திங்கள், 8 நவம்பர், 2021

அமைச்சர் காந்தியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்: துரைமுருகன் மீது அதிருப்தி?

காந்தி கோரிக்கையை ஏற்ற முதல்வர்: துரைமுருகனுக்கு செக்?

மின்னம்பலம் : தமிழ்நாடு அரசின் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேர் கடந்த நவம்பர் ஆறாம் தேதி மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து மின்னம்பலத்தில் முக்கிய அதிகாரிகள் மாற்றம்: அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆடிய ஆடுபுலி ஆட்டம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம் இதில் அதிகாரிகளின் மாற்றத்திற்கு காரணமான அமைச்சர்களின் கோரிக்கைகள் அதற்கு முதல்வர் ரியாக்ஷன் உள்ளிட்டவை பற்றி விரிவாக எழுதியிருந்தோம்.
அதிலும் குறிப்பாக கைத்தறித் துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி முதல்வரிடம் சென்று கோரிக்கை வைத்தது பற்றி குறிப்பிட்டிருந்தோம்.


கைத்தறித் துறை அமைச்சர் காந்தி அண்மையில் முதல்வரிடம், தனது துறைச் செயலாளராக இருக்கும் அபூர்வா, தான் சொன்னது எதையும் கேட்பதில்லை என்றும் அவரை மாற்றிவிட்டு ஒரு குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்குமாறும் முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அப்போது அவரிடம் முதல்வர், ‘ஒரு அதிகாரியை மாத்துங்கனு சொல்லுங்க. அதை பரிசீலிக்கலாம். ஆனா இன்னாரை நியமிங்கன்னு சொல்லாதீங்க. அதை நான் பாத்துக்கறேன்’ என்று காந்தியிடம் கூறி அனுப்பியிருக்கிறார்.

முதலமைச்சர் இப்படி சொல்கிறாரே என்ற ஒரு மனநிலையில்தான் காந்தி இருந்தார். ஆனால் அதிகாரிகள் மாற்றப் பட்டியலில் காந்தி கேட்ட அதிகாரியைத்தான் கைத்தறித் துறை செயலாளராக முதலமைச்சர் நியமித்துள்ளார். இதனால் அமைச்சர் தரப்பினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏற்கனவே 2006- 11 திமுக ஆட்சிகாலத்தில் வேலூர் கலெக்டராக தர்மேந்திர பிரதாப் யாதவ் பணிபுரிந்தார். அப்பொழுதே சட்டமன்ற உறுப்பினராக இருந்த காந்திக்கும் கலெக்டர் தர்மேந்திர பிரதாப் யாதவிற்கும் நல்ல நட்பு உண்டு. இந்த நட்பு அவர் வெவ்வேறு துறைகளுக்கு சென்றபோதும் தொடர்ந்தது. இந்த நிலையில்தான் தற்போது தனது கைத்தறி துறையின் செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் காந்தி. அதை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் முதல்வர்.

இதற்கு உட்கட்சி ரீதியான சில காரணங்களும் உண்டு. திமுக பொதுச் செயலாளரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகன் மீது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் சற்று அதிருப்தியில் தான் இருக்கிறார். இந்த அதிருப்தி காரணமாகத்தான் அங்கே துரைமுருகனின் தடைகளை தாண்டி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அமைச்சராகியிருக்கும் காந்திக்கு அவர் விரும்பியபடி சில சாதகங்களை செய்து கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்” என்கிறார்கள் ராணிப்பேட்டை திமுகவினர்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: