சனி, 13 நவம்பர், 2021

சாட்டை துரைமுருகனை வெளியே விடக்கூடாது.. திமுக அரசு "சீக்ரெட் மூவ்?

  Hemavandhana -  Oneindia Tamil :   சென்னை: சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சை திருப்பனந்தாள் போலீசார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.. இதையடுத்து, துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? மறுக்கப்பட்டு விடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக செயல்பட்டுவந்தவர்...
பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். "சாட்டை" என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே, சோஷியல் மீடியாவில் முக்கியத் தலைவர்களை ஆபாசமாக சித்திரித்து, விமர்சித்து, பல்வேறு வீடியோக்களை வெளியிடும் போக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது...
வழக்கு பாயலாம் என்கிற அச்சமா?
அதில் முக்கியமான ஒருவராக இருப்பவர் சாட்டை துரைமுருகன்.. ஒருமுறை மறைந்த கலைஞர்  கருணாநிதியையும் மிக மோசமாக சித்திரித்து வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், திமுகவினருக்கு இன்றுவரை அந்த கொதிப்பு இருக்கிறது.


இவரது பெரும்பாலான வீடியோக்கள் திமுகவை சாடியே அமைந்து வருவது கவனிக்கத்தக்கதாகவும் உள்ளது.. இதனால் இவர் கைதாகியும் உள்ளார்..
சமீபத்தில்கூட மிரட்டல் வழக்கில் கைதாகி, ஜாமீன் பெற்றிருந்த சாட்டை துரைமுருகன், மறுபடியும் திமுக மீதான சீண்டலை ஆரம்பித்தார்.

கடந்த அக்டோபர் 11- ம்தேதி குமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியிருந்தார். அதாவது கேரள முதலமைச்சருடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஒப்பிட்டு சர்ச்சையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. எல்லை மீறி ஸ்டாலினை விமர்சிக்கும்போது, இதற்கு, பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து சீமானும், அவரை கண்டிக்கவில்லை என்றும், துரைமுருகனை பேசவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 முக்கியமாக திமுகவினர் கொந்தளித்துவிட்டனர்.. ஆனால், நாம் தமிழர் கட்சியினரோ, திமுகவே மீதே இந்த குற்றச்சாட்டை திருப்பிவிட்டனர்.. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும்கட்சியினர் செயல்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.. ஆனால், இதற்கு திமுக தரப்பில் மறுப்பு சொல்லப்பட்டது.... ஒருவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்வதற்கு முன் ஆதாரங்களை வைத்துக்கொண்டுதானே பேச வேண்டும்? ஆதாரம் இல்லாமல் பேசியதால்தான், அவர் மீது புகார் தரப்பட்டுள்ளது.. அதனாலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று பதிலளிக்கப்பட்டது.

இப்படி கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக இந்த விவாதம் சோஷியல் மீடியாவில் பரபரத்த நிலையில், சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு துரைமுருகன் மதுரை ஹைகோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

 அரசு தரப்பில் வாதிடும்போது, "முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டது தொடர்பாக மனுதாரர் மீது தஞ்சாவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அந்த நிபந்தனையை மீறி தொடர்ந்து அதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது" என்றார்... இதையடுத்து ஜாமீன் மனு விசாரணையை வரும் நவம்பர்16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

 இதனிடையே, சோஷியல் மீடியாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறு பதிவுகளை பதிவேற்றம் செய்த வழக்கில் துரைமுருகனுக்கு ஹைகோர்ட் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது... அந்த மனுவில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கும் போது, யாரையும் புண்படுத்தி வீடியோ வெளியிடவோ, பதிவேற்றம் செய்யவோ கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை மனுதாரர் மீறியுள்ளார்.
இதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது... மனு தொடர்பாக பதிலளிக்க துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இது தொடர்பான விசாரணையை வரும் நவம்பர் 19-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.. ஏற்கனவே துரைமுருகனுக்கு ஜாமீன் தந்தும், கோர்ட் அவருக்கு வார்னிங் தந்தும்கூட, மறுபடியும் அவர் எல்லை மீறிவிட்ட நிலையில், இந்த முறை ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.. அதேசமயம், துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக ரகசிய மூவ் ஒன்றை திமுக தரப்பில் எடுத்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.


கருத்துகள் இல்லை: