ஞாயிறு, 7 நவம்பர், 2021

10.5% ரத்து, பஸ் உடைப்பு- பாமக பகீர் திட்டம்: போலீஸ் அலர்ட்!

10.5% ரத்து, பஸ் உடைப்பு- பாமக பகீர் திட்டம்: போலீஸ் அலர்ட்!
மின்னம்பலம் : வன்னியர்களுக்கு 10.5% சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 1ஆம் தேதி, தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக பாமகவினர் ஆங்காங்கே அன்றாடம் அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்து வருகின்றனர்,
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியது கடந்த அதிமுக ஆட்சி. அடுத்து வந்த திமுக ஆட்சியும் இந்த ஒதுக்கீட்டைஉறுதி செய்து அரசாணை வெளியிட்டது.   இதற்கிடையே 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகளும் மாற்றுச் சமூக அமைப்புகளும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டு வந்தது. நவம்பர் 1ஆம் தேதி, நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் அடங்கிய இருவர் அமர்வு இருதரப்பு வாதங்களையும் கூர்ந்துகேட்டு 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

தீர்ப்பைக் கண்டித்தும், வழக்கில் தமிழக அரசு சரியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை என்று குற்றம் சாட்டியும் அன்றே காலையில் ஆர்ப்பாட்டம் மாலையில் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் என நடத்தியது பாமக. அக்கட்சி வலுவாக இல்லாத தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் இல்லை ஆலோசனைகள் கூட்டமும் நடைபெறவில்லை.

தீர்ப்பு வெளியான நவம்பர் 1 இரவு முதல், தமிழக அரசு பேருந்துகளைக் குறிவைத்து அன்றாடம் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டு வருகின்றன. காவல் துறையினரும் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, உட்பட சிலர் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார்கள், இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நிலையை விசாரித்தவர், “கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் இந்த ஒதுக்கீட்டை சட்டமாக இயற்றி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. நீங்கள் எங்கள் ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சட்டரீதியாக நல்லதைச் செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் முதல்வர். அதே சமயத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணியும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது இந்தத் தீர்ப்பை ஒட்டிய போரட்டங்களில் ஈடுபடும் பாமகவினர் மீது போடப்பட்டுவரும் வழக்குகளையும், கைது செய்து வருவதையும் நிறுத்தச்சொல்லுங்கள் என்றுள்ளார்.

முதல்வரைச் சந்தித்த பிறகும் ஆங்காங்கே அரசு பேருந்துகள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு வருவது தொடர்ந்திருக்கிறது. இதை அறிந்த காவல்துறையின் மூத்த அதிகாரியே பாமக தலைவர் ஜிகே மணியைத் தொடர்புகொண்டு, ‘பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளைத் தாக்குவதால் உங்கள் கட்சி மீதுதான் பொது மக்களுக்கு வெறுப்பு உண்டாகும். கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று பொறுமையாகக் கூறியுள்ளார். உடனே ஜி.கே.மணியும், மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேருந்து கண்ணாடிகளை உடைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் நடத்தும் ஜூம் மீட்டிங்கில், “ 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குப் போட்டவர்கள் திமுகவினர்தான். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சரியாக வாதிடவில்லை. எனவே அரசுக்கு எதிராக மாவட்டந்தோறும் போராட்டம் செய்யவேண்டும், கைதாக வேண்டும். சிறை நிரப்பும் போராட்டமாக இருக்க வேண்டும்” என்று பேசி வருகிறார்கள்.

பாமகவின் துணை அமைப்பான சமூக நீதி பேரவைக் கூட்டம் இணைய வழியில் இன்று நவம்பர் 7ஆம் தேதி காலை முதல் மதியம் 1.30 மணி வரையில் ஜிகே மணி தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் பாலு மற்றும் பாமகவில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், “உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது. அதை நாம் நம்ப முடியாது. இருந்தாலும் நாமும் தனியாக மனுபோடுகிறோம். போராட்டத்தில் கைதாகியுள்ளவர்கள் மற்றும் பேருந்து உடைத்த வழக்கில் சிறைக்குச் சென்றிருப்பவர்களை ஜாமீனில் எடுங்கள். அவர்களிடம் பண உதவி கேட்கவேண்டாம் ” என்று வழக்கறிஞர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்துள்ளனர்.

பாமக தலைவரான ஜி.கே.மணியே பேருந்துகளை உடைக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய பிறகும்... நேற்று இரவு வரையில் கடலூர் மாவட்டத்தில் 15 பஸ் உடைப்பு வழக்குகள், விழுப்புரம் மாவட்டத்தில் 5 வழக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு வழக்கு மொத்தம் 21 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் அரசு பேருந்து மீது கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில்தான் இந்த விவகாரத்தில் பாமகவின் அடுத்த பகீர் திட்டத்தையும் மோப்பம் பிடித்துள்ளது உளவுத்துறை. அதாவது, தினந்தோறும் ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்லும் பேருந்து கண்ணாடிகளை உடைப்பது, அதுவும் ஒரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உடைக்காமல் பரவலாக அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் பஸ்களை உடைக்கவேண்டும் என்பதுதான் அந்த ரகசியத் திட்டம் என்று ஸ்மெல் செய்திருக்கிறார்கள் உளவுத்துறையினர்.

உதாரணமாகக் கடலூர் மாவட்டத்தில் முதுநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, பண்ருட்டி, புதுப்பேட்டை, நெல்லிக்குப்படும், முத்தாண்டிக்குப்பம், குள்ளஞ்சாவடி, நடுவீரப்பட்டு போன்ற காவல் நிலையங்களின் பகுதியில் பரவலாக உடைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தவுடனே குற்றவாளிகளை ஃபிக்ஸ் பண்ணுங்கள், உடனே கைதுசெய்யுங்கள் என்று அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதால், காவல் நிலைய அதிகாரிகள், பாமக முக்கிய நிர்வாகிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி, ‘நீங்களே யாராவது இரண்டு பேரைக் கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கி கைதுசெய்வதால், உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள். இதனால் பஸ் உடைப்பு பிரச்சனையும் தொடர்கிறது என்கிறார்கள் காவல் துறையினரே.

பாமக மூத்த முக்கிய நிர்வாகிகளிடம், “அரசு பேருந்துகளை குறி வைத்து உடைப்பது ஏன்? பேருந்தை ஓட்டுபவர் நடத்துநர் மற்றும் பயணம் செய்பவர்கள் வன்னியர் சமூகத்தினர்கள் இருக்கமாட்டார்களா? அவர்களுக்கும்தானே பாதிப்புகள் ஏற்படும்?” என்று கேட்டோம்.

பாமக பொறுப்பாளர்களோ, “நாங்கள் யாரும் பேருந்துகளை உடைக்கவில்லை. திமுகவில் உள்ள வன்னியர்கள்தான் பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு எங்கள் மீது பழியைச் சுமத்துகிறார்கள்”என்கிறார்கள்.

தொடர்ந்து பேருந்துகளைத் தாக்கிவருவதைப் பற்றி அரசு பேருந்து ஊழியர்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் நம்மிடம், “ அரசு பேருந்துகளை உடைப்பது பின் தங்கிய மனப்பான்மை உள்ளவர்கள் செய்வது. அரசு சொத்து மக்கள் சொத்து. பேருந்துகள் உடைக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். கிராமப்புறங்களில் செல்லும் பேருந்துகளை உடைப்பதால் அந்த லைனில் போகும் பேருந்து துண்டிக்கப்படும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தானே. வசதி உள்ளவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குடும்பத்துடன் குளு குளு ஏசி காரில் சென்றுவிடுவார்கள். கூலி வேலை செய்யும் மக்கள் பேருந்துகள் இல்லாமல் நடைப்பயணமாகத்தான் செல்வார்கள். பஸ் உடைப்பு என்பது காலம் காலமாக நடந்துவருகிறது. அந்தந்த கட்சிகளின் தலைமை பேருந்துகளை உடைப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தவேண்டும், இல்லை என்றால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” என்றார்.

காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டோம். “ தமிழக அரசும் காவல்துறையும் மௌனம் காத்து வருவதாக நினைக்க வேண்டாம். பப்ளிக் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவேண்டும். போலீஸும் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வன்னியர் சங்கத்தின் பிரமுகர்கள், பாமக பிரமுகர்கள், அதில் முக்கிய புள்ளிகளைத் தேர்வு செய்த பட்டியலை எடுத்து கையில் வைத்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் பொறுக்கச் சொல்லியுள்ளார் முதல்வர். மீண்டும் தொடர்ந்தால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். எந்த சமூகத்திற்காகப் போராடுகிறார்களோ அதே சமுதாயத்தில் நல்ல படித்த பட்டதாரிகள் அரசு மற்றும் தனியார் வேலைக்கு போதாத அளவுக்கு வழக்கு பதிவுசெய்ய வைக்கப் போகிறார்கள். இது நவீனக் காலம், சாதா காலில் பேசுவது, வாட்ஸ் அப் காலில் பேசுவது, மெசெஜ் மூலம் திட்டமிடுவது அனைத்தையும் கண்காணித்து வருகிறது காவல்துறை” என்றனர்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: