BBC - KRISHANTHAN : இலங்கையில் மழையுடனான சீரற்ற வானிலையினால், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு, வெள்ளப் பெருக்கு என பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளார்.
17 மாவட்டங்களைச் சேர்ந்த 17,481 குடும்பங்களின் 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம்
10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
அத்துடன், இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கண்டி, களுத்துறை, காலி, ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு காரணமாக கடந்த இரு தினங்களில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அறிவிப்பை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கேகாலை - ரம்புக்கன்ன பகுதியில் வீடொன்றின் மீது நேற்றைய தினம் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருந்ததுடன், ஒருவர் காயமடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்ற பின்னணியில், அந்த பகுதி மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் பிறப்பித்துள்ளனர்.
எனினும், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்தை தவிர, ஏனைய குடும்பங்கள் அந்த பிரதேசத்தை விட்டு வெளியேறியதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்தார்.
தமது அதிகாரிகள் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும், அந்த குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறவில்லை என அவர் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில், மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற மறுப்பு தெரிவிப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவிக்கின்றார்.
இலங்கை மழைக்கு 22 பேர் பலி: முப்படைகளும் தயார் நிலையில்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவிப்பார்களாயின், அவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, இவ்வாறான சந்தர்ப்பத்தில் அபாயகரமான பகுதிகளுக்கு சுற்றுலா பயணம் செல்வோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறுகின்றார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு என்ற விடயத்தில், மக்கள் விரும்பியோ விரும்பாமலோ பலவந்தமாக சில விடயங்களை செய்ய வேண்டி ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
'வெளியில கூட வர முடியவில்லை'
அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி - கரம்பன் நாயக்கர்சேனையைச் சேர்ந்த பிரியா பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.
தமது பிரதேசம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான குடும்பங்கள் செய்வதறியாதுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
''இரவு 11 மணியளவில் வெள்ளம் வந்தது. சிலர் மெயின் ரோட்டிற்கு சென்றார்கள். சிலரால் வெளியில கூட வர முடியவில்லை. வெளியில் வர முடியாத அளவுக்கு வெள்ளம் வந்தது. சாப்பாடு இல்லாம ரோட்டிலயே இருந்தோம். வாகனங்களை எடுத்துக்கொண்டு வேறு இடங்களுக்கு செல்ல நினைத்தோம். ஆனால், வாகனங்களுக்குள் தண்ணீர் சென்றதால, வாகனங்கள் ஸ்டார்ட் ஆகயில்ல. இப்ப மழை குறைஞ்சிருக்கு. ஒரு சிலர் வீட்டுல இன்னும் தண்ணீர் நிற்கின்றது. இன்றையக்கு மழை பெய்தால், திரும்பவும் வெள்ளம் வந்து விடும்." என பிரியா கூறுகின்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றைய தினம் 150 மில்லி மீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
அத்துடன், மேல் மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் தினங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவிக்கின்றார்.
விமானப்படைக்கு சொந்தமான ஹொலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கடற்படைக்கு சொந்தமான படகுகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாவட்டங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவிக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக