மின்னம்பலம் : கமல் வருகையால் மழைநீரை அகற்றும் மோட்டார் நிறுத்தப்பட்டதா?
கனமழையால் சென்னை மாநகரில் சூழ்ந்துள்ள மழைநீரைச் சென்னை மாநகராட்சி ராட்சத பம்புகள் மூலம் வெளியேற்றி வருகிறது. இந்தசூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று காலை முதல் சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
வேளச்சேரி, தரமணி, தி.நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆய்வு மேற்கொண்டு, பிரட், பிஸ்கட் மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
தரமணி தந்தை பெரியார் நகரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற போது, அங்கு மழைநீரை வெளியேற்றிக்கொண்டிருந்த மோட்டார் நிறுத்தப்பட்டிருந்தது. கமலின் வருகையால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தான், மோட்டாரை இயக்க விடாமல் 3 மணி நேரம் தடுத்து நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா, யாரை கேட்டு மோட்டரை நிறுத்தினீர்கள் என்று கேள்வி எழுப்பி மீண்டும் மோட்டாரை இயக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மநீம தலைவர் கமல், “வருடா வருடம் மழை பாதிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பருவமழையைப் பேரிடராக மாற்றுவது நம்முடைய கவனக் குறைவுதான் காரணம். அதற்காக அரசு மீது தவறு இல்லை என்று நான் கூறவில்லை. அரசு மீதும் தவறு உள்ளது.
அரசு மீது தவறு இல்லாமல் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், தனி மனிதர்களுக்கும் பொறுப்புள்ளது. இந்த பாதிப்பில் ஒவ்வொருவரும் பங்குகொள்ள வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்பைக் குற்றமாகக் கருதி நாமும் அதைச் செய்யாமல் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
அதுபோன்று மோட்டார் நிறுத்திவைக்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “மோட்டார் நிறுத்தி வைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானது. ஒருவேளை எங்கள் கட்சியினர் நிறுத்தி வைத்திருந்தால் அது தவறு. அப்படி செய்திருக்கக் கூடாது. நாங்கள் வருவதால் தான் மோட்டார் பம்பு இங்கு வந்து உள்ளது, நீர் வெளியேற்றப்படுகிறது” என்று கூறினார்.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக