குறித்தும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:


 "நான் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் எனது சகோதரரை பார்க்க வந்தேன். அப்போது பெரிய சத்தத்துடன் ஹெலிகாப்டர் ஒன்று இரண்டாக பிளந்து தீப்பிடித்து எரிவதை கண்டேன். உடனடியாக நானும், அருகில் இருந்தவர்களும் ஹெலிகாப்டர் விழுந்த இடத்திற்கு விரைந்தோம். நான் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன்.

விபத்தின் தாக்கத்தால் ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி எறியப்பட்ட மூன்று பேரை நான் பார்த்தேன். அவர்கள் காயமடைந்து இருந்தனர், ஆனால் உயிருடன் இருந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரை நாங்கள் வெளியே எடுத்தோம். அப்போது அவர் தண்ணீர் கேட்டார். பின்னர் அவரை மீட்புக்குழுவினர் அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் கழித்து தான் அவர் முப்படைகளின் தலைமை தளபதி  பிபின் ராவத் என்று ஒருவர் எனக்குத் தெரிவித்தார்.

"இந்த மனிதர் நாட்டுக்காக பல சேவைகள் செய்துள்ளார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு என்னால் தண்ணீர் கூட கொடுக்க முடியாத நிலையில் தான் இருந்ததால், என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை," என்று கண்ணீர் மல்க சிவகுமார் கூறினார்

கருத்துகள் இல்லை: