வெள்ளி, 12 நவம்பர், 2021

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மோடி, அமித் ஷா புது அசைன்மென்ட்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மோடி, அமித் ஷா புது அசைன்மென்ட்!
மின்னம்பலம் : ஆளுநர்கள் மூலமாக அந்தந்த மாநில அரசு நிர்வாகங்களில் பாஜகவின் மோடி அரசு தலையிடுவதாக ஏற்கனவே பல மாநிலங்களில் அரசியல் சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று (நவம்பர் 11) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பேசிய பேச்சுகள் ஆளுநர்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களை அதிகாரபூர்வமாக பிறப்பிப்பதாக அமைந்திருக்கின்றன.
நாட்டின் 51ஆவது ஆளுநர்கள் மாநாட்டை நேற்று கூட்டினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இதில் பேசிய குடியரசுத் தலைவர், “ஆளுநர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டு, மற்ற மாநிலங்களின் ராஜ்பவன்களுக்குச் செல்வதற்கு நேரம் செலவழிக்க வேண்டும்.    மற்ற மாநில ஆளுநர் அலுவலகங்களின் சிறந்த நடைமுறைகள் அவர்களிடையே பகிரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். ஆளுநர்கள் விடுப்பு எடுத்து தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்வதை அடிக்கடி பார்க்க முடிகிறது. குடும்பத்தின் பொறுப்புகளை நிறைவேற்றுவது அவசியம்தான். ஆனால், முடிந்தவரை தமது சொந்த மாநிலத்துக்குச் செல்வதை ஆளுநர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, பிற மாநில ராஜ்பவன்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்வையிட நேரம் ஒதுக்கினால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேசிய இலக்குகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஆளுநர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கின்றன. மாநில அரசுகளுக்கு நண்பர், தத்துவஞானி மற்றும் வழிகாட்டி என்ற பாத்திரத்தை ஆளுநர்கள் வகிக்க வேண்டும்” என்று தனது உரையில் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், “மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவதிலும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்க மக்களைத் திரட்டுவதிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் அரசமைப்பு அதிகாரியாகச் செயல்படுவதோடு, ஒரு மூத்த அரசியல் தலைவரின் தார்மீக உரிமையுடன் செயல்பட வேண்டும்” என்று ஆளுநர்களை வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், “ஆளுநர்கள் தங்களது மாநிலத்தின் தொலைதூர கிராமங்கள் வரை சென்று உரையாடி மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் அல்லது கடலோர மாநிலங்களின் ஆளுநர்கள், எல்லையோர அல்லது கடற்கரையோர கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். மேலும், ஆளுநர்கள் தங்கள் மாநிலங்களில் பணிபுரியும் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து உரையாட வேண்டும்.

தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் ஆளுநரின் அமைப்பு முக்கியமானது. நீங்கள் உங்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்தபின், எனது ‘மன் கி பாத்’ உரைக்காக மாநிலத்தில் உள்ள அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செல்லும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். பிரதமர் குறிப்பிட்ட கடலோர மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெறுகிறது. எனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கான அறிவுரையாகவும் புதிய அசைன்மென்ட் ஆகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இம்மாநாட்டில் பேசிய அமித் ஷாவும் ஆளுநர்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளார். “கால நிலை மாற்றம் தொடர்பாக உச்சி மாநாட்டை இந்தியா வழி நடத்தியுள்ளது. 2030 மற்றும் 2070-க்கு இடையில் இந்த இலக்குகளை அடைய, நமது அடுத்த தலைமுறையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். பள்ளி, கல்லூரிகளிலும், பொதுமக்களிடமும் இதுபற்றி பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஆளுநர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஆளுநர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும். இன்றும் சுமார் 70% பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. நாட்டின் 80%க்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ளனர். நீங்கள் இந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள். எனவே களத்தில் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உங்களின் பங்கு மிகவும் முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஆலோசனைகளையும் நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டார்.

இந்த ஆளுநர்களின் மாநாட்டுக்குப் பிறகு, மோடி, அமித் ஷாவின் அசைன்மென்ட்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தின் கடலோரக் கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம். புதிய கல்விக்கொள்கை தொடர்பான பணிகளையும் முடுக்கிவிடலாம். இதனால் அரசியல் ரீதியான பரபரப்புகளும் ஏற்படும்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: