செவ்வாய், 9 நவம்பர், 2021

கொலை வழக்கில் கைதான கடலூர் எம்பி ரமேஷுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை

Veerakumar -  e Oneindia Tamil :   சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் தொகுதி திமுக எம்பி ரமேஷுக்கு நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு 7ஆண்டுகாலமாக பணியில் இருந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தியதில் எம் பி ரமேஷ் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக கடலூர் தொகுதி திமுக எம்பி ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ், சக தொழிலாளிகள் வினோத், கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வினோத், சுந்தர், நடராஜ், கந்தவேல், அல்லா பிச்சை ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 11 ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்த எம்.பி ரமேஷ் பின்னர் 13 ம் தேதி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜார் ஆகி பின்னர் கடலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று நீதிமன்ற காவல் முடிந்து நீதிமன்றத்தில் மீண்டும் திமுக எம்பி ரமேஷ் கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நவம்பர் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எப்படியும் ஜாமீன் கிடைத்து விடும் என்று ரமேஷ் நினைத்திருந்த நிலையில், அவரது ஜாமீன் கனவு கலைந்து விட்டது.

 

கருத்துகள் இல்லை: