திங்கள், 6 டிசம்பர், 2021

ஓ.பன்னீர்- எடப்பாடி போட்டியின்றி தேர்வு: போராட்டக் களம் காணும் அதிமுக

 மின்னம்பலம் : அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான சி. பொன்னையன் இன்று (டிசம்பர் 6) அறிவித்தார்.
இன்று மாலை 4 மணிக்கு அதிமுக தலைமைக் கழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் வந்தனர். அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்றனர்.


டிசம்பர் 3,4 தேதிகளில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யலாம் அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி ஓ.பன்னீர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் ஒரே வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்து பல்வேறு நிர்வாகிகளும் இந்த இருவரும் அவரவர் தாக்கல் செய்த பதவிக்காகவே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நாளை டிசம்பர் 7தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்... இன்று வேட்பு மனு பரிசீலனைக்குப் பின் மாலை 4 மணிக்கு தலைமைக் கழகத்தில் தேர்தல் ஆணையர்களான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க...பக்கத்தில் ஒ.பன்னீர். எடப்பாடி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஆணையர் பொன்னையன் அறிவித்ததும் ஆரவாரமும் கைதட்டல்களும் எழுந்தன. பன்னீரையும், எடப்பாடி பழனிசாமியையும் ஏராளமானோர் வாழ்த்தினர். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு மெரினாவுக்கு சென்று அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று இருவரும் வணங்கினார்கள்.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சில மணித் துளிகளுக்குள் திமுக அரசை எதிர்த்து வரும் டிசம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பாக மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடக்கும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: