மின்னம்பலம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வலது கரமும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான பில்லா ஜெகன் நேற்று (நவம்பர் 6) கைது செய்யப்பட்ட நிலையில், அமைச்சருக்கு எதிரான புகார்கள் தலைமையிடம் அணிவகுத்துள்ளன.
தீபாவளி திருநாள் அன்று தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் பில்லா ஜெகனும் அவரது நண்பர்களும் அந்த வளாகத்திலேயே மது அருந்திக்கொண்டிருந்தனர்.
தற்காலிக ஊழியரான சதாம் சேட், ‘இங்கே மது அருந்தக் கூடாது’ என்று அவர்களைத் தடுக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறையைத் திறந்து விடுமாறு ஜெகன் வற்புறுத்தினார்.
இதற்கு ஊழியர் சதாம் மறுக்க அவரை சரமாரியாக ஜெகனும் அவருடன் வந்தவர்களும் தாக்கியுள்ளனர். இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சதாம் சேட். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மின்னம்பலத்தில் விரிவாக செய்திப் பதிவு செய்திருந்தோம்.
நேற்றைய முரசொலியில் நீக்கப்பட்ட அறிவிப்பு வெளிவந்த நிலையில் நேற்று பிற்பகல் அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகி இருக்கிறார். இதுகுறித்து தூத்துக்குடி திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஏற்கனவே பில்லா ஜெகன் மீது இரு கொலை வழக்குகள் உள்ளன. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த அவர் ஏதோ கைது செய்யப்பட்டது மாதிரி செய்திகள் வெளியாகின்றன. சுற்றுலா மாளிகையில் நடந்துகொண்ட விதம் பற்றி அன்று இரவே அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமைக்கும் தகவல் தெரிந்து ஜெகனை கட்சியில் இருந்து நீக்க உத்தரவிட்டார் ஸ்டாலின். இதையடுத்து நவம்பர் 6ஆம் தேதி முரசொலியில் நீக்க அறிவிப்பு வெளியானது.
ஜெகனை கட்சியில் இருந்து நீக்கப் போகிறார்கள் என்று அறிந்ததுமே அவரை கைது செய்வதை தடுப்பதற்காக சென்னை சென்றார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். முதல்வர் ஸ்டாலினுக்கு நீண்ட நாள் நண்பரான ராஜா சங்கர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் நெருக்கமானவர். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர் மூலமாகத்தான் தனக்கு ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை அனிதா ராதாகிருஷ்ணன் தீர்த்துக் கொண்டார் என்று அறிவாலத்திலேயே பேச்சு உண்டு. இந்த நிலையில் தொடர்ந்து தனது ஆதரவாளர்களால் சட்டம்-ஒழுங்கு சர்ச்சையில் சிக்கி வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை சென்று ராஜா சங்கரிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் இது குறித்து அமைச்சருக்கு உறுதிகள் ஏதும் அளிக்கவில்லை. உடனடியாக தூத்துக்குடி திரும்பினார் அமைச்சர்.
இந்த நிலையில் தலை மறைவாக இருந்த பில்லா ஜெகன் நேற்று பகல் அமைச்சரை வீட்டுக்கு சென்று சந்தித்தார். அப்போது அவரிடம் அமைச்சர், ‘உன் மேல தலைமை கோவமா இருக்காங்க. உன்னோட செயல்பாடு காரணமாக என் மேலேயும் கோபமாக இருக்காங்க. இப்போ எதுவும் பண்ண முடியாது. அதனால் நீ இப்போவே போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஆஜராகிடு. உன்னைத் தேடி வந்து கைது செய்த மாதிரி இருக்க வேணாம். நீயா போய் ஆஜராகிடு. அதான் இப்போதைக்கு நல்லது. நான் பாத்துக்கறேன்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
இதன்படியே தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்துக்கு நேற்று பிற்பகல் சென்று ஆஜராகி இருக்கிறார் பில்லா ஜெகன். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட நிலையில், தனக்கு இதயம் தொடர்பான பிரச்சினை இருப்பதால் மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று சொல்லி நேற்று இரவு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பில்லா ஜெகன்.
இந்த சூழலில் நேற்று தனது ஆதரவாளர்களிடம், ‘யாரும் எந்த சிக்கலும் ஏற்படுத்த வேண்டாம். ஒழுங்கா இருங்க’ என்று கடுமையான தொனியில் அமைச்சர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே பெரியசாமியால் நீக்கப்பட்ட பில்லா ஜெகனை, இரு கொலை வழக்குகள் இருந்தபோதே தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவியோடு திமுகவில் சேர்த்தவர் அனிதா. அதனால் இப்போது இந்த வழக்கெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ஜெகன் மீதான புகாரை வாபஸ் வாங்குவதற்கு அனிதா தரப்பினர் தீவிரமான முயற்சியில் இருக்கிறார்கள். ஆனால் திமுகவிலேயே சிலர் ஜெகன் மீதான சட்ட நடவடிக்கையைத் தீவிரமாக்குவதற்கு
தலைமையிடம் பேசி வருகிறார்கள்.
தொடர்ந்து அனிதா மீது சர்ச்சைப் புகார்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுகொண்டிருக்கின்றன. ராஜா சங்கரே காத்து நின்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டே” என்கிறார்கள் தூத்துக்குடி திமுக பிரமுகர்கள்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக